உறுதியான ஜாதி ஒழிப்புப் போராட்டக்காரர் என்பதாலேயே தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடர் சொற்பொழிவின் மூன்றாம் நாள் கூட்டத்தொடரில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஏப். 25 வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் என்பதால் மட்டும்தான் பெரியாருக்கு அழைப்பா? உறுதியான ஜாதி ஒழிப்புப் போராட்டக்காரர் என்பதாலேயே பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
ஏன்? எதற்காக? மூன்றாம் நாள் கூட்டம்
கடந்த 13.4.2023 அன்று ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?” என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்குரிய கழகத்தின் துணைத் தலைவர் எனக்குமுன் ஒரு சிறந்த ஆய்வுரையை நிகழ்த்தியுள்ள மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுகின்ற பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பினுடைய தலைவர் மற்றும் இயக்கப் பொறுப்பாளர்கள், தமிழறிஞர்கள், சான்றோர்கள், பகுத் தறிவாளர் கழகத் தோழர்கள், ஆய்வாளர்கள் உள்பட அனைத்துப் பெருமக்களே, இயக்கத்தின் பொருளாளர் அவர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கி றேன்.
கவிஞர் அவர்கள் இங்கே சொன்னதைப்போல, ஒவ்வொரு நாளும் இடைவெளி இல்லாமல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று இரவு வெளியூருக்குச் செல்லவேண்டும். நேற்று சைதாப் பேட்டை பொதுக்கூட்டம் நிகழ்வின் காரணமாக, அந்த ஒரு நாள் ஓய்வும் பறிக்கப்பட்டு விட்டது. என்றாலும், மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது; உற்சாகமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இது ஓர் அறிவார்ந்த பயிற்சியாகும்.
ஜாதி ஒழிப்பிற்கு நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொண்டால், எத்தனைப் பணிகள் நடந்திருக்கின்றன என்று சொல்லும்பொழுது, நம்மையே திகைப்படையச் செய்யக்கூடிய அளவிற்குத் தந்தை பெரியார் அவர் களுடைய அறிவார்ந்த கருத்துகள் இருக்கின்றன.
இது ஒரு சுயநலம்;
பொதுநலம் மற்றவர்களுக்கு…
எப்படி கீழடி ஆய்வுகளும், சிந்துவெளி நாகரிகத்தில் தோற்றுவிக்கப்பட்டவைகளும் தோண்டத் தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கின்றதோ, அதுபோலத்தான் நண்பர்களே, வைக்கம் போராட்டத்தைப்பற்றி படிக்க படிக்க – மூன்று நாள்கள் சொற்பொழிவு என்று அறிவித்ததினுடைய நோக்கமே, நான் நிறைய படித்து மனதில் பதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். அடிப்படையில் இது ஒரு சுயநலம்; அதையொட்டி பொதுநலம் மற்றவர்களுக்கு என்றாலும், அத்துணை பேரும், அத்துணை புத்தகங்களையும் படிக்கின்ற வாய்ப்பு இருக்காது.
அங்கங்கே படிக்கக்கூடிய கருத்துகளையெல்லாம் பதிவு செய்யவேண்டும் – இளைய தலைமுறையின ருக்கு – இன்றைய தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டும். அதிலும் நம்முடைய பார்வை என்பது ஒரு விருப்பு – வெறுப்பற்ற பார்வையாகும்.
அந்த அடிப்படையில் பல செய்திகளை நினைவூட்ட வேண்டும்.
பிறக்காத கடவுளுக்கு பிறந்த நாள் ஏன்?
நம்முடைய மக்களுக்கு திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டே இருக்கவேண்டும். தந்தை பெரியாரும் சொல்வார், நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் சொல்வார்.
பிறக்காத கடவுளுக்கே ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள் என்றால், அப்படி கொண்டாடா விட்டால் மறந்துவிடுவார்கள் என்பதற்காகத்தான்.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒன்றை சொல்லி, கொண்டாடச் சொல்வார்கள்.
ஒரு மதத்துக்காரர் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமை கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று சொல்வார்.
இன்னொரு மதத்துக்காரர், ஒரு நாளைக்கு ஆறு முறை தொழவேண்டும் என்று சொல்வார்.
மற்றொரு மதத்துக்காரர் ஞாயிற்றுக்கிழமையானால் சர்ச்சுக்குச் செல்லவேண்டும் என்று சொல்வார்.
இப்படி வரிசையாக சொன்னாலும்கூட, நினைவூட்டு தல் என்பதுதான் மிகவும் முக்கியம். இல்லையென்றால், கடவுளை மறந்துவிடுவார்களாம்.
அவ்வளவு பெரிய பக்தி போதைக்கே நினைவூட்ட வேண்டி இருக்கிறது என்றால், இது பகுத்தறிவு விஷயம் – ஆய்வரங்கம் இது – ஆகவேதான் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டி இருக்கிறது.
நிறைய செய்திகளை நாம் பதிவு செய்யவேண்டும். நம்முடைய காலத்தில் இதைப் பதிவு செய்தால்தான், பிறகு வாலாட்டாமல் இருப்பார்கள்; வரலாற்றில், திரிபு வாதத்திற்கு இடமில்லாமல் இருக்கும் என்பதுதான் இதனுடைய நோக்கம்.
மூன்று நாள் தொடரில், முதல் நாள் எதிலிருந்து தொடங்கினோம். வைக்கம் போராட்டம்பற்றி பழ.அதியமான் போன்றவர்கள் புத்தகங்களை எழுதியிருக் கிறார்கள். நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், இன்னமும் அந்த விஷமப் பிரச்சாரத்தைப் பார்ப்பனர்கள் விடவில்லை.
தந்தை பெரியார் தந்த அற்புதத் தலைப்பு
அய்யா தந்தை பெரியார் அவர்கள், ஓர் அற்புதமான தலைப்பு கொடுத்தார். சமஸ்கிருத வேதங்களில் பார்ப்பன விஷமம் மிகப்பெரிய அளவிற்கு இருப்பதை சுட்டிக் காட்டுவதற்காக அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகத்திலிருந்தே அய்யா அவர்கள் ஆய்வு செய்து, ஒரு புத்தகத்தை வெளியிட்டார். ‘‘புரட்டு, இமாலயப் புரட்டு!” என்பதுதான் அதற்குத் தலைப்பு.
புரட்டு, அதுவும் எப்படிப்பட்ட புரட்டு? இமாலயப் புரட்டு. இதற்குமேல் ஒரு புரட்டு இருக்குமா?
நீங்கள் அந்த சொல்லாட்சியை மிக முக்கியமாக கவனிக்கவேண்டும். இமாலயப் புரட்டு என்றார்.
இமாலயப் புரட்டை விஞ்சியது
பார்ப்பனப் புரட்டு
ஆனால், வைக்கம் போராட்டம்பற்றி பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்கின்ற விஷமப் பிரச்சாரத்தையும், நம்மாட்களை கூலி கொடுத்துப் பிடித்து செய்வதிலிருந்தும் இன்னொரு வார்த்தையை நான் பார்த்தேன்.
இமாலயப் புரட்டைத் தாண்டிய புரட்டு என்று ஒன்று உண்டா? என்றால், உண்டு. அதுதான் பார்ப்பனப் புரட்டு!
இமாலயப்புரட்டு எல்லாம் பார்ப்பனப் புரட்டிற்கு முன் வர முடியாது.
அதற்கு உதாரணம், ஒரே பொய்யை, திரும்பத் திரும்ப , ஆணி அடித்ததுபோன்று சொல்லு கிறார்கள். மறுப்பெல்லாம் சொன்ன பிறகும், பதில் சொன்ன பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் அரசு ரீதியாகவே பதில் சொல்லிய பிறகும், பார்ப்பனர்கள் அதையே சொல்கிறார்கள்.
இன்று வெளிவந்திருக்கும் ‘தினமலர்’ பத்திரிகையில் வெளிவந்துள்ள ஒரு செய்தி. நம்முடைய பணிக்காக அந்தப் பத்திரிகையை வாங்கிப் படிக்கவேண்டி இருக் கிறது. அதற்காக நீங்கள் யாரும் அந்தப் பத்திரிகையை வாங்கிப் படிக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. உங்களுக்காக நாங்கள் ‘விடுதலை’யில் எழுதுகிறோம். வாங்குகிற பழக்கம் இருந்தால், அதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஏனென்றால், மதுவினுடைய தீமைகள்குறித்து விளக்கம் சொல்லும்போது, அதைக் கேட்ட ஒருவர், டாஸ்மாக்கிற்குச் சென்று மது வாங்கி, நீங்கள் சொன்னது எப்படி இருக்கு என்று நான் தெரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் குடித்துப் பார்க்கிறேன் என்று சொன்னால், அது சரியாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது.
அந்த அடிப்படையில்தான் இதனை மிக முக்கிய மாகக் கவனிக்க வேண்டும் நீங்கள்.
