‘இசைமுரசு’ நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘இசைமுரசு’ ஹனீபா  எப்படி  தடம் மாறாமல் இருந்தாரோ, தடுமாறாமல் இருந்தாரோ, அதுபோல, நீங்களும் இந்தச் சமுதாயத்துக்காக மட்டுமல்ல; இனி வரக்கூடிய தலைமுறையினுடைய பாதுகாப்புக்காக ஒன்றுபட்டு நில்லுங்கள்!

உங்களுக்கான பாதுகாப்பு திராவிட இயக்கத்தை விட்டால்,
‘திராவிட மாடல்’ ஆட்சியை விட்டால், வேறு எங்கும் கிடைக்காது!

சென்னை, ஜன.4 ‘‘இசைமுரசு’ ஹனீபா  எப்படி  தடம் மாறாமல் இருந்தாரோ, எப்படி அவர் தடுமாறாமல் இருந்தாரோ, அதுபோல, நீங்களும் இந்தச் சமு தாயத்துக்காக மட்டுமல்ல; இனி வரக்கூடிய தலை முறையினுடைய பாதுகாப்புக்காக ஒன்றுபட்டு நில்லுங்கள்! ஒன்றுபட்டு நில்லுங்கள்!! இந்த தலைவரை விட்டால் வேறு எந்தத் தலைவராலும் இந்தப் பாதுகாப்பு கிடைக்காது. இந்த இயக்கத்தை விட்டால், இந்த ஆட்சியை விட்டால், வேறு எந்த நல்லதொரு வாய்ப்பும் கிடைக்காது. இந்த உணர்வை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

24.12.2025 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  ‘இசைமுரசு’ நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

வரலாறு படைத்திருக்கிற தமிழ்நாடு!

இந்த விழா பொலிவு மிகுந்த விழா! இந்த அழைப்பிதழில் பெயர்ப் பட்டியலைப் பாருங்கள்; இந்த மேடையைப் பாருங்கள்; சமூக ஒருங்கிணைப்பு என்று சொன்னால்,  இப்படி ஒரு சிறந்த அமைப்பு முறை இருக்கக்கூடிய சுயமரியாதை நாடான தமிழ்நாட்டில் கலகங்கள் செய்துவிடலாம்; மக்களைப் பிரித்து விடலாம் என்று நினைக்கிறவர்கள், இதைக் கண்ட பிற்பாடு புத்தி பெற வேண்டிய ஓர் அற்புதமான  நிகழ்ச்சி; இது நாகூர் ஹனீபா அவர்களுக்கு நூற்றாண்டு விழா என்பது மட்டுமல்ல; இசைமுரசு தட்டினால், முரசு கொட்டினால் போருக்கும் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி, வாழ்ந்திருக்கிற  வரலாறு படைத்திருக்கிற தமிழ்நாடு.

மதத்தால் ஒருபோதும் பிரிந்திருக்கவில்லை!

ஆனால், இந்தப் போர், யாரும் இரத்தம் சிந்தும் போராக ஆகாது; உண்மைகளுக்காக, நியாயங்க ளுக்காக அறப்போரை எங்கள் முதலமைச்சர் எப்போது நடத்தினாலும் நாங்கள் எல்லோரும் ஒன்று; மதத்தால் நாங்கள் மாறுபட்டு இருக்கலாம்; மனதால் எப்போதும் ஒன்றுபட்டவர்கள். எங்களைப் பிரிக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அற்புதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. சிறப்பான நூல்களை இங்கே வெளியிட்டார்கள். இந்த சமுதாயம், திராவிட இயக்கத்தோடு என்றைக்கும் கலந்த ஒரு சமுதாயம்; இன்றைக்கு, நேற்றல்ல; இது வாக்குக்காகவும் அல்ல; ஒருங்கிணைந்து பணி செய்வோம் என்று வரவேற்புரையாற்றிய அய்யா ஹனீபா அவர்கள் சொன்னார்கள். ஒருங்கிணைந்து நீண்ட காலமாயிற்று; எதில்? திராவிட இயக்கத்திலே அனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம்! இங்கே மதத்தால் ஒருபோதும் பிரிந்திருக்கவில்லை. இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சர்,  இந்து அறநிலையப் பாதுகாப்புக்கு மட்டுமல்ல; இந்த நாட்டில் இருக்கிற மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பாளர் என்று சொல்லக்கூடிய உணர்வைப் பெற்றுள்ளார்.

