புதுடில்லி, ஜன. 7- உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களைத் தரம் பிரித்து, அவர்களின் குற்றத்தின் தீவிரத்திற் கேற்ப கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதே வேளையில், அறியாமையினால் பாதிக்கப்படும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதிலும் இக்குழு உறுதியாக உள்ளது.
குழுவின் முக்கிய பரிந் துரைகள் பின்வருமாறு:
உணவில் கலப்படம்
கலப்படத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனைகளை குழு வகைப்படுத்தியுள்ளது:
இயற்கை காரணங்களாலோ அல்லது மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழலாலோ உணவு கெட்டுப்போய், அதனால் உடல்நலனுக்குப் பெரிய பாதிப்பு இல்லாத பட்சத்தில், அத்தகைய நிகழ்வுகளுக்குச் சட்ட அமலாக்கத்திலிருந்து முழு விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாதாரண கலப்படம்
உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உணவில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால், 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை மற்றும் குறைந்தபட்சம் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
மரணம் அல்லது நிரந்தர செயல்படாத தன்மை போன்ற பாதிப்புகள் இன்றி, உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கலப்படங்களுக்கு ஓராண்டு முதல் 6 ஆண்டுகள் வரை சிறை மற்றும் குறைந்த பட்சம் ரூ. 2,000 அபராதம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
குறைந்தபட்ச தண்டனைக்குரிய சாதாரண கலப்பட வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து முடிக்க சிறப்பு நடத்தை விதிகளை குழு உருவாக்கியுள்ளது. இத்தகைய வழக்குகளை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டுகள் விசாரணை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
உணவுத் துறையில் மலிந்துள்ள ஊழலை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இக்குழு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக உணவு ஆய்வாளர்களுக்கு (Food Inspectors) உரிய தொழில்நுட்ப அறிவியல் கல்வித் தகுதி இருத்தல் வேண்டும்.
அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் லஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என குழு கருதுகிறது.
தற்போது விற்பனை செய்யப்படும் பொருட்களில் பாலில்தான் அதிகப்படியான கலப்படம் நடப்பதாக இக்குழு கவலை தெரிவித்துள்ளது.
பால் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், டில்லி பால் பண்ணைத் திட்டம் போன்ற பெரிய அமைப்புகள்கூடத் தப்ப முடியாது என்றும், மக்களுக்குச் சத்தான பால் கிடைப்பதை உறுதி செய்ய அரசு மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் இக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