தலைகீழாக சொல்வதெல்லாம் உண்மையாகுமா?
நம்மாட்களைப் பிடித்து கற்பனையாக ஒரு கடிதம் எழுதி, ஏதோ ஒரு முகவரியைப் போடவேண்டியது. பொய்க் கடிதத்தை வெளியிடுவது – எத்தனையோ முறை இதை நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம். இதே கடிதம் காலைக்கதிர் என்ற நாளிதழிலும் வேறு முகவரி கொடுத்து வெளியிடுவார்கள்.
இன்று காலையில் வெளிவந்த தினமலரில், ‘‘வைக்கம் போராட்டமும் உண்மையும்!” என்ற தலைப்பில் அந்தச் செய்தி வந்திருக்கிறது. உண்மைக்கே வரையறை கொடுத் திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தலைகீழாக சொல்வதுதான் உண்மை! அவை உண்மையாகுமா?
ஜனநாயகத்தினுடைய பெருமைகளைப்பற்றி இப்பொழுது யார் பேசுகிறார்கள்? யார் முழுக்க முழுக்க பாசிஸ்ட்டுகளாக இருக்கிறார்களோ, அவர்கள்தான் பேசுகிறார்கள். ஜனநாயகத்தினுடைய காப்புரிமையே தங்களிடம் தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்று உண்மை என்பதற்கு அர்த்தம் என்ன? அது எப்படிப்பட்ட உண்மை? தெரியுங்களா!
அய்வருக்கும் தேவியாம்; அழியாத பத்தினியாம்; அதுபோன்ற உண்மை அது.
மிக எளிமையான தர்க்கம் என்னவென்றால், அய் வருக்கும் தேவியாக இருப்பது என்பது அவரவர்களு டைய வசதியைப் பொறுத்தது. அதில் நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை. அது கதையைப் பொறுத்தது.
ஆனால், அது எப்படி அழியாத பத்தினியாக இருப் பார்கள்? அழியாத பத்தினியாக இருந்தால், அய்வருக்கும் தேவியாக இருக்க முடியாது; அய்வருக்கும் தேவியாக இருந்தால், அழியாத பத்தினியாக இருக்க முடியாது.
இரண்டும் ஒன்றுக்கொன்று ஆழமான முரண்.
அதுபோன்று இன்று ‘தினமலரில்’ வெளிவந்த செய்தி:
கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
‘‘கேரளாவில், 1924 மார்ச், 30 இல் துவங்கிய வைக்கம் போராட்டம், 1925 நவம்பர், 23 இல் நிறைவு பெற்றது. இந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் சமீபத்தில் துவங்கின.
வைக்கம் போராட்டம் என்றாலே, தமிழகத்தில் ஈ.வெ.ரா., தான், நம் கண் முன் நிறுத்தப்படுகிறார்; ‘வைக்கம் போராட்ட வீரர்’ என்றும் புகழப்படுகிறார்.
வைக்கம் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல; கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில், குறிப்பிட்ட சில பிரிவினர் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்தே, இப்போராட்டம் நடத்தப்பட்டது. மஹாத்மா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிதான், தீண்டாமைக்கு எதிரான இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது.
கேரள மக்களால் பெரிதும் போற்றப்படும், சமூக சீர்திருத்தவாதியும், பேளூர் மடாதிபதியுமான நாராயண குருவின் சீடரும், காங்., தலைவர்களாக இருந்தவர்களுமான, டி.கே.மாதவன், கே.கேளப் பன் போன்றவர்களால் வைக்கம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அவர்கள் தடை செய்யப்பட்ட தெருக்களில் நடந்து, போராட்டத்தை துவக்கினர். மஹாத்மா காந்தியும் கேரளா வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தமிழகத்திலிருந்து, ராஜாஜி, டாக்டர் வரதராஜுலு நாயுடு உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள், கேரளா சென்று போராட் டத்தில் பங்கேற்றனர். அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக, ஈ.வெ.ரா., இருந்ததால், அவர் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்று, ஈ.வெ.ரா., தமிழகம் திரும்பிய பிறகும், கேரளாவில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. பல கட்ட போராட்டங் களுக்குப் பிறகே, வைக்கத்தில் குறிப்பிட்ட பிரி வினர், தெருக்களில் நடக்க விதிக்கப்பட்டிருந்த தடைகள் முழுமையாக நீக்கப்பட்டன; போராட் டமும் வெற்றி பெற்றது.
