சென்னை, ஜன.9 தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் (E -FILING) நடைமுறையைக் கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக் குரைஞர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதே சமயம் சென்னை உயர்நீதி மன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார் இது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந் தார். இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு தலைமை நீதிபதி சிறீவஸ்தவா அமர்வில் 06.01.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த இ- பைலிங் நடைமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு குறித்த முடிவு பொங்கலுக்குப் பிறகு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி தரப்பிலிருந்து சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் கீழமை நீதிமன்றங்களில் இ – பைலிங் நடைமுறை கட்டாயமாக்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
