வல்லம், ஜன. 10- வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான வழிகாட்டி வெற்றிப்படிகள் எனும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவின் இயக்குநர் பேரா. மு. சர்மிளாபேகம் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் முனைவர் ஆர்.மல்லிகா தலைமையேற்று உரையாற்றும் போது +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புத் தேர்வு என்பது கடினமாக உழைக்கக்கூடிய காலமாகும். இக்காலத்தில் மாணவர்களுக்கு இடர்பாடுகள் வந்தாலும் எப்படிக் கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். பாடத்திட்ட வல்லுநர்கள் குறிப்பிடும் செய்திகளை குறிப்பெடுத்து அவற்றை படிக்க வேண்டும் என்றார்.
தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீ.பேபி சிறப்புரையாற்றும் போது மாணவர்களாகிய நீங்கள் +2 வந்துவிட்டீர்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்யக்கூடிய +2 தேர்வில் மதிப்பெண் எடுத்தால் தான் மதிப்பு கூடும் என்று இல்லாமல் உனது வாழ்க்கையை நீங்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தஞ்சை பெரியகோயிலின் அடித்தளம் எவ்வாறு போடப்பட்டு இன்று ஆயிரம் காலம் தாண்டி உயர்ந்து நிற்கின்றதோ அதுபோல தான் கல்வியின் அடிதளம் உறுதியாக இருக்கவேண்டும் என்பதை பற்றி தெளிவாக கூறினார். உங்களின் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைத்து உங்கள் கல்விக்காக அவர்களது வருமானத்தை செலவு செய்கின்றார்கள். உங்களது குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காகத் தான் பயில வேண்டும். உனது திறமையையும் பயன்படுத்த வேண்டும். அதற்கு தகுந்தாற் போல் கல்வியை தேர்ந்தெடுத்து பயில வேண்டும் என்றார்.
தஞ்சை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆர்.இராஜாராம் சிறப்புரை யாற்றும் போது வெற்றிப்படிகள் யாருக்காக எதற்காக வெற்றிபடி ஏன் படிக்க வேண்டும், எதற்காக படிக்கவேண்டும் என்று அறிவுரையை வழங்கினார். நீங்கள் பயில வேண்டும் என்றால் தனித்து செயல்பட வேண்டு, ஈடுபாடுடன் கடுமையாக பயில வேண்டும், தேர்வில் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல தாங்கள் எந்த துறையை விருப்பத்துடன் பயிலுகின்றாயோ அந்த விருப்பத்துடன் பயில வேண்டும் என்று கூறினார். பயின்றவுடன் வேலைக்கு செல்ல வேண்டுமா? அல்லது சுயதொழில் செய்யவேண்டுமா? அல்லது ஒரு தொழில் முனைவோராக வேண்டும் என்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் தளராமல் தன்னம்பிக்கையோடு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்றார்.
புதியதலைமுறை தொலைக்காட்சி மூத்த ஆசிரியர் வெ.வேதவள்ளிஜெகதீசன் பேசுகையில் மாணவர்கள் தாய் தந்தையரை மதித்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலையாக செயல்படுகின்றது. அதற்கு மாணவர்கள் தொலைக்காட்சிக்கு வர பொது அறிவை வளர்த்து முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் கல்வியாளர்கள் மாணவர்களுக்கு தேர்வை எப்படி எதிர்கொள்வது தேர்வில் என்ன மாதிரியான பாடங்களை படிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து 1300 மாணவர்கள் பங்குபெற்றனர்.
இறுதியாக மாணவர் சேர்க்கையின் துணை இயக்குநர் பேரா. முத்துராமன் நன்றி கூறினார். நிகழ்ச்சி தொகுப்பினை தமிழ்துறை பேராசிரியர் முனைவர் ந.லெனின் வழங்கினார்.