காரணம், இந்த முதலமைச்சர், எங்கள் முதலமைச்சர், பெருமைக்குரிய முதலமைச்சர். இது தந்தை பெரியார் அவர்கள் மதவெறி மாய்த்து உருவாக்கிய மனிதநேயத் திட்டம். பேரறிஞர் அண்ணா அவர்கள் விரிவாக்கிய திட்டம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இதை என்றைக்கும் காத்து வந்துள்ள திட்டம். இவற்றை எல்லாம் கலவையாக நின்று, ஒரு சேர பார்க்க வேண்டுமானால்,  நம்முடைய முதலமைச்சர்தான் தெரிகின்றார். அவர் தான் பதவியேற்றுக் கொண்ட போது உச்சரித்தார் அல்லவா, ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’’ என்று. அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர், அவர் எத்தனை நூற்றாண்டு விழாக்களை நடத்தி இருக்கிறார். அவருடைய ஆட்சியிலே நூற்றாண்டு விழாக்களுக்குப் பஞ்சமே இல்லை. பெருமைப்படுத்த வேண்டியவர்களை எல்லாம் அடையாளம் கண்டு, பெருமைப்படுத்தக்கூடிய வாய்ப்பும், திறனும், மனதும் தெளிவாக பெற்றவர்கள்.  அதன் காரணமாகத்தான் நண்பர்களே, மிகப்பெரிய அளவிற்கு இந்த நூற்றாண்டு விழா!

இ.எம்.ஹனீபா பெயரில் ஒரு பெரிய பூங்காவைத் திறந்து வைத்திருக்கிறார்கள்!

நேற்று கூட நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் நாகூரிலே சிறப்பாக இ.எம்.ஹனீபா அவர்கள் பெயரில் ஒரு பெரிய பூங்காவைத் திறந்து வைத்திருக்கிறார். அவருடைய பெயர் என்பது வரலாற்றில் நிலைபெற்ற ஒன்று என்று சொல்லக்கூடிய அளவிற்கு திறந்து வைத்திருக்கிறார்கள். எப்படி, ஆழமான இயக்க உணர்வோடு ‘இசைமுரசு’ வந்தார்கள் என்ற வரலாற்றை, இன்றைக்கு முதலமைச்சர் வெளியிட்டு இருக்கிற நூலிலே பதிவு செய்திருக்கிறார்கள். அதை கூட நேற்று துணை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவருக்கு எப்படி திராவிட இயக்கத்தோடு தொடர்பு வந்தது என்பதை மிக அழகாக  சொன்னார்கள்.

எங்கள் கொள்கை உறவுக்கு நூற்றாண்டு!

எனவே, ‘இசைமுரசு’ நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது, திராவிட இயக்கத்தின் தலையாய கடமைகளிலே ஒன்று, அதைப் பெருமையோடு நாங்கள் நினைக்கிறோம். சிறப்புள்ள ஒருவருக்கு நூற்றாண்டு விழா என்பது அல்ல; எங்கள் உறவுக்கு நூற்றாண்டு! எங்கள் கொள்கை உறவுக்கு நூற்றாண்டு! என்றைக்கும் பிரிக்க முடியாத சகோதரர்களுக்கு உரிய நூற்றாண்டு என்ற பெருமையைப் பெற வைத்திருக்கிறார். பச்சை அட்டைக் ‘குடிஅரசு’தான் எல்லோருக்கும் மிகப்பெரிய பாட புத்தகமாகும்.  அந்தப் பச்சை அட்டை குடிஅரசை, தன்னுடைய தந்தை மலேசியாவிலே பணியாற்றிய போது, ஈரோட்டில் இருந்து வரக்கூடிய அந்த பத்திரிக்கையை இங்கே இருந்து வாங்கி, அவர் தன்னுடைய தந்தைக்கு ஒவ்வொரு முறையும் அந்த ஏட்டை அனுப்புவதற்கு முன்னாலே, நம்முடைய இசைமுரசு அவர்கள் – தான் படித்து,  தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர். இசையிலும்கூட எந்த இசைக்கல்லூரியிலும் அவர் பட்டம் பெற்று வெளியே வரவில்லை; ஆனால், இயற்கையாக தன்னைத் தானே செதுக்கி கொண்ட ஓர் அற்புதமான மாமனிதர். அந்த ஏட்டை வாங்கி அனுப்புகிற போது, அதை படித்து, படித்துத்தான் எனக்கு இயக்க உணர்வுகள் வந்தன என்பதை, இங்கே வெளியிட்டிருக்கிற மலரிலே அவர் கூறியுள்ளதை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். மலரை தொகுத்த நண்பர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள், வாழ்த்துகள்!

