ஒட்டன்சத்திரத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் சூளுரை!

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில்…
சாதனைகளை செய்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு!
தி.மு.க.வை மறுபடியும் கோட்டைக்கு அனுப்பிவிட்டு
நாங்கள் வெளியில் காவல் இருப்போம்!

ஒட்டன்சத்திரம், ஜன.13 இந்திய அரசியலமைப்புச் சட்டம் அம்பேத்கர் உருவாக்கியது. அதைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் மனுஸ்மிருதியை கொண்டு வந்து வைக்கத் துடிக்கிறார்கள் என்றும், அரசியலமைப்புச் சட்டப்படி பிரமாணம் எடுத்தவர்கள் ரகசியமாக அதை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்றும் ஒட்டன் சத்திரத்தில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஒன்றிய பா.ஜ.க.அரசை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –
இதுதான் பா.ஜ.க.ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி’’

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் நடைபெற்று வரும் தொடர் பொதுக்கூட்டங்கள் வரிசையில் ஒட்டன்சத்திரம் திராவிடர் கழகம் சார்பில், தாராபுரம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொல்லம்பட்டி பகுதியில் உள்ள அபூர்வா அரங்கில் நேற்று (12.01.2026)  மாலை 6 மணியளவில் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.திராவிடச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் தலைவர் மா.முருகன், செயலாளர் பொன்.அருண்குமார் ஆகி யோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வி.பன்னீர்செல்வம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.  அவைத் தலைவர் தி.மோகன், திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இளங்கோவன், தி.மு.க. நகரச் செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.ஆர்.பாலு, பெரியார் பெருந்தொண்டர்கள் வேடசந்தூர் மாரியப்பன்,  மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தி.மு.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்  அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். தொடர்ந்து பெரியார் உலகம் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

ஜாதிகளால் பிரிப்பது
ஆர்.எஸ்.எஸ்.

அவர் தமது உரையில், முதலில் உணவுத்துறை அமைச்சரை விளித்துப் பேசினார். அதாவது, ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.”  அத்தகைய துறையை தக்காரிடம் அளித்து திராவிட மாடல் முதலமைச்சர் சிறப்பித்திருக்கிறார். தொடர்ந்து, “நான் ஒட்டன்சத்திரத்திற்கு புதியவன் அல்ல. நானும் பார்த்தேன் இன்றைக்கு அன்றைக்கு இருந்த ஒட்டன்சத்திரத்தை காணவில்லை. புதிதாக இருக்கிறது” என்று அதற்கும் அமைச்சரைப் பாராட்டிவிட்டு, தன்னைப் பற்றியும் குறிப்பிட்டார். அதாவது, ‘‘தான் முதல் தலைமுறை பட்டதாரி என்றும், அன்றைக்கு தேர்வுக்கு கட்டுவதற்கே குடும்பத்தில் பணம் இல்லாமல் இருந்தது என்றும், இன்றைக்கு திராவிட மாடல் முதலமைச்சர் ஆட்சியில் கல்வி சிறந்தோங்கி இருக்கிறது” என்றும், ‘‘அத்தகைய பணிகளின் மூலம் இந்திய அளவில் அல்ல, உலக அளவில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது” என்றும் பாராட்டினார். தொடர்ந்து தலைப்பைச் சுட்டிக்காட்டி, “திராவிடம் என்ன செய்தது?” என்று கேட்டு, ‘‘ஜாதிகளால் பிரிந்து கிடந்த நம்மை ஒன்று சேர்த்தது திராவிடம். இதை ஒப்புக்கொள்ளாமல் நாம் ஜாதிகளாகப் பிரிந்துதான் இருக்க வேண்டும் என்று சொல்வது ஆர்.எஸ்.எஸ்.” என்றார்.

மனுஸ்மிருதியை கையோடு கொண்டுவந்தனர்!

