நம்முடைய பயணங்கள் முடிவதில்லை; கொள்கைகள் தோற்பதில்லை!
உங்கள் பயணம், எழுச்சிப் பயணமாகட்டும் – வெற்றிப் பயணமாகட்டும் – வரலாற்றில் காவியமாகட்டும்!
திராவிடம் வெல்வது உறுதி! நிச்சயம், வரலாறு அதைச் சொல்லும்!
மேலூர், ஜன.10 நம்முடைய பயணங்கள் முடிவதில்லை; கொள்கைகள் தோற்பதில்லை! உங்கள் பயணம், எழுச்சிப் பயணமாகட்டும்; வெற்றிப் பயணமாகட்டும்! வரலாற்றில் காவியமாகட்டும்! என்றைக்கும் வெல்வோம்! திராவிடம் வெல்வது உறுதி! நிச்சயம், வரலாறு அதைச் சொல்லும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ‘சமத்துவ நடைப்பயணம்’ மேற்கொண்டுள்ளார். இன்று (10.1.2025) மதுரை – மேலூர் அருகே அவரைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
எங்களது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் குன்றாத பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக என்றென்றைக்கும் விளங்கிக்கொண்டிருக்ககூடிய, திராவிட இயக்கத்தின் போர்வாள் என்று நாங்கள் எல்லாம் பெருமையோடு நினைக்ககூடிய அன்பு சகோதரர் வைகோ அவர்கள், 82 வயது இளைஞர். அவர் முதியவர் அல்ல. எனவேதான் அந்த இளைஞரை சந்திக்கும் போது, நான் முதியவனாக வந்து சந்திக்கக்கூடாது என்பதற்காகத்தான் உடையில் மாற்றம்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே
நம்முடைய வைகோவை தவிர…
சமத்துவ நடைப்பயணம் என்று, பதினோறாவது முறையாக நடைப்பயணம் மேற்கொள்வது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே நம்முடைய வைகோவை தவிர வேறு எந்தத் தலைவரும் இருக்க முடியாது.
வைகோவினுடைய நடைப்பயணம் என்பது வெறும் நடைப்பயணம் அல்ல; ஆயிரம் தடைகள் வந்தாலும், அதை உடைத்தெறியக்கூடிய லட்சியப் பயணம்.
சிங்கநாதத்தோடு, ஒவ்வொரு நடைப்பயணத்தையும் வெற்றிகரமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்!
சமத்துவ நடைப்பயணம் எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதியை வலியுறுத்தக் கூடிய பயணம். இதுதான் திராவிட இயக்கத்தின் லட்சியம். ‘‘எதிரிகள் எங்கே?’’ என்று கேட்கக்கூடிய அளவிற்கு, சிங்கநாதத்தோடு, ஒவ்வொரு நடைப்பயணத்தையும் வெற்றிகரமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்.
ஒரு கொள்கைக்காக, ஒரு லட்சியத்திற்காக முதன்முதலில் அவர் நடைப்பயணம் மேற்கொண்டது 1986 இல். கோயில் நகை ‘மாயமான’ விவகாரத்திற்காக மூன்று நாள்கள் – 60 கி.மீ. நடைப்பயணம்.
அதுபோன்று இப்போதுகூட கேரளாவில் சில ‘மாயங்கள்’ மிக வேகமாக நடந்துகொண்டிருக்கின்றது.
என்னுடைய அன்பு வேண்டுகோள், தயவு செய்து அங்கே போய் நடைப்பயணம் மேற்கொள்ளாதீர்கள். இப்போதைக்குத் தமிழ்நாட்டிலேயே உங்களுடைய பணி அவசியம். ஏனென்றால், தட்டி எழுப்பவேண்டியதும், பாதுகாக்கப்பட வேண்டியதுமான அவசியம் தமிழ்நாட்டிலேதான் இப்போது!
‘ஆட்சியைத் திருட’ ஒரு கூட்டம்
தயாராக இருக்கிறது
தமிழ்நாட்டிலே ‘ஆட்சியைத் திருட’ ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்குப் பதில்தான், நம்முடைய வீரஞ்செறிந்த இந்த வீர நடைப்பயணம் – ஒப்பற்ற கொள்கைப் நடைப் பயணம்!
வெறும் கால்கள் அல்ல –
வழிகாட்டும் கலங்கரை விளக்கம்!
இரண்டாவது, ம.தி.மு.க. எழுச்சிப் பரப்புரை – 48 நாள்கள் – 1,600 கிலோ மீட்டர்.
மூன்றாவது, 1996 – காவிரி உரிமை மீட்பு – ஏழு நாள்கள் – 180 கிலோ மீட்டர்.