இந்த நூற்றாண்டு விழாவில், எங்களைப் போன்ற வர்கள் கலந்து கொள்கின்ற நேரத்தில், எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி. ஒரு தனி உவகை. இங்கே ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சொன்னபடி, இயக்க வரலாறான தன் வரலாறு – ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்று நான் எழுதிக் கொண்டுள்ள நூலில், சில வரலாற்றுக் குறிப்புகள்.

1945 –திருவாரூரில்
கலைஞர் நடத்திய மாநாடு!

அந்த வரலாற்றுக் குறிப்புகளிலே மாணவ பருவப் பிரச்சாரம் என்ற முறையில் ஒரே ஒரு செய்தி. உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும்; 80 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சம்பவம். கலைஞர் 15.1.1945 இல்  அன்றைக்கு இளைஞர்; அவருக்கு  25 வயது.  எனக்கு 11 வயது. இப்படிப்பட்ட இளைஞர்களை எல்லாம் அழைத்து, திருவாரூரிலே கலைஞர் மாநாடு நடத்துகிறார். அந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு, மாநாடு நடைபெறப் போகின்ற நேரத்தில், தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுகிறார். அப்படி வரும்போது, மாநாடுகளில், பாடல்கள் பாடுவது என்பது முதல் வழக்கம்.  இந்த நிகழ்வை ‘குடிஅரசு’ இதழில் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னிசை பாடியோர் பட்டியலில்  இடம்பெறும் ஹனீபா யார் தெரியுமா? இன்று இசை உலகில் தனக்கென்று தனித்த ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள்தான். அப்போது நான்  நமது இயக்க மேடைகளில் பாடுவது, அவரது தொடக்கம் எனலாம். பாடியவர் பட்டியலில் நானும்;  நினைத்தால் சிரிப்பு வருகிறது. கழகப் பாடல்களை எல்லாம் இசையுடன் பாடுவது அன்றைக்கு வழக்கம். ஆகவேதான், திருவாரூரிலே அந்த மாநாட்டிலே பாட ஆரம்பித்திலிருந்து தொடர்ந்து அவர் செய்த இயக்கப் பணிகள் உண்டு. அப்படிப்பட்ட ஒர் உறவு, இந்த சமுதாயத்தோடு – நீண்ட காலமாக! இன்றைக்கு மட்டுமல்ல, இந்தத் திராவிட இயக்கத்தின் பேச்சாளர்கள் பட்டியலை எடுத்து கொண்டால், இஸ்லாமிய சகோதரர்கள் ஏராளம் இருப்பார்கள். அப்படி முழுக்க முழுக்க தங்களை ஒப்படைத்துக் கொண்டு வந்தவர்கள் பெயரைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்; முதலமைச்சர் அவர்களுடைய உரையை கேட்க வேண்டும்; அவரை காக்க வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் விரைந்து சில செய்திகளை சொல்லுகிறேன்.

என்றைக்கும்  தடுமாறாதவர் மட்டுமல்ல;
தடம் மாறாதவர் நாகூர் ஹனீபா!

