புதுடில்லி, ஜன.2 மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகளை நியமித்துக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி பிரசாந்த் மோஹிதே தேரேவை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி சங்கம் குமார் சாகுவைப் பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.
ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இருவரையும் தலைமை நீதிபதிகளாக நியமித்துக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கோமா நிலையில் இருக்கும் கணவரின் மனைவிக்கு வங்கிக் கணக்குகளை நிர்வாகம் செய்யும் உரிமை உண்டு
டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.2- கோமா நிலையில் இருக்கும் கணவருக்கு மனைவியே பாதுகாவலர் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோமா நிலையில் கணவர்
டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண் தாக்கல் செய்த மனு வில், ‘கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எனது கணவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால், தொடர்ச்சியாக சுய நினைவற்ற நிலையில்(கோமா) உள்ளார். கணவரின் மருத்துவத் தேவைகளையும் செலவுகளையும் நிர்வகிப்பதற்காக, அவரது அசையா மற்றும் அசையும் சொத்துகள் தொடர்பான அனைத்து விசயங்களிலும் கணவருக்குப் பாதுகாவலராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்கை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து வந்தார்.
பாதுகாவலராக நியமனம்
நேற்று (1.1.2026) இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், ‘மனுதாரரின் கணவர் எந்தவொரு சுயாதீனமான முடிவுகளையும் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத கோமா நிலையில் இருக்கிறார். மருத்துவ அறிக்கையின்படி, அவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது நலனுக்காக, ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிப்பது அவசியமாகிறது.
தாயை பாதுகாவலராக நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அந்த இணையர்களின் இரு குழந்தைகளும் பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
எனவே, மனுதாரரின் கணவர் மருத்துவக் கோளாறு காரணமாக சுயநினைவற்ற நிலையில் இருப்பதால் அவரது மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது’ என கூறி உள்ளார்.