நான்காவது, 1997 – ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு – 3 நாள்கள் – 120 கிலோ மீட்டர்
அய்ந்தாவது, 2004 – தென்னக நதிநீர் இணைப்பு – 42 நாள்கள் – 1200 கிலோ மீட்டர்
ஆறாவது, 2006 – முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு – 6 நாள்கள் – 150 கிலோ மீட்டர்
ஏழாவது, 2012 – முழு மதுவிலக்குக் கோரி – 14 நாள்கள் – 450 கிலோ மீட்டர்
எட்டாவது, 2013 – முழு மதுவிலக்குக் கோரி – 11 நாள்கள்
ஒன்பதாவது, 2013 – முழு மதுவிலக்குக் கோரி – 13 நாள்கள்
பத்தாவது, 2018 – நியூட்ரினா எதிர்ப்பு – 10 நாள்கள்
இதுவரை 10 முறை நடைப்பயணம்.
தற்போது 11 ஆவது முறையாக – சமத்துவ நடைப்பயணம் – திருச்சி முதல் மதுரை வரை நடந்திருக்கின்ற உங்கள் கால்கள் சாதாரணமானதல்ல. இது வெறும் கால்கள் அல்ல – வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
கலங்கரை விளக்கங்கள் எல்லாம் உச்சத்தில் இருக்கும்; ஆனால், இந்தத் திராவிட இயக்கப் போர் வாளின் கால்களோ, கலங்கரை விளக்கமாக உச்சத்தில் இருக்கக்கூடிய அளவிற்கு, மெச்சத்தகுந்ததாக எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கின்றது. நம்முடைய வைகோ அவர்கள், நல்ல உடல்நலத்தோடு நூறாண்டையும் தாண்டி வாழ்ந்து, அப்போதும் அவர் நடப்பார். நடந்தால், இன்னும் அவர் இளமையாவார் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், திராவிட மாடல் முதலமைச்சர் அவர்களுக்கும், எங்களைப் போன்றோருக்கெல்லாம் கவலையைத் தருகிறீர்கள்; என்னதான் உள்ளத்திற்கு உற்சாகம் இருந்தாலும், உடல் உறுப்புகள் ஒத்துழைக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்.
கொள்கையைச் சீண்டும்போது,
நெருப்பாக மாறுவோம்!
அவரோடு சேர்ந்து, இவ்வளவு தோழர்கள் இருக்கிறீர்கள். இந்த நடைப்பயணத்தின் மூலமாக மேலும் நீங்கள் கருப்பாகியிருக்கிறீர்கள்; மற்றவர்கள் எல்லாம் வெறுப்பாகி இருக்கிறார்கள். நாமெல்லாம் கருப்பாகி இருக்கின்றோம்; கொள்கையைச் சீண்டும்போது, நெருப்பாக மாறுவோம். இந்தக் காலகட்டத்தில், அவருடைய அரசியல் நிலைப்பாடு மிகத் தெளிவாக இருக்கிறது. எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதற்கு அடையாளம், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருக்கிறார்.
கூத்தணியாகத்தான் இருக்கிறதே தவிர,
கூட்டணியாக இல்லை!
தமிழ்நாட்டு அரசியலில் உள்ள எதிர்க்கட்சிகள் இப்போது கூத்தணியாகத்தான் இருக்கிறதே தவிர, கூட்டணியாக இல்லை. ஆனால், தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி, தாய்க்கழகம் ஆதரிக்கின்ற அந்தக் கூட்டணி, மிகத் தெளிவாக இருக்கிறது. கொஞ்சம்கூட சபலமில்லாமல், நாங்கள் லட்சியத்திற்காகத்தான் கூட்டணியில் சேர்ந்திருக்கிறோம். பதவிக்காக அல்ல! உங்கள் உதவிக்காக நாங்கள் வந்திருக்கின்றோம் என்று சொல்லக்கூடிய மகத்தான ஒரு மாபெரும் தளபதி, நம்முடைய திராவிட இயக்கத்தின் போர்வாள்!
வைகோ அவர்களுடைய நடைப்பயணம்
தி.மு.க. கூட்டணிக்கு வலுச் சேர்க்கிறது!
‘‘வெண்ணிலாவும், வானும்போல’’, ‘‘வீரனும், கூர்வாளும் போல’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதற்கு, நம்முடைய வைகோ அவர்களுடைய நடைப்பயணம் இந்தக் கூட்டணிக்கு வலுச் சேர்க்கிறது.
தோன்றாத் துணையாக உங்களுக்கு நாங்கள் எப்போதும் இருப்போம்! இந்த நடைப்பயணம், தமிழ்நாட்டினுடைய லட்சியத்தின் இலக்கை அடைய மிக முக்கியமானதாகும். அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டில், மதக்கலவரத்தை உருவாக்கலாம் என்று வடக்கே இருந்து வந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஓர் எச்சரிக்கைப் பயணம்!
