புதுடில்லி, ஜன.5 ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசிஹ் அடங்கிய அமர்வு, திறந்தநிலை அல்லது பொதுப் பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவிற்காக ஒதுக்கப்பட்ட தனிப் பிரிவு அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியது.
ஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர் களுக்கு இரட்டைப் பலன் கிடைக்கிறது என்ற வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
உயர்ந்த மதிப்பெண் பெற்றும் பொதுப் பிரிவில் சேர்க்கப்படாதது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையை மீறுவதாகும் என்று நீதிமன்றம் கூறியது.
முக்கியத் தீர்ப்பு
ஒரு விண்ணப்பதாரர் இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் பொதுப் பிரிவிற்கான ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், அவரைப் பொதுப் பிரிவு பதவிகளுக்கான பரிசீலனையிலிருந்து விலக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இத்தகைய விலக்கல், அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16 ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவ உத்தரவாதங் களை மீறுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
பொதுப் பிரிவு என்பது தகுதி அடிப்படையில் அனைத்து விண்ணப்ப தாரர்களுக்கும் திறந்திருக்கும் ஒரு பொதுவான இடமாகும். அதை அவ்வாறு கையாளத் தவறினால், அது இடஒதுக்கீடு கொள்கையையே ஒரு வகை விலக்கல் முறையாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது என்று நீதிமன்றம் எச்சரித்தது.
பணி நியமனக் கட்டமைப்பு
இந்த வழக்கு ஆகஸ்ட் 2022 இல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பணி விதிகளின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பிலிருந்து தொடங்கியது. மொத்தம் 2,756 இளநிலை நீதித்துறை உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியி டங்கள் அறிவிக்கப்பட்டன. தேர்வு முறை இரு நிலைகளைக் கொண்டிருந்தது: 300 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 100 மதிப்பெண்களுக்கு தட்டச்சுத் தேர்வு என நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது.
மே 2023 இல் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானபோது, நிர்வாகம் தட்டச்சுத் தேர்வுக்காகப் பிரிவு வாரியாகப் பட்டியலைத் தயாரித்தது. பொதுப் பிரிவிற்கான கட்-ஆஃப் சுமார் 196 மதிப்பெண்களாக இருந்தது. ஆனால், சில இடஒதுக்கீடு பிரிவினருக்கு இது 220 மதிப்பெண்களுக்கும் அதிகமாக இருந்தது.
இதன் விளைவாக, பொதுப் பிரிவு கட்-ஆஃப்-அய் விட அதிக மதிப்பெண் எடுத்தும், தங்கள் சொந்தப் பிரிவின் உயர் கட்-ஆஃப்-அய் எட்டாத காரணத் தால் பல விண்ணப்பதாரர்கள் பட்டிய லிலிருந்து நீக்கப்பட்டனர். பொதுப் பிரிவில் தேர்வான பலரை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், அவர்களுக்குத் தட்டச்சுத் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் அமர்வு, இடஒதுக்கீடு கட்டமைப்பை ரத்து செய்யவில்லை. ஆனால், பொதுப் பிரிவை ஒரு தனிப் பிரிவாக (Compartment) கருதுவது தவறு என்று சுட்டிக்காட்டியது.
சம வாய்ப்பு: ஒரு விண்ணப்பதாரர் பொதுக் கட்-ஆஃப்-அய்த் தாண்டிவிட் டால், அவரைப் பொதுப் பிரிவில் பரிசீலிக்க மறுப்பது சம வாய்ப்பை மறுப்பதாகும்.
தகுதி அடிப்படை: அதிகத் தகுதியுடைய இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரரை பொதுப் பிரிவில் சேர்ப்பது இடஒதுக்கீடு விதி அல்ல, அது தகுதியின் அடிப்படையிலான சமத்துவக் கொள்கை என்று நீதிமன்றம் கூறியது.
