கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
பெங்களூரு, ஜன.11– ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை (MGNREGA) பாதுகாக்கவும் கருநாடக மாநில காங்கிரஸ் சார்பில் மாபெரும் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், வரும் ஜனவரி 26-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை இந்த நடைப்பயணம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
மாநிலத்தின் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தலா 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு காங்கிரசார் இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை முன்னெடுப்பார்கள் என்று அவர் விளக்கினார்.
சமீபத்தில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்திருந்த முதலமைச்சர் சித்தராமையா, “மகாத்மா காந்தி முதல்முறையாக கோட்சேவால் கொல்லப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக ஒன்றிய அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசு இந்த அளவிற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
