புதுடில்லி, ஜன.9 டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டின் தீ விபத்தில் சிக்கிய பண மூட்டைகள் தொடர்பாக, மக்களவைத் தலைவர் அமைத்த விசாரணை குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆண்டு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, அங்கிருந்து எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பண மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவருக்கு எதிராக மக்களவையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து விசாரிக்க 3 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைத்தார். இருப்பினும், இதே தீர்மானம் மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது. மேலும் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில்: மக்களவைத் தலைவர் விசாரணை குழு அமைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது நீதிபதிகள் விசாரணை சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. எனவே, மக்களவைத் தலைவரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (8.1.2026) நடைபெற்றது.
நீதிபதி தரப்பு: நீதிபதி வர்மா சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
ஒன்றிய அரசு தரப்பு: ஒன்றிய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற அதிகார வரம்பு குறித்த முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