இந்த சூழ்நிலையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய ஒவ்வொரு பாடலையும், சிம்மக் குரலிலே தான் அவர்கள் முழங்கினார்கள். முதுமை அவரை வாட்டவில்லை;   என்றைக்கு அந்தக் குரல் தொடர ஆரம்பித்ததோ, இறுதிவரை அவரது குரலிலே தடுமாற்றம் இல்லை. குரலிலும் தடுமாற்றம் இல்லை; கொள்கையிலும் தடுமாற்றம் இல்லை; தலைமையிலும் தடுமாற்றம் இல்லை. என்றைக்கும்  தடுமாறாதவர் மட்டுமல்ல; தடம் மாறாதவர் நாகூர் ஹனீபா அவர்கள். தடுமாறாத உணர்ச்சிப் பெற்று, தடம் மாறாத ஒருவராக அவர் வாழ்ந்து வந்திருக்கிறார். அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுவது என்பது அவருக்காக அல்ல; அவரைப் போன்று வாழ்ந்து காட்டுங்கள் என்பதற்காக! எனவே, அவருடைய பெருமைகளை ஏராளமாகச் சொல்லி கொண்டே போகலாம்.

ஹனீபா அவர்களுடைய நூற்றாண்டு விழாவில், நாம் எடுக்க வேண்டிய சூளுரை!

அதைவிட அடுத்து மிக முக்கியம், இங்கே வரவேற்புரை ஆற்றிய நம்முடைய அருமைச் சகோதரர் அவர்கள் ஒன்றை சொன்னார். இந்தக் காலகட்டம் மிக முக்கியமானது. ஹனீபா அவர்களுடைய நூற்றாண்டு விழாவிலே, நாம் எடுக்க வேண்டிய சூளுரை, அது மிக முக்கியமானதாகும். இந்தச் சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய ஒரு சவாலை, சந்திப்பதற்கு, இந்தச் சமுதாயம் மட்டும் அல்ல; இந்த முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என்ற பெருமையை விட, உங்களுக்கு, நமக்கு வேறு வாய்ப்பு கிடையாது.

இந்த உணர்வை ஒவ்வொருவருக்கும்
எடுத்துச் சொல்லுங்கள்!

ஆகவேதான், இப்படிப்பட்ட ஒருவருடைய தலைமையை எவ்வளவு பலப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதியை எடுக்கும் நாளாக இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த இயக்கம், நாளுக்கு நாள் – சிறுபான்மை சமூகத்தைப்பற்றி சிந்தித்த வண்ணம் உள்ளது. சிறுபான்மையினர் வாழ முடியாது என்று மற்ற பகுதிகளிலே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பலமாகப் பாதுகாப்பாக இருப்பது என்பது தமிழ் மண்ணிலே. யாரும் அசைத்துவிட முடியாது. அந்த வகையிலேதான் இந்தச் சமுதாயம் திசை, தடுமாறக்கூடாது. எப்படி  தடம் மாறாமல் ஹனீபா இருந்தாரோ, எப்படி அவர் தடுமாறாமல் இருந்தாரோ, அதுபோல, நீங்களும் இந்தச் சமுதாயத்துக்காக மட்டுமல்ல; இனி வரக்கூடிய தலைமுறையினுடைய பாதுகாப்புக்காக ஒன்றுபட்டு நில்லுங்கள்! ஒன்றுபட்டு நில்லுங்கள்!! இந்த தலைவரை விட்டால் வேறு எந்தத் தலைவராலும் இந்தப் பாதுகாப்பு கிடைக்காது. இந்த இயக்கத்தை விட்டால், இந்த ஆட்சியை விட்டால், வேறு எந்த நல்லதொரு வாய்ப்பும் கிடைக்காது. இந்த உணர்வை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். சில நேரங்களிலே பட்டாம் பூச்சிகளை நம்பாதீர்கள். வானவில் என்று சொன்னால், அது சில நேரங்கள்தான் நீடிக்கும்; ஆனால், வானமே இவர்தான். எனவே, வானவில் அல்ல; ஆகவே புரிந்து கொள்ளுங்கள்!

மானத்தைக் காப்போம்! முரசைக் கொட்டுவோம்!

வானம் நிரந்தரம்! வானவில் நிரந்தரம் அல்ல! எது வானவில்? எது வானம்? புரிந்து கொள்ளுங்கள்! வானத்தையும் பாருங்கள்; நம் மானத்தையும் பாருங்கள்! அது மிக முக்கியமானது. இரண்டும் முக்கியம். மானத்தைக் காப்போம்! முரசைக் கொட்டுவோம்! முரசு பயின்றால், ஒலி பயின்றால் காதிற்கு மட்டும் இனிமை இல்லை; கருத்துக்கும் கூட அது தெளிவான செய்தி!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *