உத்தரகாண்ட் பெண்கள் நலத்துறை அமைச்சரின் கணவர் கொச்சைப் பேச்சு
பீகார், ஜன. 4– பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேகா ஆர்யா உள்ளார்.
ரேகா ஆர்யாவின் கணவர் கிரிதாரி லால் சாஹுவும் பா.ஜ.க.வில் முக்கிய தலைவர் ஆவார். அவர் பீகார் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக பேசிய காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டின் அல்மோராவில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கிரிதாரி லால் சாஹு கலந்து கொண்டார்.
அப்போது அங்கிருந்த இளைஞர் களிடம் திருமணத்தைப் பற்றிப் பேசிய அவர், “உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்திலா திருமணம் செய்யப் போகிறீர்கள்? கவலைப்படாதீர்கள், உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் பீகாரிலிருந்து உங்களுக்குப் பெண் அழைத்து வருவோம். அங்கே ரூ.20,000 முதல் ரூ.25,000 கொடுத்தால் பெண் கிடைக்கும்” என்று பேசியுள்ளார்.
பீகாரின் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள், பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை இது காட்டுவதாகக் குற்றம் சாட்டி யுள்ளன.
