கட்சிரோலி, ஜன. 5- மகாராட்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் ஆல்டண்டி டோலா கிராமத்தைச் சேர்ந்த ஆஷா சந்தோஷ் கிரங்கா (வயது 24) 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது கிராமத்துக்கு சாலை வசதி இல்லை. அதேநேரம், அங்கு மருத்துவ வசதிகளும் இல்லை.
இந்நிலையில், பிரசவ வலிக்கு முன்பே பெத்தா என்ற ஊரில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதற்காக அந்தப் பெண் ஜனவரி 1-ஆம் தேதி தனது கணவருடன் காடுகளின் வழியாக 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.
ஜனவரி 2-ஆம் தேதி காலையில் அவருக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஹெத்ரியில் உள்ள காளி அம்மாள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய முடிவு செய்தனர். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காலம் கடந்துவிட்டதாகவும் குழந்தை ஏற்கெனவே கருப்பையிலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் ரத்த அழுத்தம் அதிகரித்ததால், அந்தப் பெண்ணும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கட்சிரோலி மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் பிரதாப் ஷிண்டே கூறும்போது, “அந்தப் பெண் ஆஷா பணியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டவர். திடீர் பிரசவ வலியும் சிக்கல்களும் அவர் நடந்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை. சுகாதார அதிகாரியிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது, இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.
வெனிசுலாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட
ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயார்
ஜப்பான் பிரதமர்

டோக்கியோ, ஜன. 5- அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதைப் பொருட்களை கடத்துகிறது என்றும், வெனி சுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.
எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி வெனிசுலா விவகாரம் பற்றி குறிப்பிட்டு பேசினார். வெனிசுலாவில் காணப்படும் சூழலை கவனத்தில் கொள்ளும்போது, அந்நாட்டில் ஜனநாயகம் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ஜப்பான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என கூறினார்.
சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற அடிப்படையான மதிப்புமிக்க விசயங்கள் மற்றும் கொள்கைகளை மதித்தலை ஜப்பான் மரபாக கொண்டுள்ளது என குறிப்பிட்ட அவர், நமது நாட்டின் இந்த நிலையான நிலைப்பாட்டின் அடிப்படையில், ஜி7 மற்றும் பிராந்திய நாடுகள் உள்ளிட்ட தொடர்புடைய நாடுகளுடன் ஜப்பான் அரசு, தொடர்ந்து நெருங்கிய முறையில் ஒருங்கிணைந்து செயல்படும்.
இதன் வழியே ஜப்பான் மக்களின் உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்து வெனிசுலாவில் ஜனநாயகம் மீண்டும் திரும்புவதற்கும், சூழலை நிலைநிறுத்துவதற்கும் அதற்கான விசயங்களை உறுதிப்படுத்தவும் செய்யும் என்று கூறினார்.
சுதந்திர நாளை முன்னிட்டு
மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை

நேபிடாவ், ஜன. 5- ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மியான்மர் 1948ஆம் ஆண்டு தனிநாடாக உருவானது. இதன் 78ஆவது சுதந்திர நாள் நேற்று (4.1.2025) கடைப்பிடிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சுதந்திர நாளை முன்னிட்டு அங்கு சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிறையில் உள்ள 6 ஆயிரத்து 134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் 52 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் கொலை, பலாத்காரம் போன்ற கடுமையான குற்றம் புரிந்தவர் தவிர மற்ற கைதிகளின் தண்டனை காலங்களும் குறைக்கப்பட்டு உள்ளன.
அதேசமயம் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனரா என்ற தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சுதந்திர தினத்தை நினைவுகூரும் விதமாகவும், “மக்களின் இதயங்களையும் மனதையும் அமைதிப் படுத்தும் மற்றும் மனிதநேயத்தை மதிக்கும்” நோக்கத்து டனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாடுகளுக்கு இடையே நட்புறவைப் பேணவும், மனிதாபி மானக் கருத்துகளை மதிக்கவும்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
