‘‘ஜாதி, செல்வம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார் (28.12.2025). நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
‘‘நாக்பூரில் சிறிய ‘ஷாகா’வில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பணி, இப்போது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. மக்களை ஜாதி, செல்வம் அல்லது மொழியால் மதிப்பிடக் கூடாது. முழு நாடும் அனைவருக்கும் சொந்தமானது, இந்த உணர்வே உண்மையான சமூக நல்லிணக்கம் ஆகும்.
ஒருவரின் மனதில் இருக்கும் பாகுபாடு உணர்வுகளை அகற்றி, அனைவரையும் சொந்தமாக கருதுவதே நல்லிணக்கத்தை நோக்கிய முதல் படியாகும். குடும்பங்கள் வாரத்தில் ஒரு நாளையாவது உறுப்பினர்களுடன் ஒன்றாகச் செலவிட வேண்டும், பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும், வீட்டில் சமைத்த உணவை ஒன்றாகச் சாப்பிட வேண்டும்.
ஹிந்துக்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் ஒன்றிணைந்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 100 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி இந்த நிகழ்வு நடைபெற்றாலும்,. அந்த அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கம் இதில் இல்லை. 100 ஆண்டுகளை நிறைவு செய்வதென்பது ஒரு சாதனையோ அல்லது வீரத்திற்குரிய விஷயமோ அல்ல.
நாக்பூரில் ஒரு மைதானத்தில் ஒரு சிறிய கிளையாக தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பணியானது – இன்று நாடு முழுவதும் பரவி உள்ளது என்பதுதான் முக்கியம். காஷ்மீர் பள்ளத்தாக்கு, மிசோரம், அந்தமான், சிக்கிம், கட்ச் மற்றும் இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைக் காணலாம்.
இந்தியா எங்கு இருக்கிறதோ, அங்கெல்லாம் சங்கத்தின் பணியும், அதன் தொண்டர்களும் இருக்கிறார்கள். தனது வாழ்நாள் முழுவதையும் இந்த அமைப்பை உருவாக்குவதற்காக ஹெட்கேவர் அர்ப்பணித்ததால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.
அனைத்து வளங்களும், நீர் ஆதாரங்களும், கோயில்கள் மற்றும் மடங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களும், மத நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும், ஏன் மரணத்திற்குப் பிந்தைய இறுதிச் சடங்குகள் கூட அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை மற்றும் புரிதலின் மூலம் சாதிக்க முடிந்தால், அந்த வழியிலேயே செய்ய வேண்டும். மக்களை ஒன்றிணைப்பதைப் பற்றியது, அவர்களுக்கு எதிராகப் போராடுவது பற்றியது அல்ல என்பதால் எந்தவித வன்முறையும் இருக்கக்கூடாது.’’
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தப் பேச்சில் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும் உண்மைக்கு எதிரானவை மட்டுமல்ல; இதுவரை சொல்லி வந்த, சொல்லிக் கொண் டிருக்கிற செயல்படுத்திக் கொண்டிருக்கின்றவற்றிற்கு எல்லாம் எதிர் மாறானவை.
ராய்ப்பூரில் இப்படிப் பேசிய மோகன் பாகவத் மறுநாள் (29.12.2025) அய்தராபாத்தில் என்ன பேசுகிறார்? மீண்டும் ஒரு ‘விஸ்வகுருவாக’ மாறுவதற்குப் பாடுபட வேண்டும். ஸநாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்கான காலம் வந்து விட்டது என்று கதைக்கிறார். ஒரே நாளில் ஏனிந்த முரண்பாடு?
‘ராய்ப்பூரில் முதல் நாள் பேசியதுதான் உண்மை’ என்றால் –
‘எம்மதமும் சம்மதம் என்றால்’ பாபர் மசூதியை இடிப்பானேன்? திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால் தமிழ்நாட்டில் ஒரு அயோத்திக் கலவரத்தை உருவாக்கத் திட்டமிடுவானேன்?
இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுவது உண்மையானால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒன்றைத் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தட்டும்!
(1) இந்துமதத்தில் நிலவும் தீண்டாமை – அதன் மூல வேரான ஜாதியை ஒழிப்போம்!
(2) மனுஸ்மிருதி, கீதை உள்ளிட்ட – பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வருணத்தை வலியுறுத்தும் இந்துமத நூல்களை நிராகரிக்கிறோம் – அதன் அறிகுறியாக அவற்றை ஒரு பொது இடத்தில் கொளுத்துவோம்!
(3) இந்து மதக் கோயில்களில், இந்து மதத்தைச் சேர்ந்த –பயிற்சி பெற்ற எவரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்; ஒன்றிய பிஜேபி அரசின் மூலம் இவற்றை எல்லாம் சட்டப் பூர்வமாக்குவோம்.
(4) ‘‘பெண்கள் கணவனைவிட அதிகம் படித்து, அதிக சம்பளம் வாங்குவதால், கணவனை மதிப்பதில்லை; எனவே அத்தகைய பெண்களை விவகாரத்துசெய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தாகிய நான் சொன்ன கருத்தை வாபஸ் வாங்குகிறேன்’’ என்பதை அதிகாரப்பூர்வமாக மாநாடு கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கமாக அறிவிக்கட்டும்! சங்கராச்சாரியாராக இந்து மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் ஆகலாம் என்பது உள்பட அறிவிப்பதோடு,செயல்படுத்திக் காட்டிவிட்டு, அதற்குப்பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் ராய்ப்பூர் பேச்சை உறுதி செய்யட்டும் – செய்வாரா?
