வி.சி.வில்வம்
இயக்க நிகழ்ச்சிகளாக கருத்தரங்குகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நூல் வெளியீடு, ஆர்ப்பாட்டம் எனப் பல வடிவப் பிரச்சாரங்கள்! தனிப்பட்ட முறையில் இதர அமைப்புகளின் நிகழ்ச்சிகள், தமிழ்நாடு அரசின் விழாக்கள், பல்கலைக்கழக உரைகள், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என ஓர் ஆண்டில் மட்டும் ஆசிரியருக்கு எத்தனை இலட்சம் கி.மீ. வருகிறது என்றே தெரியவில்லை.
கடந்த டிசம்பரில் ஆசிரியருக்கு 93 ஆவது பிறந்தநாள் விழா எடுத்தார்கள் தோழர்கள்! “வயது என்பதை ஓர் எண்ணிக்கையாகக் கொள்ள வேண்டுமே தவிர, அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்க வேண்டியதில்லை”, என ஆசிரியர் குறிப்பிடுவார்கள். அதேபோல வயதாகிவிட்டதே என யாரும் வருத்தப்பட வேண்டாம்; அந்த வாய்ப்புகள் பலருக்கும் கிடைப்பதில்லை எனவும் வாழ்வியல் சிந்தனைகள் நூலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
எனவே 93 என நாம் நினைத்தாலும், ஆசிரியரின் கணீரென்ற குரல், சுறுசுப்பான செயல்கள், வேகமான நடை, தொடர் எழுத்துகள், பயணங்கள் இவையாவும் 20 வயது இளைஞரையும் வெட்கப்பட வைக்கும்; முன்னுதாரணமாக முடுக்கிவிடும்! “எனக்கு வயது 93 என யார் சொன்னது? என் வயது 39”, என ஆசிரியர் கூறுவது ஏதோ வேடிக்கை அல்ல! அதுதான் ஒரு மனிதருக்கு இருக்க வேண்டிய உச்சபட்ச உத்வேகம்! ஒரு தலைசிறந்த மனோதத்துவ மருத்துவர் கூட, பிறருக்குக் கொடுக்க முடியாத நம்பிக்கை!
ஆசிரியர் இதை வார்த்தைகளால் மட்டும் கூறவில்லை; அதை வாழ்க்கையிலும் செயல்படுத்தி வருகிறார். ஆசிரியர் ஏன் இவ்வளவு பயணம் செய்ய வேண்டும்? ஆசிரியர் ஏன் இவ்வளவு எழுத வேண்டும்? ஆசிரியர் ஏன் இவ்வளவு பேச வேண்டும்? ஆசிரியர் ஏன் இவ்வளவு உழைக்க வேண்டும்? எனத் தினம், தினம் அக்கறை கொள்வோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர்!
இந்தத் தேதியில் இந்த ஊருக்குப் போக வேண்டும், அந்தத் தேதியில் அந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் என எட்டு வயதிலேயே நாட்குறிப்பு எழுதியவர் ஆசிரியர். தமது 93 வயதிலும் அந்த நாட்குறிப்புத் தொடர்கிறது என்றால், இந்த வரலாறு, இந்த உலகத்தில் வேறு யாருக்காவது உண்டா எனக் கேட்டுச் சொல்லுங்கள்… நாமும் தெரிந்து கொள்வோம்.
ஆசிரியர் நலன் கருதி சற்றே ஓய்வெடுக்கச் சொல்பவர்கள் ஒருபுறம்; இப்படி ஓடிக் கொண்டே இருந்தால் தான் அது ஓய்வு! ஒரே இடத்தில் இருந்தால் அது நோவு! என்கிற ஆசிரியரின் எண்ணங்கள் மறுபுறம்! பொதுவாகத் திராவிட இயக்கத் தலைவர்கள் இச்சமூகத்தையே புரட்டி போட்டவர்கள். எதிலும் தலைகீழ் மாற்றம் தான்! நம் தலைவரும் கூட 93 அய் 39 ஆக்கி, தன்னையும் உற்சாகப்படுத்தி, தம் தொண்டர்களுக்கும் உற்சாக மூட்டி, இயக்கத்தையும் வளப்படுத்தி, அதன் மூலம் தமிழ்ச் சமூகமும் பயன்பெறும் வரலாற்றுப் பணியை நொடிதோறும், நொடிதோறும் செய்து வருகிறார்.
