நமது நூல்களுக்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். ஆசை வார்த்தைகள் கூறியோ, பொய் கூறியோ, ஏமாற்றியோ, மனிதத் தன்மைக்கு எதிராகவோ எந்தக் கருத்தையும் நாம் வெளியிடுவதில்லை; விற்பனை செய்வதுமில்லை! அறிவும், அறிவியல் சார்ந்தவை மட்டுமே நமது நூல்களில் காணக் கிடைக்கும்! எனவே இந்தச் சமூகத்தில் நமது நூல்களுக்கென்று தனித்தன்மை உண்டு. அந்த வகையில் மும்பை மாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து நூல்களும் விற்பனை ஆகிவிட்டன.
திசைகாட்டி! வழிகாட்டி!!
சனி, ஞாயிறு மாநாடு முடிந்து, திங்கட்கிழமை காலை 6 மணிக்கே அனைவரும் ஆயத்தமாய் இருந்தனர். காரணம் மும்பை பெரு நகரத்தைச் சுற்றிவர, குளிர்சாதனப் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 47 தோழர்கள் சென்ற அந்தப் பேருந்தில் ஓட்டுநர் திசைகாட்டியாகவும், பெரியார் பாலா வழிகாட்டியாகவும் இருந்தனர். ஓரிடத்தில் இறங்கி 47 தோழர்களும் உணவு உட்கொள்வது சிரமம் என்பதால் இட்லி, வடை 47 பார்சலும் அந்தப் பேருந்தில் ஏறின.

போக்குவரத்து நெரிசல் தொடங்குவதற்கு முன்பாகவே கேட்வே ஆஃப் இந்தியா (Gateway Of India) பகுதிக்குச் சென்றோம். இது அப்போலோ பந்தர் பகுதியில், 1924 இல், அரபிக் கடலோரம் கட்டப்பட்டது. டில்லியில் இருப்பது ‘இந்தியா கேட்’, இது ‘கேட்வே ஆஃப் இந்தியா’. இரண்டும் வெவ்வேறு நினைவுச் சின்னங்கள். பேருந்தை விட்டு இறங்கியதும் முதலில் சிற்றுண்டி பணி முடிந்தது. அதனைத் தொடர்ந்து படகில் பயணித்தோம். 47 பேருக்கும் ஒரு தனிப்படகு வாடகைக்கு எடுக்கப்பட்டது.
அயல்நாட்டு சீகல்ஸ் பறவைகள்!
சிறிது தூரம் கூட சென்றிருக்க மாட்டோம். நூற்றுக்கணக்கான புறாக்கள் எங்கள் படகை சுற்றி வளைத்தன. திடீரென்று பார்த்த போது அச்சமாகவும், பிறகு ரசனையாகவும் மாறியது. ஆனால் அவை புறாக்கள் இல்லை என்பது பிறகுதான் தெரிந்தது. குளிர் நேரங்களில் மட்டும் மும்பைக்கு வரும் “சீகல்ஸ்” பறவை என்று சொன்னார்கள். இவை சைபீரியன் நாட்டில் இருந்து வருகின்றன. ஆனால் என்ன கொடுமை என்றால், ஏதாவது படகைப் பார்த்தால் நூற்றுக்கணக்கான சீகல்ஸ் மறவைகள் வந்து உணவு கேட்கின்றன.
