பாட்னா, ஜன. 8- சசாரம் மாநக ராட்சி தனது எல்லைக்குள் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், தெரு நாய்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொறுப்பு அலுவலர் ஒருவரை (ஆசிரியரை) நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் காணப்படும் தெரு நாய்களின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சிக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து சசாரம் மாநகராட்சி ஆணையர் விகாஸ் குமார் கூறுகையில், “அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திட்டமிடலுக்கு உதவுவதற்காகத் தெரு நாய்கள் குறித்த துல்லியமான, உள்ளூர் அளவிலான தகவல்களைச் சேகரித்து வழங்கிடப் பொறுப்பு அலுவலரை நியமிக்குமாறு கல்வி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
இருப்பினும், ஆசிரியர்களுக்கு இதுபோன்ற கற்பித்தல் அல்லாத பிற பணிகள் வழங்கப்படுவதால் மாண வர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
