கருநாடக மாநிலத்தின் அரசியல் சாதனையாளர் சித்தராமையா அதிக காலம் ஆட்சி புரிந்தவர்
பெங்களூரு, ஜன.6 கருநாடகாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த முதலமைச்சர் என்ற சாதனையை சித்தராமையா படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக கருநாடக மாநிலத்தின் வரலாற்றில் அதிக நாட்கள் முதலமைச்சராக ஆட்சி செய்தவர் என்ற பட்டியலில் தேவராஜ் அர்ஸ் முதலிடத்தில் இருந்தார். அவர் 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று 2,789 நாட்கள் (7 ஆண்டுகள் 6 மாதங்கள்) முதலமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு அடுத்த இடத்தில் நிஜலிங்கப்பா 7 ஆண்டுகள் 175 நாட்கள் முதமுதலமைச்சராக இருந்தார்.
இந்நிலையில், தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா ஜனவரி 6ஆம் (இன்று) தேதியுடன் தேவராஜ் அர்ஸ் பதவியில் இருந்த நாட்களை சமன் செய்கிறார். ஜனவரி 7-ஆம் தேதியுடன், அதிக நாட்கள் கருநாடகாவை ஆண்ட முதலமைச்சர் என்ற தேவராஜ் அர்ஸின் சாதனையை முறியடிக்கிறார். ஜனவரி 7-ஆம் தேதிக்கு பின்னர் அதிக நாட்கள் கர்நாடகாவை ஆட்சி செய்த முதமுதலமைச்சர் என்ற பெருமை சித்தராமையாவை வந்தடையும்.
ம.பி. பிஜேபி ஆட்சியில்
இந்தூர் குடிநீர் மாசுபாடு பாதிப்பு அதிகரிப்பு
மேலும் 20 பேருக்கு தொற்று
இந்தூர், ஜன.6 மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் பொதுக் கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் குடிநீர் குழாய்களில் கலந்ததால் குடிநீர் மாசுபட்டது. இதனால் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பாகீரத்புராவில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பாகீரத்புராவில் 2,354 குடும்பங்களை சேர்ந்த 9,416 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 20 மருத்துவப் பயனாளி கண்டறியப்பட்டனர்.
நோய்த் தொற்று பரவிய பிறகு 398 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 256 பேர் குணடைந்து வீடு திரும்பினர். 142 பேர் சிகிச்சையில் உள்ளனர்’’ என்றார்.
அசாமில்
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
3 பேர் காயம்; வீடுகள் மற்றும் கோயில்கள் சேதம்!
குவஹாத்தி, ஜன.6 அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் 5.1.2026 அன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி மூன்று பேர் காயமடைந்ததோடு, பல வீடுகள் மற்றும் பொதுக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
தேசிய நில அதிர்வு ஆய்வு மய்யம் என்.சி.எஸ். தெரிவித்துள்ள தகவலின்படி, 5.1.2026 அன்று அதிகாலை 4:17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவானது. பிரம்மபுத்ரா நதியின் தென்கரையில் அமைந்துள்ள மோரிகான் மாவட்டத்தை மய்யமாகக் கொண்டு, நிலப்பரப்பிலிருந்து 50 கி.மீ. ஆழத்தில் இந்த அதிர்வுகள் உருவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மோரிகான் மற்றும் நாகான் மாவட்டங்களில் பல வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. நாகான் மாவட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளி பகுதியளவு சேதமடைந்தது.
கோயில் சேதம்: சோனித்பூர் மாவட்டம், தேஜ்பூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஹாலேஸ்வர் கோயிலின் முதன்மை நுழைவாயில் நிலநடுக்கத்தால் சேதமடைந்தது.
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? அதன் எண்ணும் தெரியாதா? என்ன செய்ய வேண்டும்?
ஆதார் கார்டு இல்லாமல் எந்த அரசு சேவையையும் பெற முடியாது. இந்நிலையில், ஆதார் கார்டும் தொலைந்துவிட்டது, 12 இலக்க நம்பரும் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அதற்கு, UIDAI இணையதளம் சென்று, Aadhaar Service-அய் தேர்வு செய்யவும். அதில் Retrieve Aadhar ஆப்ஷனை கிளிக் செய்து, அங்கு உங்களின் பெயர், கைப்பேசி எண், முகவரி விவரங்களை உள்ளிட்டால், உங்களின் ஆதார் கார்டு எண் கிடைக்கும்.