மலை மற்றும் அருவிப் பகுதிகளில் மனிதர்களிடம் உணவு கேட்டு குரங்குகள் அலையும். கொஞ்சம் கவனக் குறைவோடு இருந்தால், அதுவே ‘கவ்விக்’ கொண்டு போய்விடும். தனக்கான உணவை தானே சேகரித்து சாப்பிட்ட குரங்குகளின் இயல்புகள் மாறிப் போய்விட்டன. மரத்தில் ஏறியும், கிளைகளில் தாவியும் காய், கனிகள் சாப்பிட்ட குரங்குகள் இப்போது எண்ணெய் பலகாரமும், புரோட்டாவும் சாப்பிடுகின்றன. எதிர்காலத்தில் குரங்குகளுக்கு மரம் ஏறவும், கிளைகளில் தாவுவதுமே மறந்துவிடும் போல! அந்தளவு அது மனிதர்களிடம் உணவிற்காக ஏங்குகிறது. அதேபோலத்தான் இந்த சீகல்ஸ் பறவையையும் பார்த்தோம். படகில் இருப்பவர்கள் கையில் சிப்ஸ் வைத்திருக்கிறார்கள். அந்தப் பறவை கையில் இருந்து எடுத்துச் சாப்பிடுகிறது.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
கடல், படகு, பறவை மூன்றையும் ஒன்றாய் பார்த்ததும், நமது மகளிரணி தோழர்கள் பாடல்கள் பாடத் தொடங்கிவிட்டனர். 45 நிமிடங்கள் நீடித்த இந்தப் பயணம் காலை வேளையைக் கனிவாய் மாற்றியது! பிறகு கேட்வே ஆஃப் இந்தியா மற்றும் கட்டடக் கலைக்குப் புகழ்பெற்ற தாஜ்மகால் பேலஸ் ஹோட்டல் ஆகியவற்றின் முன்பாகத் தோழர்கள் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் மும்பையின் அடையாளங்களில் ஒன்றான “ராணி பூங்கா” பார்க்கச் சென்றோம். பல்வேறு விலங்குகள், பறவைகளை வைத்துப் பராமரித்து வருகிறார்கள்.
அண்டார்டிகா பனிப் பிரதேசங்களில் வாழும் பென்குயின் பறவைகளை இங்கே வளர்க்கிறார்கள். அதற்கேற்ற பனிச் சூழல்களை உருவாக்கி வைத்திருக் கிறார்கள். இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட முதல் பென்குயின் 2016 ஆம் ஆண்டு இறந்த போது, மும்பையில் அது பெரும் பேசுபொருள் ஆனது.
தொடர்ந்து மும்பையின் பழம்பெரும் “க்ராஃபோர்டு” சந்தைக்குச் சென்றோம். இது ஆங்கிலேயர் காலத்தில் அதாவது 1869 இல் உருவாக்கப்பட்டது. ஜோதிபா புலே பெயரால் இப்போது இயங்கி வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இறுதியாக மும்பை தாதர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம் சென்றோம். இது ‘சய்தாபூமி’ (Chaitya Bhoomi) என்று அழைக்கப்படுகிறது. ராஜ்கிருஹா (Rajgruha) என்பது அம்பேத்கரின் இல்லம் இருக்கும் இடம். தந்தை பெரியாரும், பாபாசேகப் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என ஆசிரியர் அடிக்கடி கூறுவார். அந்த இரு தலைவர்களும், நன்கு புரிந்து தோழர்களாகப் பழகியவர்கள். ஆனால் இந்தப் பாழாய்ப் போன பார்ப்பனீயம் இரண்டு தலைவர்களின் தோழர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்க கடும் முயற்சி செய்து வருகிறது.
ஆசிரியரின் அன்பு விசாரணை!
சுற்றுலா இடங்கள் முடிவடைந்து அவரவர் தொடர்வண்டி நிலையங்களுக்கும், விமான நிலையத்திற்கும் சென்றனர். இந்த மாநாட்டுப் பயணத்திற்காகவே ஒரு தற்காலிக ‘வாட்சப்’ குழு தொடங்கப்பட்டு, செய்திகள் பரிமாறப்பட்டு வந்தன. அந்த வகையில் புறப்பட்ட நேரம், வீடு சேர்ந்த விவரம் அனைத்தையும் தோழர்கள் தெரியப்படுத்தினர். இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் (CSMT) இருந்து இரவு 22.52 மணிக்குப் புறப்பட வேண்டிய தொடர்வண்டி சற்று தாமதம் என்றார்கள், பிறகு இரண்டு மணி நேரம் தாமதம், பிறகு மூன்று மணி நேரம் தாமதம், பிறகு எப்போது வருமென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.
