சென்னை, ஜன. 5- வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் வழக்கு பணியாளராக பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக, ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மய்யம், பெண்கள் உதவி மய்யம் போன்ற சேவை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவ உதவி,ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு தேவைப்படும் ஒவ்வொரு மகளிருக்கும் உதவுவதே இந்த மய்யங்களின் நோக்கமாகும்.
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வடசென்னை ஒருங்கிணைந்த சேவை மய்யத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படை பணியிடமான வழக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணிக்கு சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 35 வயதுக்குட்பட்ட சென்னை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு தொடர்பான பணிகளில் ஓராண்டு அனுபவமும், உளவியல் ஆலோசனைகளை வழங்குவதில் முன் அனுபவமும் வேண்டும்.தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம்வழங்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன்சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ வரும் ஜன.12-க்குள் சமர்ப்பிக்க வே ண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
10 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஜன.5- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
தமிழ்நாட்டில் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையாக, கடந்த நவ.4 முதல் டிச.14ஆம் தேதி வரை எஸ்அய்ஆர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. அதன்பின் கடந்த மாதம் 19ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரியில் இல்லாதவர்கள் என 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 19 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜன.2ஆம் தேதி வரை 7.40 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி கடந்த 3.1.2026 அன்று மட்டும் 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நேற்று (4.1.2026) ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 66.44 லட்சம் பேர் விண்ணப்பிக்க வேண்டியுள்ள நிலையில், இதுவரை 10 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க ஜன.18ஆம் தேதி கடைசி நாளாகும். பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதாபிமானம்
150 பேர் உடல் உறுப்பு
கொடை வழங்க முன்பதிவு
சென்னை, ஜன. 5- மக்களின் அன்றாடப் பயணங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள், தற்போது மற்றவர்களின் வாழ்விற்கும் ஒளிவீசும் வகையில் ஒரு மகத்தான முன்னெடுப்பை எடுத்துள்ளனர்.
மனிதநேயத்தை போற்றும் வகையில், ஒரே இடத்தில் 150 ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் உடல் உறுப்புகளைக் கொடை வழங்க முன்வந்து அதற்கான முன்பதிவுப் படிவங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
முக்கிய அம்சங்கள்:
விபத்துக்கள் மற்றும் நோய்களினால் உடல் உறுப்பு செயலிழந்து உயிருக்குப் போராடும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்த ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்களை ஏந்திச் சென்றனர்.
உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமும், அரசு சுகாதாரத் துறையும் இணைந்து இந்த முகாமை ஒருங்கிணைத்தன.
