அமராவதி, ஜன.6 நாட்டில் பேசப்படும் மொழிகளில் உயா்ந்தது, தாழ்ந்தது என்று ஏதுமில்லை. மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழி மட்டுமன்றி பிற மொழிகள் அனைத்தையும் மதித்து நடக்க வேண்டும் என ‘ஹிந்தி ஹிந்தி ஹிந்தி’ என்று கூறும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அதன் கூட்டணி கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான என்.சந்திரபாபு நாயுடு மறைமுக அறிவுரை கூறினார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்றுவரும் உலக தெலுங்கு மாநாட்டில் 5.1.2026 அன்று பங்கேற்ற அவா் பேசியதாவது: ஒருவா் தனது தாய்மொழியில் கற்கும்போதுதான் சிறந்து விளங்க முடியும். தாய்மொழியை மறப்பது என்பது நமது அடையாளத்தையே இழப்பது போன்றாகும். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று விளங்குவதும் அவசியம்.
மக்கள் ஒருவா் மற்றொருவரின் மொழியை மதித்து நடக்க வேண்டும். மொழிகளில் உயா்வு, தாழ்வு என்று ஏதுமில்லை. இந்த மாநாட்டில் 40-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து பங்கேற்றுள்ளனா். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் குழந்தைகளுக்கு நமது தாய் மொழியின் இனிமையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பொட்டி சிறீராமுலு பெயரில் ராயலசீமாவில் தெலுங்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றார். ஒன்றிய அரசு அனைத்து இடங்களிலும் ஹிந்தியை திணித்துவருகிறது, உள்துறை அமைச்சரகம் முழுக்க முழுக்க கடித்தப் பரிமாற்றம் ஹிந்தியில் மட்டுமே இருக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தற்போது ஆந்திர முதலமைச்சர் மறைமுகமாக ஹிந்தி திணிப்பு குறித்து பேசியுள்ளார்.
