கொல்கத்தா, ஜன.10 “அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் என்னிடம் உள்ளது. நிலக்கரி ஊழல் குறித்த உண்மைகளை வெளியிடுவேன்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நிலக்கரி ஊழலில் இருந்து கிடைத்த அனைத்துப் பணமும் இறுதியில் அமித் ஷாவிடம் தான் சென்றடைந்துள்ளது. அந்த நிதி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகந்நாத் சர்கார் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. நான் வகிக்கும் பதவிக்கு மரியாதை அளித்து இதுவரை அமைதியாக இருந்தேன்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் எனக்கும் எனது அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நிலக்கரி ஊழலில் உள்ள தொடர்பு குறித்த விவரங்களை வெளியிடுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று மம்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொல்கத்தா வில் உள்ள அய்-பேக் (I-PAC) அலுவ லகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைக் கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, ஜாதவ் பூரிலிருந்து ஹஸ்ரா சந்திப்பு வரை ஒரு மாபெரும் கண்டனப் பேரணியை நேற்று (9.1.2026) நடத்தினார்.