எவ்வளவு பேர் வடக்கே இருந்து வந்தாலும், இடக்கு செய்ய நினைத்தாலும், அவற்றை அடக்குவதுதான் எங்களுடைய வேலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த அருமையான பயணம், ஓர் எச்சரிக்கைப் பயணம் – இது வீண் போகக்கூடிய பயணம் அல்ல.
நிச்சயமாக மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் 2026 இல். அதற்குப் பக்க பலமாக, தளபதியினுடைய நடைப்பயணம், அதற்கு உரம் போட்டு, வழிகாட்டி முன்னோட்டமாக அமைந்திருக்கின்றது.
எனவே, அவர்களுடைய நலம், எல்லாவகையிலும் இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லா வகையிலம் தாய்க்கழகம் பாதுகாப்பாக இருக்கும்; என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும். எந்த நிலையிலும், அவர்மீது பற்றும், பாசம் இருக்கும். அதேபோல, இந்நடைப்பயணத்தில் கலந்துகொண்டிருக்கின்ற சகோதரிகள், தோழர்கள் அத்துணை பேருக்கும் தலைதாழ்ந்த வணக்கத்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிடம் வெல்வது உறுதி!
நம்முடைய பயணங்கள் முடிவதில்லை; கொள்கைகள் தோற்பதில்லை! எனவே, பயணம், எழுச்சிப் பயணமாகட்டும்; வெற்றிப் பயணமாகட்டும்! வரலாற்றில் காவியமாகட்டும்! என்றைக்கும் வெல்வோம்! திராவிடம் வெல்வது உறுதி! நிச்சயம், வரலாறு அதைச் சொல்லும், சொல்லும் என்று கூறி, உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மீண்டும் மீண்டும் நீங்கள் எத்தனை முறை போராட்டக் களத்தில் நின்றாலும், தாய்க்கழகம் உங்களை வாழ்த்துவதோடு நிற்காது, உங்களோடு கரம் கோர்த்து என்றைக்கும் நிற்கும்!
வைகோவின் பயணம், திராவிடத்தின் பயணம்!
திராவிடத்தின் எழுச்சிப் பயணம்!
அது வைகோ என்ற தனிமனிதருடைய அல்லது ம.தி.மு.க. என்ற ஓர் தனி அமைப்பினுடைய பயணம் அல்ல; திராவிடத்தின் எழுச்சிப் பயணம்!
திராவிடத்தின் எழுச்சிப் பயணம் வெற்றி பெறும்! வெற்றி பெறுக! வெற்றி பெறுக!
வாழ்க வைகோ, பல ஆண்டுகள்!
வாழ்க வைகோ அவர்களுடைய வெற்றிப் பயணம்! வெற்றியைத் தருக! வெற்றியைத் தருக!
வீரத்தின் உறைவாளாக, போர் வாளாக இருக்கவேண்டும்!
வாள் என்று சொன்னால், சுழன்று கொண்டே இருப்பதுதான்! உறைக்குள் இருக்காது!
ஆகவேதான், முறையாக நடந்துகொண்டிருக்கின்றார்!
வாழ்த்துகின்றோம்! தாய்க்கழகத்தின் அரவணைப்பு வாழ்த்துகளோடு உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்!
உங்கள் பயணம் மதுரையோடு முடிவதில்லை!
உங்கள் பயணம் ஒரு லட்சியப் பயணத்தினுடைய ஒரு காலகட்டம்!
‘திராவிட மாடல்’ ஆட்சியை
மீண்டும் கோட்டைக்குள் அமர்த்துவோம்!
அந்தக் காலகட்டத்தைத் தாண்டி, 2026 இல், உங்களைப் போன்றவர்கள், உங்கள் அமைப்புகளைப் போன்றவர்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் கோட்டைக்குள் அமர்த்துவோம் என்ற பெருமைக்கு நீங்கள் காரண கர்த்தாக்கள், உங்களையெல்லாம் உள்ளே அனுப்பி, அதை அழகுப் பார்த்து, நாங்கள் வெளியில் காவலாளிகளாக நிற்கவேண்டியவர்கள்.
காவலாளிகள் அங்கேயே நிற்கவேண்டியவர்கள்; அவர்கள் நடைப்பயணம் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களைப் பாராட்டி, நாங்கள் என்றைக்கும் நிற்கவேண்டிய இடத்தில் நிற்கிறோம்.
நீங்கள் அழைக்க வேண்டிய இடத்திற்கு அழைத்தால், எப்போதும் வருகிறோம்!
அனைத்துத் தோழர்களுக்கு வாழ்த்துகள்!
உங்களோடு சேர்ந்து, கொஞ்ச தூரம் நடந்து, அதற்குப் பிறகு நான், என்னுடைய பிரச்சாரப் பயணத்தைத் தொடர்வேன்!
ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!
தொண்டர்களாகவும், தோழர்களாகவும், நம்முடைய உடன்பிறப்புகளாகவும் இருக்கக்கூடிய உங்களுக்கு தலைதாழ்ந்த நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
