புதுடில்லி, ஜன.6 அசாமில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இன்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இச்சூழலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் அசாம் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அசாமை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முன்கூட்டியே தயாராகி வருகிறது. இதற்கான முக்கியப் பொறுப்பை மக்களவை உறுப்பினர் பிரியங்கா வதேராவிடம் காங்கிரஸ் அளித்துள்ளது. அசாமின் வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் 2019-இல் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார் பிரியங்கா. அப்போது முதல் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸார் விரும்பினர். இந்நிலையில் இப்புதிய நியமனம் மூலம் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கருதப்படுகிறது.
பிரியங்கா, கடந்த 2024 நவம்பரில் வயநாடு இடைத்தேர்தல் மூலம் முதல்முறையாக மக்களவைக்குள் நுழைந்தார். இவர் தனது சகோதரர் ராகுலை விட அதிக அரசியல் அனுபவம் கொண்டவர். 2004-இல் ராகுல் மக்களவைக்கு போட்டியிட்டு தீவிர அரசியலில் நுழைந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே பிரியங்கா தன் தாயான சோனியாவின் தேர்தல் பிரச்சாரங்களை வழிநடத்தி வந்தார். பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிடப்படும் பிரியங்கா, கட்சியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், காங்கிரஸை மீண்டும் பலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களும் கட்சியில் உள்ளனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரியங்கா உ.பி. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு, கிழக்கு உ.பி. தேர்தல் பிரச்சாரத்துக்கு பொறுப்பேற்றிருந்தார். எனினும் இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.
உ.பி.யை விட அசாமில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதே வேட்பாளர் தேர்வுக் குழுவின் பணி. இருப்பினும், பிரியங்காவின் பங்கு அதை விட அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அசாமில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணி அமைய உள்ளது. இங்கு பீகாரில் ஏற்பட்டதைப் போன்ற குழப்பங்கள் ஏற்படக்கூடாது என கட்சித் தலைமை கருதுகிறது. இதற்கு ராகுலை விட பிரியங்காவே பொருத்தமானவர் என நம்பி அவருக்கு முக்கியப் பொறுப்பை அளித்துள்ளது.