முதலில் தகுதி அடிப்படையில் பொதுப் பட்டியலைத் தயாரிக்குமாறும், அதன் பிறகு எஞ்சியவர்களைக் கொண்டு இடஒதுக்கீடு பட்டியலைத் தயாரிக்கு மாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சவால்கள்
உயர் நீதிமன்ற நிர்வாகம் 3 வாதங்களை முன்வைத்தது:
தேர்வில் பங்கேற்றவர்கள் பிறகு அதை எதிர்க்க முடியாது.
இடஒதுக்கீடு பிரிவினரைப் பொதுப் பிரிவில் சேர்ப்பது ‘இரட்டைப் பயன்’ அளிப்பதாகும்.
‘இடமாற்றம்’ என்பது இறுதித் தேர்வில் மட்டுமே சாத்தியம்.
உச்ச நீதிமன்றம் இந்த மூன்று வாதங்களையும் நிராகரித்தது. மதிப்பெண் வெளியான பிறகுதான் சட்டவிரோதம் தெரியவந்தது என்பதால் தேர்வர்கள் வழக்கு தொடர உரிமை உண்டு என நீதிமன்றம் கூறியது.
பொதுப் பிரிவு என்பது
ஒரு ‘கோட்டா’வா?
ஒரு ‘கோட்டா’வா?
இந்தத் தீர்ப்பின் மய்யக்கருத்து இதுதான் — பொதுப் பிரிவு என்பது ஒரு கோட்டா அல்ல. இடஒதுக்கீடு என்பது ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும்; சமூகப் பிரிவின் அடிப்படையில் ஒருவரைப் பொதுப் பிரிவிலிருந்து விலக்க அது அனுமதிக்காது. பொதுப் பிரிவை இடஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு மட்டுமேயானது எனக் கருதினால், அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான “சமூக இடஒதுக்கீடாக” மாறிவிடும்.
‘‘இரட்டைப் பயன்’’ இல்லை
இடஒதுக்கீடு பிரிவினர் இரட்டைப் பயன் பெறுகிறார்கள் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. வயது வரம்பு தளர்வு போன்ற எந்தச் சலுகையும் இன்றி, ஒரு விண்ணப்பதாரர் பொதுப் பிரிவு கட்-ஆஃப்-அய்த் தாண்டும்போது, அவர் தகுதி (Merit) அடிப்படையில் தேர்வாகிறார், இடஒதுக்கீடு அடிப்படையில் அல்ல.
இடமாற்றம் குறித்த விளக்கம்
பொதுவாக ‘இடமாற்றம்’ என்பது இறுதித் தேர்வில் நடக்கும். ஆனால் இந்த வழக்கில், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் இறுதி மதிப்பீட்டிற்கு மிக முக்கியமானவை (400-இல் 300 மதிப்பெண்கள்). எனவே, இந்த நிலையில் ஒருவரை நீக்குவது அவரை நிரந்தரமாக வெளியேற்றுவதாகும். இதை நீதிமன்றம் “தகுதியால் தூண்டப்பட்ட மாற்றம்” என்று அழைத்தது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்
தட்டச்சுத் தேர்வுக்கு முன்பே பொதுப் பட்டியலை மதிப்பெண் அடிப்படையில் முதலில் தயார் செய்ய வேண்டும்.
தகுதியால் பொதுப் பிரிவில் தேர்வாகும் ஒரு விண்ணப்பதாரருக்கு, அவரது பிரிவில் கிடைக்கக்கூடிய சிறந்த பதவி இதன் மூலம் பாதிக்கப்படக் கூடாது. தேவையெனில், ஏற்கனவே நியமிக்கப் பட்டவர்களின் பட்டியலை நிர்வாகச் சிக்கல்கள் இன்றி மாற்றியமைக்க வேண்டும்.
இறுதியாக, தகுதி என்பது ஒரு தண்டனையாக மாறிவிடக்கூடாது என்றும், இடஒதுக்கீடு என்பது அனை வரையும் உள்ளடக்கும் கருவியாகச் செயல்பட வேண்டுமே தவிர, ஒருவரைத் தகுதியற்றவராக்கும் கருவியாக இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் வலி யுறுத்தியது.
