விஜயவாடா, ஜன.6 ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி (ONGC) எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவு மற்றும் தீ விபத்து காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இரண்டு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கோனசீமா மாவட்டம் மோரி-5 என்ற எண்ணெய் கிடங்கில் உற்பத்தியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்தக் கிடங்கை ‘டீப் இன்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ராஜமுந்திரியில் இருந்து ஓஎன்ஜிசி நிபுணர் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாக னங்கள் சம்பவ இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 4 கி.மீ. தொலை வில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தீயை அணைக்கும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.
