சென்னை, ஜன. 5- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இணைய வழி மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தாட்கோ மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் சார்பில், இளங்கலை செவிலியர் பட்டம் (நர்சிங்) முடித்த சென்னையை சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணையவழி மருத்துவமனை நிர்வாகப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதற்கான செலவீனத்தை தாட்கோ ஏற்றுக் கொள்கிறது. இந்த பயிற்சியானது முதல் 2 வாரங்களுக்கு இணையவழியாகவும், அடுத்த 4 வாரங்களுக்கு அப்போலோ மருத்துவமனைகள் அல்லது அப்போலோ தொடர்புடைய பிற மருத்துவ மனைகளில் வேலைவாய்ப்புப் பயிற்சியாகவும் வழங்கப்படும்.
பயிற்சிக் காலங்களில் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்போலோ மருத்துவமனைகளிலும், அது தொடர்புடைய முன்னணி மருத்துவமனைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கு, 2022, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் செவிலியர் பட்டம் முடித்த மாணவர்கள், கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். இத்துடன் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய வழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஃபைன் எனப்படும் செவிலியர் பயிற்சியையும் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் மளிகை தொகுப்பு
வீடுகளுக்கு நேரடி விநியோகம்

சென்னை, ஜன.5- தமிழ்நாட்டில் பொங்கல் விழா வரும், 15இல் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, கூட்டுறவு துறையின் கீழ் செ யல்படும் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, 499 ரூபாய்க்கு ஒரு கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 250 கிராம் பாசி பருப்பு உட்பட ஏழு பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு மளிகை தொகுப்பு, விற்பனையை துவக்கியுள்ளது.
இந்த தொகுப்பு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரேசன் கடைகளில் விற்கப்படுகிறது. தற்போது, ‘பிலிங்கிட்’ நிறுவனத்தின் செயலி வாயிலாக, வீடுகளுக்கு விநியோகம் செய்யும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.
ஓட்டுநரின் நேர்மை!
சாலையில் கிடந்த 40 பவுன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
காரைக்கால், ஜன.5- காரைக்காலில் சாலையில் கிடந்த 40 பவுன் நகைகள் அடங்கிய பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநரை காவல் துறையினர் பாராட்டினா்.
திருநள்ளாறு காவல் நிலையத்தில் குறை கேட்பு கூட்டம் மண்டல காவல் கண்காணிப்பாளா் முருகையன் தலைமையில் 3.1.2026 அன்று நடைபெற்றது. இதில் பலா் கலந்துகொண்டு புகாா்களை தெரிவித்தனா். அப்போது கை பையுடன் இளைஞா் ஒருவா் வந்தாா். அந்த பை கீழே கிடந்ததாகவும், பையில் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருள்கள் இருப்பதாக கூறி ஒப்படைத்தாா்.
விசாரணையில் அவா், நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே உத்தூா் பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் (30) என்பதும், காரைக்காலில் உள்ள ஒரு டைல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
சரக்கு வாகனத்தில் கம்பி ஏற்றிக்கொண்டு 3.1.2026 அன்று செல்லும்போது, காரைக்கால் புறவழிச்சாலை அருகே நெடுங்காடு செல்லும் சாலை சந்திப்பில் அந்த பை கிடந்துள்ளதை எடுத்ததாகவும், அதில் தங்க நகைகள் இருந்ததால், அவற்றை இங்கு கொண்டுவந்ததாக தெரிவித்தாா்.
காவல் துறையினர் அந்த பையை திறந்து பாா்த்தனா். தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 40 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களும் இருந்தன. பையில் இருந்த முகவரியை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அது திருச்சியை சோ்ந்தவா்களுடையது என்பது தெரியவந்து, அவா்களை தொடா்புகொண்டு வரவழைத்து உறுதி செய்துகொண்டு, காவல் துறையினர் பையை ஒப்படைத்தனா்.
