மதுரை, ஜன. 12- தமிழ்நாட்டில் செவிலியர் உதவியாளர் காலிப் பணியிடங்களை, அரசாணையின்படி இட ஒதுக்கீடு மற்றும் விதிகளைப் பின்பற்றி நிரப்ப இந்த மாதமே அறிவிப்பு வெளியாகும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சுமதி, ராஜபாளையத்தைச் சேர்ந்த வேல்மணி உள்ளிட்ட அய்ந்து பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:
நாங்கள் செவிலியர் உதவியாளர் சான்றிதழ் படிப்பை முடித்துவிட்டு, பல ஆண்டுகளாக வேலைக்காகக் காத்திருக்கிறோம். தமிழ்நாடு சுகாதாரத் துறை கடந்த 2024 மார்ச் 14 அன்று வெளியிட்ட அரசாணையில், வயது வரம்பு மற்றும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி செவிலியர் உதவியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது சுமார் 4,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால், அரசாணையைச் செயல்படுத்தாமல், நிரந்தரப் பணியிடங்களில் ‘அவுட்சோர்சிங்’ முறையில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதமானது.
எனவே, தற்காலிக நியமனங்களுக்குத் தடை விதித்து, அரசாணையின்படி முன்னுரிமை அடிப்படையில் எங்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யாஸ்மின் பேகம் வாதிடுகையில்: “அரசாணை மற்றும் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றியே தேர்வு நடைமுறைகள் நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதத்திற்குள் (ஜனவரி 2026) வெளியிடப்பட வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளதால், அதில் அரசாணை முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
செவிலியர் உதவியாளர் (Nursing Assistant) சுமார் 4,000 ஜனவரி 2026 (இம்மாதம்)இட ஒதுக்கீடு மற்றும் அரசாணையின்படி இந்த அறிவிப்பு, செவிலியர் உதவியாளர் படிப்பை முடித்துவிட்டு நீண்ட காலமாக அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
