புதுடில்லி, ஏப். 26- கருநாடகத்தில் முஸ்லிம் களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில அரசின் முடிவை நடைமுறைப்படுத்த மே 9-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று (25.4.2023) உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை உச்சநீதி மன்றம் பிறப்பித்தது.
கருநாடகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப் பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 24-ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.
இந்த 4 சதவீத இடஒதுக்கீடு, ஒக்கலிகா, லிங்காயத்து சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங் கப்படும்; பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கான பிரிவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறலாம் என்று மாநில அரசு அறிவித்தது.
கருநாடகத்தில் மே 10-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறவிருக்கும் நிலையில், அதற்கு முன் பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. ஒக்கலிகா, லிங்காயத்து சமூகத்தினர், மாநிலத்தில் அரசியல்ரீதியில் செல்வாக்குமிக்கவர்களாக உள் ளனர்.
இந்நிலையில், முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (25.4.2023) மீண்டும் விசார ணைக்கு வந்தது.
அப்போது, மாநில அரசு சார் பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஒரே பாலின திரு மணத்துக்கு அங்கீகாரம் அளிக்கக் கோருவது தொடர் பான வழக்கில் அர சியல் சாசன அமர்வுமுன்பாக ஆஜராக வேண்டியிருப்பதால், இந்தவழக்கு விசாரணையை வேறொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, ‘வழக்கு விசாரணை ஏற்கெனவே 4 முறை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. எனவே, மீண்டும் ஒத்திவைக்கக் கூடாது’ என்றார். அப்போது, ‘இந்த வழக்கில் உச் சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு மனுதாரர்களுக்கு சாதகமா னதுதான்’ என்றார் துஷார் மேத்தா.
அவரது இந்தக் கருத்தை நீதி மன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட் டுக்கொண்ட துஷ்யந்த் தவே, ‘இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் தேதி வரை முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து உத்தரவு நடைமுறைப் படுத்தப்படக் கூடாது என்பதோடு, அவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி 2002- ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி பிறப்பித்த முந்தைய உத்தரவு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்றார். அதற்கு நீதிபதிகள் அமர்வு ஒப்புக்கொண்டது. அப்போது, மாநில அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய துஷார் மேத்தா கால அவகாசம் கோரினார்.
அதனைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை முஸ்லிம் களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில அரசின் முடிவை நடை முறைப்படுத்த நீதிபதிகள் இடைக் காலத் தடை விதித்தனர்.
கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (25.4.2023) கூறுகை யில், ‘நீதிமன்றத்தில் விசாரணை முடி யும் வரை முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவு நடைமுறைப்படுத்தப்படாது’ என்றார்.
விசாரணை முடியும் வரை நடைமுறை இல்லை – முதலமைச்சர்
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொம்மை, ‘நீதிமன் றம் எந்தவித இடைக்கால தடையையும் பிறப்பிக்க வில்லை. இந்த வழக்கு விசாரணை நடைபெறும் வரை, 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து முடிவு நடைமுறைப் படுத்தப்படாது என்று மாநில அரசு சார்பில்தான் உச்சநீதிமன்றத்தில் உறு தியளிக்கப்பட்டது’ என்றார்.
கருநாடகத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப் பட்டது சரியான நடவடிக்கை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கருநாடகத்தின் பாகல் கோட் மாவட்டத்தில் நேற்று (25.4.2023) பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக பேசியதாவது:
கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
வாக்கு வங்கி அரசியலுக்கு இடம் கொடுக்காமல், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய் துள்ளது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எப்போதும் ஏற்க முடியாது. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததன் மூலம் தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர், ஒக்கலிகர், லிங்காயத்து சமூகங்களுக் கான இட ஒதுக்கீட்டு அளவை பாஜக அரசு உயர்த்தியுள்ளது.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு மீண்டும் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். அப்படியென்றால், எந்த சமூகத்தின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு தரப்போகிறார்கள் என்று கேள்வியெழுப்பினார்.