பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்று சொல்லும் கிறுக்குத்தனமான கூலிகளுக்காக நேரத்தை ஒதுக்காதீர்கள்; சமூக வலை தளத்தைக்கூட நல்ல வகையிலே பயன்படுத்துங்கள்!
பெரியார் என்ற இமயமலை, எந்தப் புயலுக்கும் அசையாது;
காரணம், காலத்தை வென்ற தத்துவம் அது!
அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த
அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்!
புத்தகக் காட்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
பெரியார் என்ற இமயமலை, எந்தப் புயலுக்கும் அசையாது;
காரணம், காலத்தை வென்ற தத்துவம் அது!
அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த
அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்!
புத்தகக் காட்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
சென்னை, ஜன.17 ‘‘பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்று சொல்லும் கிறுக்குத்தனமான கூலிகளுக்காக நேரத்தை ஒதுக்காதீர்கள்; சமூக வலை தளத்தைக்கூட நல்ல வகையிலே பயன்படுத்துங்கள். பெரியார் என்ற இமயமலை, எந்தப் புயலுக்கும் அசையாது. காரணம், காலத்தை வென்ற தத்துவம் அது. அந்தத் தத்து வங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
- பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்று சொல்லும் கிறுக்குத்தனமான கூலிகளுக்காக நேரத்தை ஒதுக்காதீர்கள்; சமூக வலை தளத்தைக்கூட நல்ல வகையிலே பயன்படுத்துங்கள்! பெரியார் என்ற இமயமலை, எந்தப் புயலுக்கும் அசையாது; காரணம், காலத்தை வென்ற தத்துவம் அது! அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்! புத்தகக் காட்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
- மூன்று புத்தகங்கள் வெளியீடு!
- எந்தக் கட்டுப்பாட்டையும் நாங்கள் மீறுவதில்லை!
- மூன்று புத்தகங்களும் வெறும் காகிதங்கள் அல்ல, அறிவாயுதங்கள்!
- பெரியார் நூலக வாசகர் வட்டத்தில்…
- இது அரசியல் அல்ல; வரலாற்று உண்மை!
- இந்த நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் கிடையாது!
- புத்தகங்களை வாசிப்பது என்பதைத் தாண்டி, புத்தகங்களைச் சுவாசிக்கிறார்கள்!
- ‘‘நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!’’
- பெரியார் புத்தகங்களுக்கு அவ்வளவு பெரிய சிறப்பு உண்டு!
- பெரியாருடைய சிந்தனைகள் தான் இன்றைய காலத்திற்குப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வு!
- காலத்தை வென்ற தத்துவம்!
14.1.2026 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் புத்தகக் காட்சியில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘‘சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!’’, டாக்டர் சிவபாலன் எழுதிய ‘‘மனமின்றி அமையாது உலகு’’, ‘‘அமெரிக்காவிலும் ஜாதியா?’’ (ஈகுவாலிட்டி லேப் நிறுவனத்தின் ஆய்வறிக்கை) ஆகிய புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரை வருமாறு:
மூன்று புத்தகங்கள் வெளியீடு!
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்த மூன்று புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சி – இந்த சென்னை புத்தகக் காட்சியில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிற மூன்று புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கழகத்தி னுடைய துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய வழக்குரைஞர் செயலவைத் தலைவர் வீரமர்த்தினி அவர்களே மற்றும் முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய முன்னிலையாளர்களே, புத்தகங்களை வெளியிட்டு சிறப்பாக நல்நூல் அறிமுக உரையை நிகழ்த்தி இருக்கின்ற நம்முடைய அறிஞர் ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் அவர்களே, கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களே, கவிஞர் சல்மா எம்.பி., அவர்களே,
எந்தக் கட்டுப்பாட்டையும் நாங்கள் மீறுவதில்லை!
சிறப்பாக இருக்கக்கூடிய இந்த புத்தகம், ‘மனமின்றி அமையாது உலகு’’ என்று சொல்லக்கூடிய சிறப்பான தலைப்போடு இருப்பதை இங்கே டாக்டர் சிவபாலன் அவர்கள் விளக்கிச் சொன்னார்கள். இவ்வளவு அற்புத மான ஓர் நிகழ்ச்சிக்கு நேரத்தின் நெருக்கடியில் நாம் சிக்கி இருக்கிறோம். இன்னும் ஒரு 10 நிமிடங்கள் வரைக்கும் தான் அனுமதி கேட்டிருக்கின்றோம். உங்களுக்குத் தெரியும் கட்டுப்பாடு மிகுந்த இயக்கம் திராவிடர் கழகம். எந்தக் கட்டுப்பாட்டையும் நாங்கள் மீறுவதில்லை.