தொடர்ந்து ஆரியர் வருகை பற்றி, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, “இந்து மதம் எங்கே போகிறது?” எனும் தலைப்பிலான புத்தகத்தை கையில் எடுத்து வைத்துக்கொண்டு பக்கங்களைப் புரட்டி, அடையாளமிட்டிருந்த பகுதியை படித்துக் காட்டினார். அதாவது, “அன்று ஆரியர்கள் சிந்துநதி, இமயமலை என மேடு பள்ளத்தாக்குகள் எல்லாம் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததையும், காடு, மலை இவைகளைத் தாண்டி பெண்களால் வரமுடியவில்லை என்று பெண்கள் கோரிக்கை விடுத்ததையும், ஆண்கள் அதைப் புறக்கணித்து விட்டு சென்றதையும் படித்துக் காட்டி விட்டு, “நன்றாக கவனியுங்கள்” என்று முன்னோட்டமாகச் சொல்லி, “ஆண்கள் பெண்களைத் தான் விட்டுவிட்டு வந்தார்களே தவிர, மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்” என்று படித்துக் காட்டினார். அந்த மனுஸ்மிருதி தான் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையாக இருக்கிறது என்பதையும் எடுத்துரைத்து, “சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்ம உபதேசம் பண்ணாதே, சண்டை என்று வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருந்தாலும் அவனுக்கே தண்டனை கொடு” போன்ற கொடூரமான சமூகச் சட்டங்களாக 100 ஆண்டுகள் முன்பு வரை இருந்ததை வாசித்துக் காட்டினார். மேலும், “இதைக் கொண்டு வரத்தான் ஆர்.எஸ்.எஸ். துடிக்கிறது. அதைத்தான் பா.ஜ.க. செய்து கொண்டு இருக்கின்றது” என்று விளக்கினார். தொடர்ந்து, “இப்படிப்பட்ட ஆபத்துகள் எல்லாம் வர இருக்கின்றன. ஆனாலும் அதிலிருந்து நம்மை காப்பாற்றும் விதமாக, நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருப்பேன் என்பதைத்தான் நமது முதலமைச்சர், “தமிழர்கள தலைகுனிய விட மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று பலத்த தட்டல்களுக்கிடையில் குறிப்பிட்டார்.

‘ஓட்டுத் திருடர்கள்’
–ஜாக்கிரதை!

‘திராவிட மாடல்’ அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுவிட்டு, ”இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில்…  சாதனைகளை செய்து வருகிறது திராவிட மாடல் அரசு. தி.மு.க.வை மறுபடியும் கோட்டைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் வெளியில் காவல் இருப்போம்” என்று உறுதியளித்தார். தொடர்ந்து, “இந்த ஆட்சி வெறும் காட்சி அல்ல, நம் இனத்தின் மீட்சி! பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பாதிரியாரைக் கட்டிப்பிடித்து வாழ்த்துகிறார். ஆனால், சங்பரிவார் கூட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி. இதுதான் இரட்டை நாக்கு இரட்டைப் போக்கு.” என்று பா.ஜ.க. மாடல் ஆட்சியை அம்பலப்படுத்தினார். இறுதியாக, “ஓட்டுத்திருடர்கள் வருகிறார்கள் ஜாக்கிரதை. ஆனாலும், தமிழ்நாட்டை அசைக்க முடியாது. மறு படியும் திராவிட மாடல் அரசுதான் வெற்றி பெறும். நீங்கள் உங்கள் வாக்குகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

கழகத் தலைவர் தோழர்களிடம் விடை பெற்றுக்கொண்டு திண்டுக்கல் நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.

திராவிடர் கழகம்

அரங்கம் நிறைந்தது!

நிகழ்ச்சி தொடங்கும் போது மக்கள் குறைவாகவே இருந்தனர். ஆனால், கழகத் தலைவர் பேசத் தொடங்கிய பிறகு கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை தந்து போடப்பட்டிருந்த நாற்காலிகள் நிறைந்து கூடுதல் நாற்காலிகளை போட வேண்டிய சூழல் உண்டானது. ஆசிரியர் பேசி முடிக்கும் வரை  அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஓட்டுநர் அருள்மணி ஒத்துழைப்பில், ரகுராமன் ஒருங்கிணைப்பில் இயக்கப் புத்தகங்களும் நல்ல வண்ணம் விற்பனை ஆனது. முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதும், கழகத் தலைவர் ஆசிரியர் பேசும் போதும், ’இந்திய அரசியலமைப்புச் சட்டம்’, ’அசல் மனுதர்மம்’, ’இந்து மதம் எங்கே போகிறது?’ போன்ற புத்தகங்களை கையில் எடுத்துக் காட்டியபடி, அதையே ஆதாரமாகக் கொண்டு பேசுவதால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு புத்தகங்களின் முக்கியத்துவம் புரிந்து, வாங்க முற்படுகிறார்கள் என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாகும். மொத்தத்தில் மழை காரணமாக திறந்தவெளி பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்து அபூர்வா அரங்கை தேர்வு செய்திருந்தாலும் அதுவும் வெற்றிகரமாக நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.பி.ஆனந்தன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *