தமிழ்நாட்டில் தவறான பாதையில் செல்லும் சிறுவர்களை மீட்க புதிய முயற்சி
காவல்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை, ஜன. 3- தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை அதிரடி ‘சர்வே’ ஒன்றை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை நான்கு சிறார்கள் அரிவாளால் வெட்டி, அதை சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கக் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினரிடம் 13 கேள்விகள் அடங்கிய குறிப்பேடு வழங்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான சிறார்களைக் கண்டறிந்தால், அவர்களின் பெற்றோரைச் சந்தித்து காவல்துறையினர் கீழ்க்கண்ட முக்கியத் தகவல்களைச் சேகரிக்கின்றனர்:
நடத்தை மாற்றம்: சிறார்கள் அறையைப் பூட்டிக்கொண்டு தனியாக இருக்கிறார்களா?
ரகசியப் பேச்சு: தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்பு வரும்போது விலகிச் சென்று பேசுகிறார்களா?
ஆவேசம்: பெற்றோரிடம் முரட்டுத்தனமாகவோ அல்லது நீண்ட நாட்களாகப் பேசாமலோ இருக்கிறார்களா?
பணப் புழக்கம்: வழக்கத்திற்கு மாறாக அதிகப் பணம் கேட்கிறார்களா? மது, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனரா அல்லது இரவு தாமதமாக வீட்டிற்கு வருகிறார்களா?
புதிய பொருட்கள்: பெற்றோரிடம் சொல்லாமல் வாங்கிய பொருட்களை மறைத்து வைக்கிறார்களா? பெற்றோர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், அந்தச் சிறார்களின் குணநலன்கள் ஆய்வு செய்யப்படும். ஒருவேளை அவர்கள் தவறான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டால், பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் (Counseling) வழங்கி, அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கக் கட்டணம் உயர்வு
ஒன்றிய அரசின் சுரண்டல்!
திண்டுக்கல், ஜன.3- புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் கொடைக்கானல் நகராட்சி எல்லைக்குள் நுழையும் அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அமைந்துள்ளது. பன்னாட்டு அளவில் கொடைக் கானல் புகழ்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.
கொடைக்கானல் குளிருக்கு பெயர் பெற்றது. இதனால் விடுமுறை நாட்களில் அதிகமான மக்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பேருந்துக்கான சுங்கக்கட்டணம் ரூ.250இல் இருந்து ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வேன்களுக்கான சுங்ககட்டணம் ரூ.80 ஆக இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஜீப், கார் உள்ளிட்டவற்றுக்கான சுங்கக்கட்டணம் ரூ.60ல் இருந்து ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் சுங்க கட்டணத்தை உயர்த்தி கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2026ம் ஆண்டில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் கீழ்
இல்லம் தேடி பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் துவக்கம்
சென்னை, ஜன. 3- தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜனவரி மாதத்தின் 4 (நாளை) மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