மூன்று புத்தகங்களும் வெறும் காகிதங்கள் அல்ல, அறிவாயுதங்கள்!
அந்த வகையிலே, இந்த மூன்று புத்தகங்களும் அறிவாயுதங்கள்; வெறும் காகிதங்கள் அல்ல; அதை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் ஏராளமாக ஆய்வுகளைத் தயாரித்திருக்கிறார்கள். பேசக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள்; அய்யா கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்கள் ஆனாலும், அதேபோல இதற்கு விளக்கம் சொல்லக்கூடிய ஏற்புரையை ஆற்றிய நம்முடைய டாக்டர் சிவபாலன் அவர்கள் ஆனாலும், அதேபோல மிகப்பெரிய அளவிற்கு உலகப் புகழ் பெற்ற கவிஞராக இருக்கக்கூடிய நம்முடைய கவிஞர் சல்மா அவர்கள் ஆனாலும், எந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஆய்வரங்கமாக. ஆய்வுச் சுரங்கமாக அதை ஆக்கக்கூடிய ஆற்றல் படைத்த அய்யா சுபகுண ராஜன் அவர்களானாலும் புத்தகங்களைப் படித்தறிந்த நல்ல அறிவாளர்கள்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில்…
இந்தப் புத்தகத்தை பெற்றிருக்கும் எதிரே இருக்கக்கூடிய ஆற்றல் மிகுந்த நண்பர்களைப் பார்த்தீர்க ளேயானால், அறிவுபூர்வமானவர்களைக் கொண்டது இந்த அரங்கம். ஆகவே, இதில் நிறைய பேசுவதற்கு ஒன்றுமில்லை. பெரியார் நூலக வாசகர் வட்டத்தில், ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும், தனித்தனியே ஒவ்வொரு வாரமும் ஆய்வு உரையை நிகழ்த்துவார்கள். எனவே வந்திருக்கிற கேட்பாளர்களாகிய நீங்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான் அந்த ஏற்பாடுகளைச் செய்கின்றோம்.
இது அரசியல் அல்ல; வரலாற்று உண்மை!
அடுத்து நண்பர்களே, ஒவ்வொரு முறையும் இவ்வ ளவு சிறப்பாக சென்னை புத்தகக் காட்சி – ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு பெரிய அளவில் நடக்கிறது. நாளுக்கு நாள் அது வளர்ந்திருக்கிறது. காரணம், மற்ற ஆட்சிகளை விட, இன்றைக்கு இருக்கிற ‘திராவிட மாடல்’ ஆட்சி இதற்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்து, முழு வேகத்தைத் தந்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல, இந்த ஆட்சி வந்த உடனே, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக புத்தகக் காட்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதுவரையில் அறிவைத் தடுப்பதற்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களே தவிர, அறிவைப் பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது ஒரே ஆட்சி, இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியில்தான். இது அரசியல் அல்ல; வரலாற்று உண்மை. அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் என்ன சிறப்பு என்றால், ஒரு நூறு ஆண்டு களுக்கு முன்னால், இதுபோன்ற புத்தகக் காட்சிகளை நம்முடைய நாட்டில் நடத்தி இருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் போகும்போது சிந்தித்து விடை காணுங்கள். நடத்தி இருக்க முடியுமா? என்றால், முடியாது. ஏன்? படித்தவர்கள் இல்லை. புத்தகம் எழுதுவதற்கு ஒரு பக்கம் ஆள் இல்லை. எந்த நாட்டில்? வள்ளுவர் பிறந்த நாட்டில்.
