தெலங்கானா மாநிலத்தில் சீரிய பகுத்தறிவாளரும், தீவிர பெரியார் பற்றாளருமான அய்தராபாத் ஜே.டி.தாமோதரன் அவர்கள் இன்று (2.1.2026) காலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் அதிர்ச்சியடைந்து வருந்துகிறோம். அவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவரும், மெட்ராஸ் மாகாணத்தின் மேனாள் முதலமைச்சருமான பொ.முனுசாமி (நாயுடு) அவர்களின் பேரனாவார்.
தந்தை பெரியாரைக் குறித்து தோழர் எழுத்தாளர் மஞ்சை.வசந்தன் எழுதி, நமது வெளியீடாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ள “இவர்தான் பெரியார்” என்ற நூலை ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட பல மொழிகளில் நம்முடைய அனுமதியோடு மொழிபெயர்த்து அவற்றைப் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்கிய பெருந்தகை ஆவார். மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் பெரியார் கருத்துகள் போய் சேர வேண்டும் என்பதிலும், குறிப்பாக தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தந்தை பெரியாரின் கொள்கைகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த முனைப்புக் காட்டி உழைத்தவர்.
நம் மீதும், இயக்கத்தின் மீதும் பெருமதிப்பும் கொண்டவர். திருச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் தந்தை பெரியாரின் எழுத்துகளை பல மொழிகளில் கொண்டு சேர்க்கும் பெருமக்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்ட போது, அதில் நமது தாமோதரன் அவர்களை முதன்மையாகச் சிறப்பிக்க வேண்டும் என்று விரும்பி அழைத்திருந்தோம். தனது உடல்நிலை காரணமாக அவரால் நேரில் வர இயலாவிட்டாலும் நம்முடைய அழைப்பினால் பெரிதும் மகிழ்ந்து தனது பணிக்கு அது மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது என்றும் பேருவகை கொண்டார். பெரியார் உலகம் அமைத்திடவும் தனது பங்களிப்பை நல்கிய கொடையாளர்.
அவருடைய மறைவு பெரியார் இயக்கத்திற்குப் பேரிழப்பாகும். எனினும் அவர் மேற்கொண்டப் பணிகளை தொடர்வதும், பெரியார் கருத்துகளை பல்வேறு இந்திய மொழிகளில் எடுத்துச் செல்வதும் அவருக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம் ஆகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.1.2026
