யார் வேட்பாளர்?
மோதலில் வேட்புமனுவை கிழித்து விழுங்கிய சிவசேனா பிரமுகர்!
மும்பை, ஜன.2 மகாராட்டிரா மாநிலத்தில் 2-ஆவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ஆம் தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின் 34-ஆவது வார்டுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலே ஆகியோர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்க ஏ, பி விண்ணப்பங்களை வழங்கும். இந்த இருவருக்கும் அந்த வார்டில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப கடிதத்தை சிவசேனா கட்சி வழங்கி இருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலின்போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடைேய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உத்தவ் காம்ப்ளே ஆத்திரமடைந்து மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி வழங்கிய அங்கீகார விண்ணப்ப கடிதத்தை பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா வேட்பாளர் உத்தவ் காம்ப்ளே மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, தேர்தல் பணியின் போது அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
செங்கல்பட்டில் உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
4ஆம் தேதி நடக்கிறது
செங்கல்பட்டு, ஜன.2 இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக் கல்லூரி பொன்விழா (Golden Jubilee) முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், உடல் உறுப்பு கொடை குறித்த மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஜனவரி 4-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக, ‘க்யூ ஆர்’ (QR Code) குறியீடு மூலம் உடல் உறுப்பு கொடையை பதிவு செய்யும் முயற்சி இந்நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாரத்தான் நிறைவு நிகழ்ச்சியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. தொடக்க விழாவில், தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா சுகுணசீலி, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் லட்சுமி நம்பியார், செங்கல்பட்டு நகராட்சித் தலைவர் தேன்மொழி நரேந்திரன், காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாரத்தான் ஓட்டத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பிரியா பசுபதி தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஆண்டு ரயில்வே விதிமுறைகளை மீறிய
50 ஆயிரம் பேர் கைது: ரூ.2 கோடி அபராதம்
தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை

சென்னை, ஜன.2 தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனைகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 50,949 கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 50,486 பேர். வசூலிக்கப்பட்ட மொத்த அபராதம்: ரூ.2,09,00,000
(2 கோடியே 9 லட்சம் ரூபாய்).
ரயில்வே சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பின்வரும் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில்களின் படிக்கட்டுகளில் (Footboard) தொங்கிய படி பயணம் செய்தல் மற்றும் மேற்கூரையில் (Roof) ஏறி பயணம் செய்தல்.
முறையான நடை மேம்பாலங்களைப் பயன்படுத்தாமல் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து செல்வது.
ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் ரயில்களில் குப்பைகளை எறிவது மற்றும் அசுத்தம் செய்வது.
பொதுமக்களை ஏமாற்றி அதிக விலைக்கு பயணச் சீட்டுகளை விற்கும் சட்டவிரோத ஏஜெண்டுகள் மீதான கைது நடவடிக்கைகள்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தண்டவாளங்களை கடப்பதும், படிக்கட்டுகளில் பயணம் செய்வதும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதால், பயணிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
