மும்பை, ஜன.13 மகாராட்டிர மாநில அரசியலில் மொழிப்பற்று மற்றும் மண்ணின் மைந்தர்கள் உரிமை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மகாராட்டிர நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு கடும் எச்சரிக் கையை விடுத்துள்ளார்.
மும்பையில் மாநகராட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது: “மகாராட்டிர மாநிலத்தில் ஹிந்தியை யாரேனும் திணிக்க முயன்றால், அவர்களுக்கு உதை விழும்.” என்று அவர் நேரடியான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“நமது மொழியும், நிலமும் நம்மை விட்டுப் போய்விட்டால், மராட்டியர்களின் கதை முடிந்து விடும். எனவே, மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்.” என அவர் அழைப்பு விடுத்துள் ளார். மேலும், உ.பி மற்றும் பீகார் மாநில மக்கள், ஹிந்தி என்பது உங்களது சொந்த மொழி அல்ல என்பதை உணர வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி உ.பி. பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநில மக்களின் மொழி அல்ல என்று இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே கூறிவந்த நிலையில் தற்போது மகாராட்டிராவிலும் உ.பி. பீகார் மாநில மக்களுக்கான தாய்மொழி ஹிந்தி இல்லை என்று பாடம் எடுக்கத் துவங்கி உள்ளனர்.
