சென்னை, ஜன. 7– தமிழ்நாட்டில் உள்ள 2.23 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (8.1.2026) ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பரிசுத் தொகை
பொங்கல் விழாவை தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த டிச.31ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91,730 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.248 கோடியே 66 லட்சத்து 17,959 ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து, தற்போது நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. கரும்பு கொள்முதல் பணியும் தொடங்கியுள்ளது. விரைவில் கரும்பும் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ரூ.3 ஆயிரம் ரொக்கம்
இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆகியவை சேர்த்து ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47,959 கோடி செலவில் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் (5.1.2026) பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் குடும்பங்களுக்கு அந்தந்த நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வநியோகத்தைத் தொடங்கினர். இப்பணியை இன்றைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை சென்னை ஆலந்தூர் பகுதிக்குட்பட்ட பட்ரோடு, நசரத்புரம் நியாயவிலைக் கடையில் நடைபெறும் விழாவில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் தொடங்கி வைக்கிறார்.
.
சென்னை புத்தகக் காட்சி
அனுமதி இலவசம் என அறிவிப்பு!

சென்னை, ஜன.7– சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என்று பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பபாசி தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் 49ஆவது புத்தகக் காட்சியை ஜன. 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம். 1000-க்கு மேற்பட்ட அரங்குகள் புத்தகக் காட்சியில் இடம்பெறவுள்ளன” என்றார்.
பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் சோதனை முயற்சியாக சென்னை புத்தகக் காட்சி டிசம்பர் இறுதியில் தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், பல பதிப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அந்த புத்தகக் காட்சி வெற்றிகரமாக அமையவில்லை.
இந்த நிலையில், இந்தாண்டு பொங்கலையொட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சி
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் விரைவில் அறிமுகம்
புதுடில்லி, ஜன. 7– நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மாதம் அளித்த பதிலில், “நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் தயாரிப்புப் பணி நடைபெறுகிறது. இந்த ரயில் தயாரான பிறகு சோதனை முறையில் இயக்கப்படும்” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரியானா அரசு நேற்று (6.1.2026) வெளியிட்ட அறிக்கையில், “வடக்கு ரயில்வேயின் லட்சியத் திட்டமான ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் தயாரிப்புப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே சோதனை முறையில் இயக்கப்படும். ஹைட்ரஜன் ரயிலுக்காக ஜிந்த் நகரில் நிறுவப்பட்டுள்ள ஹைட்ரஜன் ஆலைக்கு 11 கி.வாட் சீரான மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
