புதுடில்லி, ஜன.6 குளிர் மற்றும் மழைக்காலங்களில் வீடுகளை இடிக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற கடுமையான எச்சரிக்கையை மீறி டில்லி அரசு குடிசைவீடுகளை இடித்து வருகிறது.
இதுவரை மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் அரசுகள் புல்டோசர் நடவடிக்கை மேற் கொண்ட நிலையில் பாஜக ஆளும் டில்லி அரசும் புல்டோசர் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது
டில்லி ரோஷனாரா கிளப் அருகே சுமார் 60 குடிசைகளை டில்லி மேம்பாட்டுக் கழகம் (டிடிஏ) கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இடித்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசித்து வந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்குமிட மின்றி வீடற்றவர்களாக மாற்றப்பட் டுள்ளனர். இந்த இடிப்பு நடவடிக்கை, அங்கு வாழ்ந்து வந்த குடும்பங்களை நகரின் கடுமையான குளிரில் தவிக்க விட்டுள்ளது. 5.1.2026 அன்று டில்லியின் வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸாகக் குறைந்திருந்தது. இது இந்த பருவத்தின் மிகக் குளிரான நாளாகப் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தினக்கூலித் தொழிலாளி அனில் மண்டல் கூறுகையில், “எனக்கு மூன்று குழந்தைகளும் வயதான பெற்றோரும் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் வாடகை, நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை விட அதிகமாகும். இந்த கடும் குளிரில் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.
பூ வியாபாரம் செய்யும் அவரது தந்தை, தங்கள் உடைமைகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு இடம்பெயர முடியாத சூழலில் இருப்பதாகக் கூறி னார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பூ வியாபாரி ரஜ்னிஷ், “எங்களிடம் சேமிப்பு ஏதுமில்லை. தங்குமிடம் கிடைக்கவில்லை என்றால் எங்கள் செடிகள் அனைத்தும் அழிந்து வாழ்வா தாரம் கேள்விக்குறியாகிவிடும்” எனத் தெரிவித்தார். புல்டோசர் நடவடிக்கை தொடர்பாக டிடிஏ தரப்பிலிருந்து இதுவரை முறையான விளக்கமோ, மறுவாழ்வு குறித்த அறிவிப்போ வெளியாகவில்லை.
நில மாபியாக்களோடு பாஜக தலைவர்கள் கைகோர்த்து தொடர்ந்து குடிசைகளை இடித்து அதனை பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக புல்டோசர் நவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
