ஆரியத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, மூடநம்பிக்கைகளை எதிர்த்து,
அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்த முயற்சி புரட்சிகரமனது!
தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் இயக்கம் – இதன் தாக்கமே!
மராட்டிய மண்ணில் நடந்த
சமூக நீதிப் பெருங்குரல்!
சமூக நீதிப் பெருங்குரல்!
திருப்பு முனையைச் சுட்டிக்காட்டி
கழகத் தலைவர் ஆசிரியர் உரை வீச்சு!
கழகத் தலைவர் ஆசிரியர் உரை வீச்சு!
மும்பை, ஜன.4 மாமனிதர் ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே, சாகுமகராஜ் ஆகியோரை நினைவு கூர்ந்தும், ”இவர்களின் தாக்கமே தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாகக் காரணமானது” என்றும் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுவாய்க்கான மூல காரணத்தை சுட்டிக்காட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மும்பை மாநாட்டில் எழுச்சி உரை ஆற்றினார்.
- ஆரியத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, மூடநம்பிக்கைகளை எதிர்த்து,
- அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்த முயற்சி புரட்சிகரமனது!
- தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் இயக்கம் – இதன் தாக்கமே!
- மராட்டிய மண்ணில் நடந்த சமூக நீதிப் பெருங்குரல்!
- திருப்பு முனையைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் ஆசிரியர் உரை வீச்சு!
- தோழர்கள் உரை!
- தீர்மானங்கள் நிறைவேற்றம்!
- தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி பெற்றே தீரும்!
- தமிழ்நாட்டிலிருந்து பங்கு பெற்ற பேராளர்கள்!
மும்பை பெருநகரத்தில் பாண்டூப் பகுதியில் உள்ள கல்வித் தந்தை தேவதாசன் உருவாக்கிய “பிரைட் உயர்நிலைப் பள்ளியில், கல்வித் தந்தை தேவதாசன் அரங்கத்தில் நேற்று (3.1.2026) அன்று மாலை 5.30 மணியளவில், “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இரண்டும் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து இன்று வரை தொடர் வண்டி மற்றும் விமானப் பயணம் என 50 க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். மாலை 5.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மும்பை ’பவாய்’ பகுதியிலிருந்து மாநாடு வளாகத்திற்கு வந்து சேர்ந்தார். மும்பையைச் சேர்ந்த “இடி, மின்னல் தாரை தப்பட்டை இசைக்குழுவினர் அதிரடி இசை மூலம் கழகத் தலைவரை எழுச்சிகரமாக வரவேற்றனர். பிரைட் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர், திருவள்ளுவருக்கு மரியாதை செய்துவிட்டு, அரங்கத்தினுள் நுழைந்தார். இரண்டு பக்கமும் இருந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திராவிடர் கழகத் தலைவருக்கு எழுந்து நின்று உள்ளன்புடன் மரியாதை செய்தனர். பதிலுக்கு ஆசிரியர் புன்முறுவலுடன் அனைவருக்கும் இரு கை கூப்பி வணக்கம் செலுத்தியவாறு அதே உற்சாகத்துடன் மேடைக்கு வருகை தந்தார்.
தோழர்கள் உரை!
மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். செயலாளர் ஜெ.வில்சன் அனை வரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். தொடர்ந்து மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தோழர்கள் ம.தயாளன், சோ.ஆசைத்தம்பி, சிவக்குமார் சுந்தர்ராஜன், எம்.இராமச்சந்திரன், ந.வசந்தகுமார், மாறன் ஆரியசங்காரன், டென்சிங் ஆரோக்கியதாஸ், பெரியார் பாலா ஆகியோர் முன்னிலை வகித்துப் பெருமை சேர்த்தனர். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இடையுரையுடன், தந்தை பெரியாரின் கொள்கையை விளக்கும் அனிமேசன் காணொலி ஒன்று திரையிடப்பட்டது. தொடர்ந்து, படக்காட்சிகள் மூலம் பெரியார் உலகத்தின் அருமை பெருமைகளை விளக்கியும், மும்பை மாநாட்டை வாழ்த்தியும் பேசினார். தொடர்ந்து மும்பை – இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், மும்பை புறநகர் தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் அலிசேக் மீரான், மும்பை தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் ம.சேசுராசு, கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்து மாநாட்டை வாழ்த்திப் பேசினர். கழக தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.
