புதுச்சேரி, ஜன. 8- ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் 6.1.2026 அன்று முற்று கைப் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்று கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு, கடந்த அய்ந்தாண்டு கால ஆட்சியில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. போலி மருந்துகளைத் தயாரித்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரி கள் உட்பட பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளை மட்டும் கைது செய்துவிட்டு, ஆட்சியில் இருப்பவர்கள் தப்பித் துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். மருத்து வத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய அளவில் போலி மருந்து தயாரிப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு இந்த ஊழலுக்கு முழு மையாகப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும்.”
மின்துறை ஒப்பந்தம் ரத்து சிபிஎம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
“இந்த ஊழல் அரசு மின்சாரத் துறையைத் தனி யாருக்குத் தாரைவார்க்க முடிவு எடுத்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாகத் தொடர் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, மின்சாரத்தைத் தனியாருக்குத் தரும் ஒப்பந்தத்தை அரசு தற்போது ரத்து செய்துள்ளது. போராட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனமான மின்துறையை மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாத்துள்ளது. ஒரு வேளை இந்தப் போராட்டம் நடத்தப்படாமல் இருந்திருந்தால், அதானி நிறுவனத்திற்கு மின் துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தாரை வார்க்கப்பட்டிருக்கும்.”
அமித் ஷாவிற்கு கண்டனம்
“அண்மையில் புதுக் கோட்டை மாவட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ஊழல் எங்கே இருந்தாலும் அதனை ஒழிப்பதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்’ என்று ஆவேசமாக முழங்கினார். புதுக்கோட்டையில் ஊழலைப் பற்றிப் பேசும் அமித்ஷா, புதுச்சேரியில் உள்ள பாஜக கூட்டணி அரசின் ஊழலைப் பற்றிப் பேச மறுப்பது ஏன்? பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழலில் மூழ்கியிருக்கும் பாஜக கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் அமித் ஷாவுக்கு ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?”
இவ்வாறு அவர் கூறினார்.
