சென்னை, ஜன. 8- பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழல் உள்ள இடங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தையும், சென்னை 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
அவதார் (Avtar) குழுமம் என்ற ஆலோசனை நிறுவனம், பணியிட கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. பெண்கள் பணியாற்ற சிறந்த இடம் எது என்பதைத் தீர்மானிக்க பாதுகாப்பு, சிறந்த கட்டமைப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறந்த சூழல் என பல அம்சங்களை ஆராய்ந்து நாட்டில் உள்ள 125 நகரங்களை அந்நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள நான்காவது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை
பெண்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழல் போன்ற அம்சங்களில் 53.29 புள்ளிகள் பெற்று பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. சென்னை 49.86 புள்ளிகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது.
தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களில் பெங்களூரு தொடர்ந்து வலுவாக இருந்தாலும்; பாதுகாப்பு, பொதுச் சேவை, போக்குவரத்து, ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற சமூகச் சூழல்களை (Social Ecosystem) கணக்கிடும்போது சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு இதில் 3ஆம் இடத்தையே பெற்றுள்ளது.
பிற நகரங்கள்
புனே (46.27 புள்ளிகள்) 3ஆம் இடத்திலும், அய்தராபாத் (46.04 புள்ளிகள்) 4ஆம் இடத்திலும், மும்பை (44.49 புள்ளிகள்) 5ஆம் இடத்திலும் உள்ளன.
பின்னடைவு
டில்லி முதல் முறையாக முதல் 10 இடங்களின் பட்டியலில் இருந்து வெளியேறி 11ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.
தமிழ்நாட்டின் சாதனை
இந்த ஆய்வு தொடங்கப்பட்ட திலிருந்து பல நகரங்களில் குறிப் பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் 25 நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பெண்களுக்கு மிகச்சிறந்த சூழல் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒப்பிடும்போது, தென்னிந்தியப் பகுதியே பெண்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழலுக்கு ஏற்ற இடமாக உள்ளது. மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் இந்த அம்சத்தில் பின்தங்கியுள்ளன.