முன்னதாக கழகத் தலைவர், சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மலர் செல்வின், சுகுணா அன்பழகன் ஆகியோர் முறையே சாவித்திரிபாய் ஃபூலே, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் உருவப்படங்களை அரங்கில் உள்ளோரின் பலத்த கைதட்டல்களுக்கிடையே திறந்து வைத்தனர். அதேபோல, பெரியார் என்.வி.சண்முகராஜன், ஆ.பாலசுப்பிரமணியம், கு.தர்மலிங்கம், இரா.ஒம்பிரகாஷ் (புனே) ஞான.அய்யாப்பிள்ளை, எஸ்.பி.செழியன் ஆகியோருக்கு, ”பெரியார் விருது” வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை சூட்டி நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார்கள். அதைத்தொடர்ந்து, வி.சி.வில்வம் தொகுத்த “கொள்கை வீராங்கனைகள்” நூல் அறிமுகம் செய்யப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில், 100 மகளிர் தோழர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நூல்களைப் பெற்றுக்கொண்டனர். அனைவரும் கழகத் தலைவருடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தொடர்ந்து மாநாட்டின் மிகமுக்கிய நிகழ்வாக எட்டு தீர்மானங்கள் வடிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. திராவிடர் கழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய பாந்தரா தோழர் பாஷியம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செய்தனர். மகாராட்டிரா அரசைப் போல், தமிழ்நாடு அரசும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை வழங்க வழிவகை காண வேண்டும் என்றும், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை ஒன்றிய அரசு நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முன்பிருந்தபடியே ஒன்றிய அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் சமஸ்கிருதத்தில் இருப்பதை மாற்றி அந்தந்த மாநில் மொழிகளில் வெளியிட வழி செய்யப்பட வேண்டும் என்றும், நீதிபதி பணிகளில் எல்லா பிரிவினருக்கும் சமூகநீதிப்படி இட ஒதுக்கீடுபடி நிரப்பப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்றும், சு.குமணராசன் 8 தீர்மானங்களை முன்மொழிந்தார். ஒட்டுமொத்த அரங்கத்தினரும் இணைந்து கையொலி செய்து அதை வழிமொழிந்து நிறைவேற்றித் தந்தனர்.

அதைத் தொடர்ந்து, மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர். அத்துடன் மும்பை தி.மு.க. தோழர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், ஜோதிராவ் ஃபூலே, சாவிரித்திரிபாய் பூலே ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடுவில் இருக்கும் ஒளிப்படம் மற்றும் பூச்செண்டு வழங்கி மரியாதை செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மும்பை மாநாட்டுப் பொறுப்பாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து மும்பை இலக்கிய அணி சார்பில் தமிழ்நேசன் மரியாதை செய்தார். மும்பை செழியன் மலர்மாலை அணிவித்து மகிழ்ந்தார். பள்ளி வளாகத்தின் சார்பில் அம்பேத்கர் தொகுப்பு நூல் வழங்கப்பட்டது. மும்பை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் மும்பை திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவருக்கு ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே சிலைகள் வழங்கப்பட்டன. மும்பை பெரியார் பிஞ்சுகள் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர். கோவிட் 2021 சமயத்தில் கழகத் தலைவர் மூலமாக காணொலி நிகழ்ச்சிகளில் பெயர் சூட்டப்பட்ட மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலாவின் மகள் குழந்தை மகிழினி மற்றும் இரா.ச.ராஜேந்திரன் தனது பெயர்த்தியுடன் உண்டியலுடன் சேர்த்து ரூபாய் 15,000/- கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். கழகத் தலைவர் மிகவும் உற்சாகமாகவும், இன்முகத்துடனும் அனைத்தையும் ஏற்று மகிழ்ந்தார். இறுதியாக கழகத் தலைவர் இரவு 8.20 மணிக்கு உரையாற்றினார்.