இதுதான் வைக்கம் போராட்டத்தின் சுருக்க மான வரலாறு. இப்போராட்டத்தில், தமிழக காங்., கமிட்டி தலைவராக ஈ.வெ.ரா., பங்கேற்றதை மறுப்பதற்கில்லை. ஆனால், பலரும் நினைப்பது போல, வைக்கம் போராட்டம், ஈ.வெ.ரா., மட்டும் நடத்திய போராட்டம் அல்ல; அது, காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்.
அப்போது, தமிழக காங்., தலைவராக ஈ.வெ.ரா.,வுக்கு பதிலாக, வேறு யாராவது பதவி வகித் திருந்தால், அவர் தலைமையில் தமிழக காங்கிரசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியிருப்பர்… அவ்வளவு தான்.”
காங்கிரஸ் கட்சி உள்ளூரில் அந்தப் போராட்டத்தைத் தொடங்கி, அவர்களை சிறையில் அடைத்தவுடன், இனி மேல் எங்களால் போராட்டத்தைத் தொடர முடியாது என்று இரண்டு தம்பிகளை அனுப்பி, விரிவான கடிதத்தை எழுதினார்கள். ‘‘நான் வரத்தான் வேண்டுமா?” என்று தந்தை பெரியார் திரும்பத் திரும்பக் கேட்டு, நீங்கள் வரவில்லையானால், அந்தப் போராட்டம் அப்படியே நசுக்கப்பட்டுவிடும்; ஆகவே, கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னார்கள். ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் கிறிஸ்தவர், ஆகவே நீங்கள் இந்தப் போராட் டத்தில் பங்கேற்கக்கூடாது என்றனர்.
அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டுமே!
ஒரு படை நடத்துகின்றோம்; அந்தப் படை ஒரு யுத்தத்தில் பங்கேற்று வெற்றி கிடைக்கிறது. அந்த வெற்றிக்கு யார் காரணம் என்றால், அந்தப் படைக்கு யார் தலைமை தாங்குகிறார்களோ, அவர்களைத்தானே சொல்லுவார்கள்.
அதுமட்டுமல்ல, வைக்கம் போராட்டத்தில் பெரியாரு டைய பங்களிப்பு என்பது, எளிமையான பங்களிப்பு அல்லவே! ஒருமுறை அல்ல – பெரியாருடைய பங்களிப்பு என்பது. இந்தக் கேள்விகளுக்கு அறிவு நாணயம் இருந்தால், அவர்கள் பதில் சொல்லட்டும்.
வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்ட யாராவது, கைதாகி, தண்டனை பெற்று, விடுதலையானவுடன், மீண்டும் கடுமையாகப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களா? இரண்டாவது முறையாக அந்தப் போராட்டத்தில், பெரியாரைத் தவிர வேறு யாரும் ஈடுபடவில்லை. அதற்காக ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தார்கள்.
முதலில் ஒரு மாதத் தண்டனை கொடுத்தார்கள்.
தியாகம் வெற்றி பெற்றது;
யாகம் தோற்றது
அதற்குப் பிறகும், அடங்கவில்லை என்றவுடன், இனிமேல் பெரியாருக்கு சிறை சரிப்படாது; அதற்குப் பதிலாக, கடவுளை வேண்டிக்கொள்வோம்; சத்ரு சங்கார யாகத்தை நடத்தலாம் என்று முடிவெடுத்தனர்.
அந்த யாகம் என்னாயிற்று என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
அவர்கள் யாகத்தை நம்பினார்கள் –
தொண்டர்களோ, தியாகத்தை நம்பினார்கள்!
தியாகம் வெற்றி பெற்றது; யாகம் தோற்றது!
வைக்கம் போராட்டத்திற்கு, காங்கிரஸ் தலைவர் என்பதினால் பெரியாருக்கு அழைப்பு இல்லை. பெரியார் என்ற ஜாதி ஒழிப்புப் போராட்ட உறுதிக்காரர் நீங்கள்; உங்களால்தான் முடியும் என்பதற்காகத்தான் பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஏனென்றால், அதற்குமுன் குருகுலப் போராட்டம் தொடங்கி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதற்குமுன்பு, ஜாதி ஒழிப்புப் பிரச்சினையில், காந்தி யாரிடமிருந்து கொஞ்சம் கருத்துகளால் மாறுபட்டார்; ஆனால், காங்கிரஸ் தலைமையை, காந்தியாரின் தலை மையை ஏற்றுக்கொண்டு தான் பெரியார் இருந்தார்.
(தொடரும்)