பெய்ஜிங், ஜன. 5- மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனைச் சாப் பிடும்போது அதிகக் கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மரபணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையைச் சீன விஞ்ஞானிகள் உரு வாக்கியுள்ளனர்.
‘கிபல் கார்ப்’ என்ற நன்னீர் மீன் வகையைச் சீன விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் வழக்கமாக ஆங்கில எழுத்து ‘Y’ (ஒய்) வடிவில் 80 சிறிய முள்கள் இருக்கும். இந்த முள் உருவாக்கத்திற்கு ‘Runx2b’ என்ற மரபணுதான் காரணம் எனக் கண்டறி யப்பட்டது. CRISPR-Cas9 (சி.ஆர்.அய்.எஸ்.பி.ஆர் – சி.ஏ.எஸ்) என்ற மூலக்கூறு கத்தரிக்கோல் மூலம் முள் வளர்ச்சிக்குக் காரணமான இந்த மரபணு நீக்கப்பட்டது.
அதன்பின் ‘கிபல் கார்ப்’ மீன் குஞ்சுகளை உருவாக்கியபோது, முற்றிலும் முள் இல்லாத மீன் உருவானது. இந்த மரபணு மாற்றம் மூலம் மீனின் இயல்பான வளர்ச் சியில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மீன் தற்போது சீனாவில் பிரபலமடைந்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கை மீன்வளர்ப்பு இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் ‘ஜோங்ஜே எண்.6’ (Zhongke No. 6) என்ற மீன் வகையிலும் மரபணு மாற்றம் செய்து, முள் இல்லாத மீனாக உருவாக்கியுள்ளனர். இவற் றில் இருந்த ‘CjRunx2b-A’ மற்றும் ‘B’ ஆகிய மர பணுக்கள்தான் முள் வளர்ச்சிக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டு, அதில் மாற்றம் செய்யப் பட்டது.