அவர் தமது உரையை, ”இந்த மாநாட்டில் மும்பை, தமிழ்நாட்டுப் பேராளர்களால் அரங்கம் நிரம்பி வழிகின்றது போல், என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது” என்ற உவமையுடன் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினார். தொடர்ந்து, ”மாராட்டிய மண்ணிலே சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவது பெருமைக்குரியது” என்றார். அதற்கான காரணங்களாக, மாமனிதர் ஜோதிர்ராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே, சாகுமகராஜ் ஆகியோரின் தொண்டை நினைவு கூர்ந்தார். ”இவர்களின் தாக்கம்தான் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தது” என்று சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுவாய்க்கான மூல காரணத்தைக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், “பெரியாரின் பொது வாழ்க்கை தலைகீழானது. தான் வகித்து வந்த 29 பதவிகளிலிருந்து ஒரு கையெழுத்து மூலமாக பதவி விலகிவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்தவர்” என்றும், “பொது வாழ்க்கைக்கு வருகிறவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும்” என்றும் தந்தை பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டார். மேலும் அவர், “சுயமரியாதை இயக்கம் பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கும் நாங்கள் மும்பை மண்ணில் இருந்து சொல்கிறோம். இன்றைக்கு வரலாற்றின் பெருமைக்குரிய நாள்; சாவித்திரிபாய் ஃபூலே அவர்களின் 196 ஆம் பிறந்தநாள் இன்று (3.1.2026)’’ என்று உச்சரித்ததும் கையொலிகளால் அரங்கம் அதிர்ந்தது. மேலும் அவர், “ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே இரண்டு பேரும், ஆரியத்தை எதிர்த்து, வேதத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று செய்த புரட்சி சாதரணமானது அல்ல” என்று சொல்லத் தொடங்கி முடிக்கும் வரை பலத்த கைதட்டல்கள் தொடர்ந்து அரங்கை அதிரவைத்தது.
தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி பெற்றே தீரும்!
மேலும் அவர், தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி பெற்றே தீரும் என்பதைச் சொல்லிவிட்டு, “உத்தமமான தலைமை! உறுதியான கொள்கை! நாணயமான தொண்டர்கள்! யோக்கியமான பிரச்சாரகர்கள்! இந்த நான்கும் இருந்தால் வெற்றி உறுதி” என்று சொல்லி, சுயமரியாதை இயக்கம் வெற்றி மேல் வெற்றி பெற்று வருவதற்கான இலக்கணத்தை சுட்டிக்காட்டினார். மேலும் அவர், சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே, தந்தை பெரியார் கலந்துகொண்ட வைக்கம் போராட்டத்தை நினைவுபடுத்தி, ”முதலில் கோயில் தெருக்களில் நடக்கப் போராட்டம், அடுத்து கோயிலுக்குள் நடக்கப் போராட்டம்; பின்னர் கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை செல்லப் போராட்டம்; அதற்கும் அடுத்து கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம். அதுவும் சாதாரணமாக அல்ல, 50 ஆண்டுகால சட்டப் போராட்டம்” என்று காங்கிரஸ்; சுயமரியாதை இயக்கம்; திராவிடர் கழகம்; திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒட்டுமொத்த திராவிடர் இயக்கம் ஜாதி ஒழிப்பில் காட்டிய அசாத்திய அக்கறையை; செயல்பாட்டை பட்டியலிட்டார். அதனால் பெற்ற பயன்களாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பெற்று, உலகெங்கிலும் சென்று அறிவுப்புலத்தில் கோலோச்சுகின்ற தமிழர்களை சுட்டிகாட்டினார். தொடர்ந்து, சத்ய ஜோதக் சமாஜம் பற்றியும், ஒரு சமூகத்தின் தலைவராக தவறாகக் கொண்டாடப்படும் உலக அறிவாளி அம்பேத்கர் 1938 இல் எழுதிய கட்டுரை பற்றியும், அது மாநாட்டில் வெளியிட முடியாத சூழலையும், ஆங்கிலத்தில் இருந்த அக்கட்டுரையை தந்தை பெரியார்தான் தமிழில் மொழிபெயர்த்து, ”ஜாதியை ஒழிக்க என்ன வழி” என்ற பெயரில் வெளியிட்டதையும் சுருக்கமாகக் கூறினார். தொடர்ந்து, “இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல்தான் இன்றைய இளைஞர்கள் மின்மினிப் பூச்சிகளை மின்சாரமாகக் கருதுகின்றார்கள்” என்று நாகரிகமாக புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் தொண்டர்களை விமர்சனம் செய்தார்.

திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கு நேர் எதிரான ஆர்.எஸ்.எஸ். பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை அவர். மேலும் “சுயமரியாதை இயக்கம் தான் நமக்கு மானத்தையும், அறிவையும் கொடுத்த இயக்கம். அது இன்றைக்கு உலகெங்கிலும் பரவி வருகிறது. விஞ்ஞானத்தை யாராவது தடுக்க முடியுமா? அதுபோலத்தான் பெரியாரின் கொள்கைகளை உலகமயமாவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே, ஜாதியை; மூடநம்பிக்கைகளை; பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டி, அனைவருக்கும் அனைத்தும் என்ற இலக்கை அடைந்தே தீருவோம்” என்று சூளுரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
கழகத் தலைவரின் உரை நிறைவடைந்ததும் மும்பை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இ.அந்தோணி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி மிகச்சிறப்பாகவும், மனநிறைவாகவும் ஏற்பாட்டாளர்களுக்கும் கலந்துகொண்ட பேராளர்களுக்கும் அமைந்தது. அனைவருக்கும் சுவையான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் வந்திருந்தவர்கள் சிறிது வயிற்றுக்கும் ஈந்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து பங்கு பெற்ற பேராளர்கள்!
நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுப் பேராளாளர்களாக தோழர்கள் சோமசுந்தரம், மோகன், மீனாம்பாள், ஜெயராமன், தமிழினியன், மணிகண்டன், சின்னதம்பி, அமுதா, மதுபாலா, த.மரகதமணி, நா.பார்த்திபன், இறைவி, பூவை செல்வி, இசையின்பன், பசும்பொன் செந்தில்குமாரி, முத்தையன், நாகவள்ளி, நூர்ஜஹான், தேன்மொழி, காமராஜ், பெரியார் செல்வி, சி.வெற்றிச்செல்வி, கவுதமி, வளர்மதி, உமா, செல்வராஜ், முகப்பேர் செல்வி, முரளி, கீதா, தளபதிராஜ், வை.கலையரசன், கார்த்திகேயன், அன்புமதி, மூர்த்தி, நவீன்குமார், இளவழகன், ஆர்.டி.வீரபத்திரன், பாண்டு, கலைச்செல்வன், திருவேங்கடம், தாமோதரன், துரை.இராவணன், உத்ரா, ராஜவர்மன், சீ.லட்சுமிபதி, ராஜா, அசோக் நாகராஜன், தியாக முருகன், மாணிக்கம், பொ.நாகராஜன், கோ.தங்கமணி, தனலட்சுமி, நாத்திகன், எல்லப்பன், இ.தமிழ்மணி, நன்னன், இனியன், சுகந்தி, லட்சுமிபதி, இளவழகன், உடுமலை வடிவேல், புகழேந்தி ஆகியோரும், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மும்பை இளங்கோ அப்பாதுரை, ஆரே காலனி பாண்டு, அ.கண்ணன், மு.கணேசன், காரை கரு.ரவீந்திரன், பூ.சு.அழகுராஜா, கி.அறிவுமலர், அரண்செய் மகிழ்நன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சென்னையில் இருந்து கொண்டு வந்திருந்த இயக்கப் புத்தகங்கள் விற்பனையை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, த,மரகதமணி, நா.பார்த்திபன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முதல் நாளில் ரூபாய் 9,000/- க்கு மேல் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது.
