மும்பை மாநாட்டின் இரண்டாம் நாள் ஆங்கில அமர்வில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை உரை வீச்சு!!
மும்பை, ஜன.5 ‘‘புரட்சியாளர் அம்பேத்கர் உரு வாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பிற்கும், மனுதர்மத்துக்கும் தான் இன்றைய போராட்டம். மீண்டும் மனுதர்மத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காக பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது; அன்றைய ‘‘சாகுமகராஜ் மாடல்’’ தான் இன்றைய, ‘‘திராவிட மாடல் ஆட்சி!’’ என்று மும்பை மாநாட்டின் இரண்டாம் நாள் ஆங்கில அமர்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் வில்லேஜ் ரோடு பாண்டூப் (மேற்கு) பிரைட் உயர்நிலைப்பள்ளியின் கல்வித்தந்தை தேவதாசன் அரங்கத்தில் நேற்று (4.1.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. நிகழ்வின் தலைப்பாக ‘‘சுயமரியாதை இயக்கமும் சமூக நீதியும்’’ என்ற தலைப்பு அமைக்கப்பட்டிருந்தது. மும்பை லெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராஜன் தொடங்கி வைத்தும், ஒருங்கி ணைப்பு செய்தும் உரையாற்றினார்.
நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் அய்ஸ்வர்யா பாலகிருஷ்ணன், மகாராட்டிரா மற்றும் கோவா யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணி யாளர்களின் நலச் சங்க பொறுப்பாளர் விவேக் குமார், பகுஜன் குடியரசு சமதர்ம கட்சித் தலைவர் வழக்குரைஞர் சுரேஷ் மானே, ‘Andashradha Nirmulan Vartapa’ இதழின் உதவி ஆசிரியர் முக்தா தபோல்கர், மேனாள் மாநிலங்களவையின் இணைச் செயலாளர் எஸ்.என்.சாகு ஆகியோர் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பில் ஆழமான கருத்துகளை முன்வைத்து உரையாற்றினர்.
முன்னிலை ஏற்று உரையாற்றிய பேரா ளர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேடையில் பயனாடை அணிவித்து பெரியார் சிலையை நினைவுப் பரிசாக வழங்கி னார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் ஆகியோருக்கு கழகத் தலை வர் சிறப்பு செய்தார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
அவர் தமது உரையில், ‘‘அருமையான உரைகள் இங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன’’ என்றும், ‘‘நான் பேசுவதை விட கேட்பதை விரும்பினேன்’’ என்றும் சுட்டிக்காட்டி விட்டு, ‘‘பேசப்பட்ட உரைகள் எனது காதுகளில் இசை யாக ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன’’ என்று கூறி, பேசப்பட்ட கருத்துகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்தினார். ‘‘தந்தை பெரியாரும், பாபாசாகேப அம்பேத்கரும் நமக்குக் கற்றுக் கொடுத்தவை கேள்விகள்’’ என்றார். அதை ஒட்டியே பேசிய அவர், ‘‘அந்தக் கேள்விகள் தான் நமது கையில் இருக்கும் ஆயுதங்கள்!’’ என்றார். இப்போது நாம் இருக்கும் நமக்கிருக்கும் நெருக்கடிகளைச் சுட்டிக் காட்ட வந்தவர், ‘‘பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், மனுதர்மத்திற்கும் இடையில்தான் இன்றைய போராட்டமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டு விட்டு, ‘‘மனுதர்மத்தை மறுபடியும் அதிகாரத்தில் அமர்த்த பெரும் முயற்சி நடக்கிறது’’ என்பதையும் சேர்த்துச் சொல்லி, ஆபத்தை உணர வைத்தார். ‘‘மனுதர்மத்திற்கு நேர் எதிரான தத்துவமான சுயமரியாதையை,சுயமரியாதை இயக்கத்தை, அது நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகள வில் பொருந்தக் கூடியது; மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது’’ என்றும் விளக்கினார்.
எங்களது சல்யூட்!
தொடர்ந்து, ஜாதி தீண்டாமை என்ற சொற்களைப் பற்றி விவரித்தவர், ‘‘தீண்டா மையை ஒழித்து விட்டால், ஜாதி ஒழியாது. ஜாதியை ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும்’’ என்று தந்தை பெரியாரும், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரும் குறிப்பிட்டிருப்பதை எடுத்துரைத்தார். மேலும் அவர், ‘‘படங்களாக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அய்ம்பெரும் தலைவர்கள் தான் நமது விழிகளை திறந்தவர்கள்; நமக்கு வழிகாட்டியவர்கள்; அவர்களுக்கு எங்க ளது சல்யூட்’’ என்று முழங்கினார்.
தொடர்ந்து, ‘‘சாகு மகராஜ் அவர்களின் படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது’’ என்றும், ‘‘அதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றும், ‘‘சாகுமகராஜ் மாடல்’’ தான் இன்று தமிழ்நாட்டில் ‘‘திராவிட மாடலாக’’ இருக்கின்றது’’ என்றும் பலத்த கைதட்டல்களுக்கிடையே குறிப்பிட்டார். நிறைவாக, ‘‘ஜாதி நம்மை பிரிக்கின்றது; மொழி நம்மை பிரிக்கின்றது; மதம் நம்மை பிரிக்கின்றது; சுயமரியாதையும், சமூக நீதியும்; பெரியாரும், அம்பேத்கரும் நம்மை இணைக்கின்றது; இணைக்கின்றன’’ என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக மும்பை பகுத்தறிவாளர் கழகத் தோழர் அக்சித் இரவிச்சந்திரன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு – திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறி வாளர் கழகம், அதேபோல் மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பெருமளவு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில்,
தமிழ்நாட்டிலிருந்து சென்று பங்கேற்றோர் தமிழர் தலைவர் ஆசிரியருடன் உள்ளனர் (4.1.2026)