அப்போது அறிவாளிகள் இல்லையா, என்றால், இருந்தார்கள். புலவர்கள் இருந்தார்கள்; அறிவாளிகள் இருந்தார்கள்; ஆனால், இங்கே வந்த ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு, ‘‘படிக்காதே’’ என்று தடுத்தது. உலகத்தி லேயே ‘‘படிக்காதேன்னு’’ சொல்வதற்கு ஒரு மதம், ஒரு தத்துவம், தடுப்பு, அதைப் பாதுகாக்கின்ற ஆட்சிகள் இருந்தன. அதனால்தான், ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுக்க, அறிவாசான் தந்தை பெரியார் போன்ற வர்கள், திராவிட இயக்கம் அதனால்தான் தோன்றியது, அதனால்தான் பிறந்தது. எனவே, ‘‘படிக்காதே’’ என்று சொன்னவர்களைப் ‘‘படி, படி, படி, படி’’ என்று சொல்லி, படிப்பதற்கு முதலில் சிந்தனையைத் தூண்டியது.
இந்த நாட்டைத் தவிர,
வேறு எந்த நாட்டிலும் கிடையாது!
வேறு எந்த நாட்டிலும் கிடையாது!
அதற்கு அடுத்த கட்டமாகத்தான் படிப்பதற்காகப் பள்ளிகள் உருவானது. பள்ளி என்கிற சொல் இருக்கிறது பாருங்கள், அது புத்த சமண மதத்தில் இருக்கக்கூடிய சொல். பள்ளிகள் என்று அதற்குப் பெயர். இன்னுங்கேட்டால், திண்ணைகள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தன. அப்படி இருந்த நாட்டில், ‘‘படிக்காதே’’ என்று சொன்னார்கள். காரணம், பண்பாட்டுப் படையெடுப்பு. அதற்குப் பிறகு அம்பேத்கர் அவர்கள் அழகாக ஒன்றைச் சொன்னார், ‘‘படிக்காதேன்னு தடுப்பதுகூட பெரிய விஷயம் இல்லை; மீறி படித்தால், நாக்கை அறுப்போம்; காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம்’’ என்று சொன்ன ஒரு மதம், ஓர் அமைப்பு இந்த நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அதை எதிர்த்து அன்று தொடங்கிய போராட்டம், இன்றுவரையில் நடக்கின்ற விளைவினால், 69 சதவீதம். குலத்தொழில் வற்புறுத்தலைத் தாண்டி, மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்தியதினால் படிக்கப் பள்ளிகள் உருவாயிற்று. ஏற்கெனவே இருந்த பள்ளிகளை மூடிய நிலையில், அவற்றைத் திறக்கச் சொல்லி ஆட்சி வந்தது, காமராஜர் போன்றவர்கள் முதலமைச்சராக இருந்த ஆட்சி. இது அரசியல் அல்ல நண்பர்களே, சமூகக் கல்வி புரட்சி யினுடைய வரலாறு.
புத்தகங்களை வாசிப்பது என்பதைத் தாண்டி, புத்தகங்களைச் சுவாசிக்கிறார்கள்!
அதனுடைய விளைவுதான் இன்றைக்குப் படிப்படி யாக வளர்ந்து, இந்தப் புத்தகக் காட்சி; இத்தனைப் புத்தகங்களை வெளியிடுகிறோம். புத்தகங்களைப் படிக்கிறார்கள், புத்தகங்களை வாசிப்பது என்ப தைத் தாண்டி, புத்தகங்களைச் சுவாசிப்பது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்தி ருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக புதிதாகப் பள்ளிக்கூடங்கள்; அதற்கு மேல் கல்லூரிகள்; அதற்குமேல் பல்கலைக்கழகங்கள்; இவை அத்தனையும் உருவாகி, அவற்றைப் பாதுகாக்கக்கூடிய அளவிற்கு, ‘‘படி, படி, படி’’ என்று சொல்லக்கூடிய நிலை வந்தது. பெண்கள் படிக்கக்கூடாது, என்றெல்லாம் இருந்ததைத் தாண்டி, பெண்களும் படிக்கிறார்கள். இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்குப் பெண்கள் படித்திருக்கிறார்கள். இது சாதாரணமானது அல்ல நண்பர்களே! ஒரு காலத்திலே பெண்கள் என்றால், அவர்கள் சமையலறைப் பதுமைகளாக இருந்து, கைகள் கரண்டிகளைப் பிடித்த கைகளாக இருந்தன. அந்நிலை இன்றைக்கு மாறி, நம்முடைய பெண்கள் பேனாக்களைப் பிடிப்பதற்கும், துப்பாக்கிகளை, காவல் துறையிலும், இராணுவத் துறையிலும் பெண்கள் சேர்ந்து இருக்கின்ற நிலையை இந்த இயக்கம் உருவாக்கிற்று; பெரியார் செய்தார். அதை எப்படிச் செய்தார்கள் என்பதுதான் இந்த இயக்க ஏடுகளுடைய தத்துவம். இந்தக் கருத்தைதான் உள்ளடக்கியது, இந்த நூல்.
