சிவகங்கை, ஜன. 3- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் பகுதியில், பெண் சாமியார் ஒருவர் 7 அடி உயர முள் படுக்கையில் அமர்ந்து ‘அருள் வாக்கு’ கூறிய சம்பவம், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மண்டல பூஜையை முன்னிட்டு, சாமியார் நாகராணி என்பவர் கத்தாழை, சப்பாத்திக் கள்ளி, கருவேல முள் ஆகியவற்றால் செய்யப்பட்ட 7 அடி உயர படுக்கையில் அமர்ந்து தவம் மேற்கொள்வதாகக் கூறி இந்த ஆண்டும் 45 நாட்கள் விரத மிருந்தாராம்.
முள்கள் மீது அமர்வது உடல் எடையை சீராகப் பகிர்ந்து (Pressure Distribution) அமரும் நுட்பம் சார்ந்தது இதை செய்ய கடுமையான விரதம் இருக்கத்தேவையில்லை. இன்றும் புதர்க்காடுகளில் முள்களின் மீது ஆடுகள் உள்ளிட்ட விலங்குகள் சாதாரணமாக ஏறுவதும், களைப்படைந்தால் முள்புதர் செடிகளின் மேலேயே படுத்து உறங்குவதும் நாம் அன்றாடம் பார்க்கும் ஒன்றுதான்
ஒருபுறம் உலகம் ‘நானோ-நியூட்டோனியன்’ (Non-Newtonian) தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மனிதன் உறங்கும் போது அவனது உடல் எடைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, ஆழ்ந்த உறக்கத்தையும் உடல் நலத்தையும் பேணும் ‘ஸ்மார்ட் மேட்ரஸ்’ (Smart Mattress) சந்தைக்கு வரத் தயாராகிவிட்டன.
விண்வெளிக்கு சுற்றுலா செல்லவும், செயற்கை நுண்ணறிவு மூலம் நோய்களைக் குணப்படுத்தவும் மனிதன் முயன்று வரும் சூழலில், இன்னும் இதுபோன்ற உடல் வருத்தும் சடங்குகள் செய்தியாக்கப்படுவது படு முட்டாள்தனம்!
தொழில்நுட்பம் நம் கைகளில் உலகைக் கொடுத்துவிட்ட போதிலும், இன்னும் பல கிராமங் களில் இதுபோன்ற பழமைவாதச் சடங்குகள் மக்களின் நம்பிக் கையை மூலதனமாக வைத்துத் தொடர்கின்றன. அறிவியல் பார்வை மக்களிடையே ஆழமாகச் சென்றடையாத வரை, இது போன்ற ‘முள் படுக்கை’ காட்சிகள் தொடர்கதையாகவே இருக்கும்.
