ஜெயங்கொண்டம், ஜன.13- மாவட்டத் தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் சார்பில், ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஜூனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்காக முதல் உதவி (First Aid) குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நோக்கம், மாணவர்களுக்கு அவசர காலங்களில் உயிர்காக்கும் அடிப்படை முதல் உதவிகளை வழங்கும் அறிவையும் திறனையும் வளர்ப்ப தாகும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பானுமதி சிறீதர் மற்றும் பணி மருத்துவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, விபத்துகள், திடீர் உடல்நலக் கோளாறுகள், குருதிக்கசிவு, எலும்பு முறிவு, தீக்காயம், மயக்கம் போன்ற அவசர நிலைகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதல் உதவி முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், உயிரைக் காக்கும் அடிப்படை சிகிச்சை முறைகள் குறித்த செய்முறை விளக்கங்களையும் வழங்கினர்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கேள்விகளை எழுப்பி விளக்கங்களை பெற்றதை தொடர்ந்து, முதல் உதவி பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே பெரிதும் அதிகரித்தது. இவ்வகை பயிற்சிகள் மாணவர்களின் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் என்றும், அவசர காலங்களில் தன்னம்பிக் கையுடன் செயல்பட உதவும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். முதல் உதவி குறித்த இவ்விழிப் புணர்வு நிகழ்ச்சி மாணவர்களுக்கும் பள்ளி சமூகத் திற்கும் பயனளிக்கும் நிகழ்வாக அமைந்தது.