‘‘நாடெல்லாம் பாய்ந்தது
கல்வி நீரோடை!’’
கல்வி நீரோடை!’’
இதற்கெல்லாம் காரணம், தந்தை பெரியார் என்ற அந்த மாமனிதருடைய உழைப்பும், அதற்கு முன்னால் நீதிக்கட்சி 110 ஆண்டுகள்; அதற்குப் பிறகு, அதனுடைய விளைவுதான், பள்ளிக்கூடங்கள். ‘‘நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதுபோன்று, அந்த நீரோடையில் முதலைகளுக்கு இடமில்லாமல், அந்த முதலைகளை வெளியேற்றி, நீரோடையால், மக்கள் மிகப்பெரிய அளவுக்கு பயன்பெறக்கூடிய அளவிற்கு ஏற்பாடு செய்தார்கள். அதனுடைய விளைவுதான் இன்றைக்கு எங்கு பார்த்தாலும், இது போன்ற புத்தகக் காட்சிகளும். புத்தக வெளியீடுகளும் ஏராளம் நடைபெறுகின்றன. புத்தகங்கள் அறிவுக்கருவிகள்; அறிவைத் தூண்டக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்போது கூட சில நண்பர்கள், பெரியாருடைய பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று இங்கே சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் தேவைப்படுகின்ற மிக முக்கியமான புத்தகம் எது என்று சொன்னால். இந்த புத்தகம்தான். ஏனென்றால், அவர்களையெல்லாம் சிவபாலன் அவர்களிடத்தில் அனுப்ப வேண்டியதுதான். ‘‘பைத்தியங்களுக்கு வேண்டியது வைத்தியம்.’’ வைத்தியத்துக்கும் புத்தகம் போட்டிருக்கிறோம். அதுதான் மிக முக்கியம். எனவேதான் இந்த புத்தகத்தி னுடைய கருத்துகள் மிகச் சிறப்பானதாகும்.
அது மட்டுமல்ல, சிலர் கொச்சைப்படுத்துவதைக் கண்டு நாம் உடனே ஆத்திரப்பட வேண்டிய அவசி யமே இல்லை. ஒருவர், இமயமலையைப் பார்த்து, அது இமயமலை இல்லீங்க; அது வெறும் சேறும், சகதியும்தான் என்று சொன்னால், சொன்னவரைத்தான் நாம் ஆய்வு செய்ய வேண்டுமே தவிர, இமயமலை இருக்கிறதா என்று ஆய்வு செய்வது நம்முடைய வேலை அல்ல.
பெரியார் புத்தகங்களுக்கு
அவ்வளவு பெரிய சிறப்பு உண்டு!
அவ்வளவு பெரிய சிறப்பு உண்டு!
ஆகவே, இமயத்தின் மீது மோதியவர்கள்; இம யத்தின் மீது எச்சில் துப்பியவர்கள்; இமயத்தின் மீது அசிங்கப்படுத்தியவர்கள் எல்லாம், எவ்வளவோ காலத்திற்கு முன்பும் இருந்தார்கள்; அவர்கள் இன்று இல்லை; ஆனால், இன்றும் இமயம் இருக்கிறது. அதுதான் இதனுடைய தத்துவம். அது போலத்தான் இந்த புத்தகத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதில்கள் இருக்கின்றன. சமூக நீதி என்றால் என்ன? இது உலகமெங்கும் பரவி கொண்டிருக்கின்றது. பெரியார் புத்தகங்களுக்கு அவ்வளவு பெரிய சிறப்பு உண்டு.
ஒரு சின்ன உதாரணத்தை உங்களுக்குச் சொல்கி றேன், இன்று காலையிலே ஒரு தகவலை நண்பர்கள் சொன்னார்கள்.
