திருச்சி, ஜன.2 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதேபோல் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் பொங்கலுக்குப் பிறகு முக்கிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி முதல் மதுரை வரை
இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 12 நாட்கள் சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்கிறார். போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், அதேபோன்று தற்போது ஜாதிய மோதல்கள், மத மோதல்களை தமிழ்நாட்டில் உருவாக்கவும் சிலர் பார்க்கிறார்கள்.
அதைத் தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி 2026ஆம் ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைப்பயணம் செல்வதாகவும் வைகோ அறிவித்து இருந்தார்.
மேலும் இந்தப் பயணம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார். முன்னதாக திருச்சியில் இன்று (2.1.2026) நடைபெற்ற சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கி வைக்குமாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை.வைகோ அழைப்பிதழ் வழங்கினார்.
அதன்படி வைகோவின் சமத்துவ நடைப்பயண தொடக்க விழா இன்று திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி செழியன், மாவட்டஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மாநகர காவல்துறை ஆணையர் காமினி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
முதலமைச்சர் ‘ரோடு ஷோ’
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நடைப்பயண தொடக்க விழா நடைபெற்ற தென்னூர் உழவர்சந்தை வரை வாகனத்தில் நின்றவாறு (ரோடு-ஷோ) சென்று மக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு இருந்தன. அங்கு காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களிடம் கைகுலுக்கியும், செல்பியும் எடுத்துக் கொண்டமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
9 கிலோ மீட்டர் தூரத்துக்குக் காரில் பயணித்தும், நடந்து சென்றும் மக்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று 200 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.
இதையடுத்து நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைப்பயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
பல்வேறு கட்சி முன்னணியினர் பங்கேற்பு
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் சுரேஷ், சிவா, திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோ நடைப்பயணத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதையடுத்து நடைப்பயணத்தை தொடங்கிய வைகோ, அங்கிருந்து அண்ணா நகர் கோர்ட்டு ரோடு, மேஜர் சரவணன் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம், கிராப்பட்டி மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் சென்று முதல் நாள் பயணத்தை முடித்து அங்குள்ள தனியார் அரங்கில் தங்குகிறார்.
இந்த நடைபயணம் வருகிற 12 ஆம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் வாகனங்களில் வந்து தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
