புதுடில்லி, ஜன.6–- ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக் கங்களை நீக்குவதோடு, இதுபோன்ற பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடும் பயனர்கள் மற்றும் கணக்குகளுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என்று எக்ஸ் (X) சமூக வலைதள நிறுவனம் அறிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தின் ‘க்ரோக்’ எனும் செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்படும் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கடந்த 2.1.2026 அன்று கடுமையான அறிவிக்கை அனுப்பியது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 72 மணி நேரத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஒன்றிய அரசின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, எலான் மஸ்க் தனது பதிவில், “க்ரோக் செயலியில் ஆபாச உள்ளடக்கங்களைப் பதிவேற்றம் செய்வது சட்டவிரோதச் செயலுக்குச் சமம். அத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், எக்ஸ் தளத்தின் பன்னாட்டு அரசு விவகாரங்கள் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன: குழந்தை ஆபாசப் படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட சட்டவிரோதப் பதிவுகள் உடனடியாக நீக்கப்படும் விதிகளை மீறும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்.தேவைப்பட்டால் உள்ளூர் அரசு மற்றும் சட்ட அமைப்புகளுடன் இணைந்து எக்ஸ் தளம் நடவடிக்கை எடுக்கும்.
பெண்களை அநாகரிகமாகச் சித்தரிக்கும் வகையில் ‘க்ரோக்’ ஏஅய் மூலம் உருவாக்கப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவதைத் தடுக்கக் கோரி, சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
