சென்னை,ஜன.17- மாவட்ட நூலக அலுவலர் பதவிகளுக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் நேரடி நியமனம் மேற்கொள்ளப் படவுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின்கீழ் பகுதி நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், கிளை நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், மாவட்ட நூலகங்கள் என பல்வேறு நிலைகளில் 4,661 நூலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நூலகங்களில் பகுதி நேர நூலகர், ஊர்ப்புற நூலகர், கிளை நூலகர், நூலகர் (கிரேடு-3), நூலகர் (கிரேடு-2), நூலக ஆய்வாளர் அல்லது நூலகர் (கிரேடு-1), மாவட்ட நூலக அலுவலர் என வெவ்வேறு பதவிகளில் நூலகர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்ட நூலக அலுவலர் பதவியானது 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப்படும் மாவட்ட நூலக அலுவலர் பதவிக்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பும், நூலக அறிவியலில் முதுநிலை பட்டமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேரடி மாவட்ட நூலக அலுவலர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கல்விப்பணியின்கீழ் வரும் மாவட்ட நூலக அலுவலர் (நேரடி நியமனம்) பதவிக்கு நூலக அறிவியல் அல்லது நூலகம் மற்றும் தகவலியல் பாடத்தில் முதுகலை பட்டமும் அதோடு கூடுதலாக ஏதேனும் ஒரு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
விரைவில் நேரடி நியமனம்: மாவட்ட நூலக அலுவலர் நேரடி நியமனத்துக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்
பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி வாயிலாக விரைவில் மாவட்ட நூலக அலுவலர் பதவி நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நூலக அலுவலர் பதவி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வின் (நேர்காணல் உள்ள பதவிகள்) கீழ் வரும்.
2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தேர்வுக்கான (நேர்காணல் உடைய பதவிகள்) அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளி யிடப் பட்டு அதற்கான தேர்வு நவம்பரில் நடத்தப் படும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
எனவே, அந்த அறிவிக்கையில் மாவட்ட நூலக அலுவலர் பதவியும் இடம்பெறலாம்.
தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவட்ட நூலகர் பதவி நீண்ட காலமாக காலியாக இருந்து வருகிறது. அப்பதவிகளை கிரேடு-1 நூலகர்கள் மற்றும் நூலக ஆய்வாளர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