பெரியாரை யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது; பெரியாரை இளைஞர் உலகத்தில் இருந்து யாரும் அகற்றி விட முடியாது. இன்றைக்கு ‘‘உலகம் பெரியார் மயம்; பெரியார் உலக மயம்’’ என்று சொல்லக்கூடிய அளவில் இருப்பதற்கு ஆதாரம், இதோ பாருங்கள், இதே இடத்தில சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு புத்தகம் வெளியிட்டோம். அது என்ன புத்தகம் என்றால், நம்முடைய எமரால்ட் பதிப்பகம் வெளியிட்ட, நம்முடைய பாபு ஜெயகுமார் அவர்கள் பெரிய ஜெர்னலிஸ்ட்; நம்முடைய விஜயசங்கர் அவர்கள் மாதிரி. அவர் தந்தை பெரியாருடைய வாழ்க்கைத் தத்து வங்களை விளக்கி, ‘ Periyar E.V.Ramasamy – A Man Ahead Of His Time’. காலத்துக்கு முன்னோடியான பெரியார் என்ற கருத்தை, முன்னால் வைத்துக் கொடுத்தார். அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்ட பிற்பாடு, இப்போது அய்ரிஷ் நாட்டில் இருக்கிற, அயர்லாண்டில் இருக்கக்கூடியவர்கள், ‘‘எங்கள் நாட்டில் நாங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறோம்’’ என்று, அவரிடம் கேட்டு, அடுத்து அது வரவிருக்கிறது. அதே புத்தகம், இப்போது கன்னட மொழியிலே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. கொரியா மொழியிலே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
‘‘பெரியார் உலகமயம்’’ என்று சொல்வது ஏதோ முழக்கம் அல்ல; அலங்காரப் பேச்சு அல்ல. அந்த அளவிற்குப் பல மொழிகளிலே வெளிவருகிறது, வெளிவர இருக்கிறது. ஜப்பானிய மொழியில் வெளியிட்டு, அந்தப் புத்தகத்தை, ஜப்பானுக்கு நம்மு டைய முதலமைச்சர் சென்றிருந்த போது அவருக்குக் கொடுத்தார்கள், அதுதான் வேடிக்கையானது.
பெரியாருடைய சிந்தனைகள் தான்
இன்றைய காலத்திற்குப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வு!
இன்றைய காலத்திற்குப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வு!
எனவே, முதலமைச்சரை, ஜப்பானில், பெரியார் வரவேற்றார். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நிலை. அதைவிட இன்னொரு செய்தி, புத்தகங்கள் என்பன ஓர் அறிவுச் சூறாவளியாக இன்றைக்கு இருக்கின்றன. அதுவும் தந்தை பெரியாருடைய சிந்தனைகள் தான் இன்றைய காலத்திற்குப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வு என்று கருதி, இன்றைக்கு முடிவு வந்திருக்கிறது.
இப்போது கூட நல்ல ஆய்வாளராக இருக்கக்கூடிய நண்பர் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாஜலபதி அவர்களின் ‘Periyar the Icon and Icon Class’ என்ற தலைப்பில் ஓர் அற்புதமான புத்தகம் வருகிறது. அது கவிதா முரளிதரன் அவர்களோடு உரையாடல் என்று ஆங்கிலத்திலே அந்தப் புத்தகம் வருகிறது. அப்புத்தகம் பல மொழிகளில் வெளிவர இருக்கிறது. அதுபோல ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வெளியிடக்கூடிய அளவிற்குப் பெரியார்பற்றிய புத்தகங்கள் வந்தன. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வெளியிடக்கூடிய புத்தகங்கள் வந்தன. அதுபோல இங்கே இருக்கக்கூடிய நம்முடைய அய்யா விஜயசங்கர் அவர்கள் மொழிபெயர்த்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்ட புத்தகங்கள் வந்து கொண்டி
ருக்கின்றன.
காலத்தை வென்ற தத்துவம்!
எனவேதான், தோழர்களுக்குச் சொல்லுகிறோம், தயவுசெய்து பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்ற இந்தக் கிறுக்குத்தனமான கூலிகளுக்காக நேரத்தை ஒதுக்காதீர்கள்; சமூக வலை தளத்தைக்கூட நல்ல வகையிலே பயன்படுத்துங்கள். பெரியார் என்ற அந்த இமயமலை இருக்கிறதே, அது எத்தனைப் புயலுக்கும் அசையாது. காரணம், காலத்தை வென்ற தத்துவம் அது. அந்தத் தத்துவங்களைத்தான் ‘‘படி, படி’’ என்று சொல்லி, அய்யா கட்டமைத்த அந்தப் ‘படி’யில் ஏறித்தான் நாம் உயர்ந்து கொண்டே இருக்கிறோம்!
வாழ்க, வளர்க!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