60 வயது வந்துவிட்டாலே சோர்வுற்று, களைப்புற்று, காரணமின்றி மனம் நொந்து, “என்னத்த… இருந்தோம், என்னத்த… செய்தோம்” என்று இருப்பவர்கள் பலர். தம் 60 வயதையே 90 ஆக கருதும் உலகில், தமது 93 அய் 39 ஆகக் கருதி, இந்த நாட்டிற்காக நித்தம், நித்தம் உழைக்கிறார் என்றால், அவரின் பெயர் ஆசிரியர் என்றால், இதற்கு ஈடுஇணை ஏதும் இருக்கிறதா தோழர்களே?
இயக்கப் பணி மட்டுமின்றி; தனி மனித வாழ்வில் அதிகாலை எழுதல், தவறாத நடைப்பயிற்சி, கணக்கற்ற பத்திரிகைகள் வாசிப்பு, எழுத்துப் பணிகள், தொலைப்பேசி உரையாடல்கள், தொலைக்காட்சி செய்திகள், அலுவலகப் பயணம், பார்வையாளர்கள் சந்திப்பு, விடுதலை நாளிதழ் பணிகள், நிர்வாகப் பணிகள், தலைவர்கள் சந்திப்பு என இவை அனைத்தும் 24 x 7 என்கிற அளவில் நடப்பவை. இதேபோல நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? அல்லது ஒருநாளாவது அப்படி இருக்கிறோமா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேற்கூறிய ஒருநாள் பணிகளில், ஒரு 10 நிமிடம் கூட தம் வீட்டிற்குச் செலவிடாத ஒரு தலைவரைத் தான் இந்தத் தமிழ்நாடு பெற்றுள்ளது! அதனால் தான் அவர் “தமிழர் தலைவர்” எனப் போற்றப்படுகிறார். தமிழர் தலைவர் என அழைக்கப்பட்ட பெரியார், இப்போது உலகத் தலைவர் ஆகிவிட்டார்; அவரது கொள்கைகள் அகிலம் முழுவதும் போய்விட்டது. தமிழ்நாட்டில் தினம் தினம் எங்காவது பெரியார் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அதேபோல உலகில் பல்வேறு நாடுகளிலும் ஏதாவது பெரியார் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
உலகில் வாழும் தமிழர்கள் பெரியாரை நூல் வடிவத்திலும், உடையாடல் மூலமாகவும், இணையத்தில் பத்திரிகை நடத்தியும், சமூக ஊடகங்களில் பங்கெடுத்தும், குடும்பச் சந்திப்பின் மூலமும்… என ஏதாவது ஒரு வடிவில் நித்தமும் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். திராவிட இயக்கத்தால் உயர்கல்வி பயின்று, இன்று உலகம் முழுக்க தவிர்க்க முடியாத சக்தியாக மாறி இருக்கிறார்கள் தமிழர்கள்! அதற்கான பின்புலம் தந்தை பெரியார்! உலகம் முழுக்க வாழும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்களுக்கு என்றே தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகள் நடத்தும் அளவிற்கு பெரியார் உலகமயம் ஆகியிருக்கிறார்.
அலுப்பும், சலிப்பும் சொந்த வாழ்வில் கூட அடிக்கடி தோன்றுகிறது. ஆனால் 83 ஆண்டு கால பொது வாழ்வில் அப்படி ஒன்று தோன்றவே தோன்றாத, வாராது வந்த மாமணியாய், ஆசிரியர் வீரமணி உழைக்கிறார் என்றால் அது உலக முன்மாதிரி! வயதைக் காரணம் காட்டி ஓய்வு எடுங்கள் எனப் பலரும் கூறும் நிலையில், தமிழ்நாட்டின் நலன் மட்டுமல்ல; மகாராட்டிரா மாநிலத்திற்கும் மறுமலர்ச்சி தேவை எனச் சிந்தித்த தொலைநோக்கு மற்றும் துணிச்சலின் பெயர்தான் ஆசிரியர் வீரமணி!
வாருங்கள்! நாளை மும்பை செல்வோம்!
(தொடரும்)