அந்த நள்ளிரவு குளிரில் 22 தோழர்கள் நடைமேடையில் அமர்ந்திருந்தோம். செய்தியறிந்த மும்பைத் தோழர்கள் பெ.கணேசன், அ.இவிச்சந்திரன், இ.அந்தோணி ஆகியோர் பதறி வந்துவிட்டனர். இதற்கிடையில் ஆசிரியருக்குத் தகவல் சென்று, தொலைப்பேசியில் பேசினார்கள். ஆசிரியர் அவர்களே இரண்டு நாள் மாநாடு, மூன்றாவது நாள் விருந்தினர்கள் சந்திப்பு, அம்பேத்கர் நினைவிடத்தில் பல மணிநேரம் செலவழிப்பு என, அன்று மாலை தான் சென்னை திரும்பினார்கள். இந்நிலையில் தோழர்கள் வருவதில் தாமதம் என்றவுடன், இரவு 11 மணிக்குப் பேசி ‘‘குளிர் அதிகமாக இருக்கிறதா? தோழர்கள் சாப்பிட்டார்களா? எல்லோருக்கும் உடல்நலன் நன்றாக இருக்கிறதா? தொடர்வண்டியில் ஏறியதும் நன்கு ஓய்வெடுக்கச் சொல்லுங்கள், அனைவரையும் கேட்டதாகக் கூறுங்கள்” என அத்தனைப் பரிவு! அத்தனைக் கனிவு! அதுதானே நம் தலைவரின் அடையாளம்!
கொள்கைக் குடும்பங்களின் குதூகலம்!
இறுதியாகத் தொடர்வண்டி அதிகாலை 03.45 மணிக்குப் புறப்பட்டது. பெரும்பாலும் ஒரே பெட்டியில் அனைவரின் இருக்கைகளும் அமைந்திருந்தன. முதல் நாள் காலை இட்லி, மதியம் சாம்பார் சோறு, இரவு சப்பாத்தி, ரயில் பயணத்தில் அடுத்த நாள் மதியம் புளியோதரை, அனைவருக்குமான குடிநீர் எனப் பார்த்து, பார்த்து செய்திருந்தார் பெரியார் பாலா. முதல்நாள் சுற்றுலாப் பேருந்து வந்த அதிகாலை 5 மணியில் இருந்து, இரவு வரை ஒரு நொடி கூட விலகாமல், கூடவே இருந்தார் அவர். தொடர்வண்டியில் உரையாடல்கள், கூடவே நொறுக்குத் தீனிகள், பாடல்கள், நகைச்சுவைகள் எனக் கொள்கைப் பயணம் தம் இறுதி இலக்கை அடைந்தது. மிகச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தோழர்கள் தெரிவித்துக் கொண்டனர். அதிகாலை 03.45 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடைந்து, அவரவர் இல்லத்திற்குத் திரும்பினோம். நேரடியாக மும்பைக்கு வராவிட்டாலும், இந்தக் கட்டுரை வழியாகக் கடந்த 5 நாள்களாக எங்களுடன் பயணம் செய்த தோழர்களுக்கும் மிக்க நன்றி!
மும்பைக்குப் பயணம் செய்தோர்!
சோமசுந்தரம், மோகன், மீனாம்பாள், ஜெயராமன், தமிழினியன், மணிகண்டன், சின்னதம்பி, அமுதா, மதுபாலா, மரகதமணி, பார்த்திபன், இறைவி, செல்வி, இசையின்பன், பசும்பொன், முத்தையன், நாகவள்ளி, நூர்ஜஹான், தேன்மொழி, காமராஜ், பெரியார்செல்வி, வெற்றிச்செல்வி, வளர்மதி, கவுதமி, கீதா, உமா, செல்வராஜ், முகப்பேர் செல்வி, முரளி, அசோக் நாகராஜன், தளபதிராஜ், கலையரசன், அன்புமதி, மூர்த்தி, நவீன்குமார், இளவழகன், ஆர்.டி.வீரபத்திரன், பாண்டு, கலைச்செல்வன், திருவேங்கடம், நன்னன், தாமோதரன், துரை.ராவணன், உத்ரா, ராஜவர்மன், லட்சுமிபதி, ராஜா, எல்லப்பன், உடுமலை வடிவேல், புகழேந்தி, பிரின்சு என்னாரெசு பெரியார். வில்வம் ஆகியோர் மும்பை பயணத்தில் கலந்து கொண்டவர்களாவர்.
(நிறைவுப் பகுதி)
