புதுடில்லி, ஜன.1 பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்த, இந்தியா – பாகிஸ்தான் இடையே நடு நிலையில் நின்று சமாதானம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ நேற்று (31.12.2025) அளித்த பேட்டியில், “இந்த ஆண்டில் சீனா தலையிட்ட முக்கிய விஷயங்களின் பட்டியலில் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமும் ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ (X) தளத்தில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடுநிலையில் நின்று சமாதானம் செய்து நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் கூறிவரும் நிலையில், அதேபோன்ற கருத்தை சீன வெளியுறவுத் துறை அமைச்சரும் கூறியுள்ளார். இது நாட்டின் பாதுகாப்பைக் கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.
அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் சீனா தொடர்ந்து எதிராகச் செயல்படுகிறது. இதுபோன்ற சூழலில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் சீனா ஆற்றிய பங்கு என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
401 ஆண்டு கால கடித சேவையை நிறுத்திய டென்மார்க்
கோபன்ஹேகன், ஜன.1 உலகில் முதல் நாடாக டென்மார்க், கடித விநியோக சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
அய்ரோப்பிய நாடான டென்மார்க்கில், 1624ஆம் ஆண்டு முதல் அஞ்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் இதனை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது. டென்மார்க்கில் 2000ஆம் ஆண்டு முதல் கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை, 90 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் 401 ஆண்டுகள் பழமையான இந்த கடித சேவையை அந்நாட்டின் போஸ்ட்நோர்ட் அஞ்சல் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1,500 சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றில் பல ஏலத்தில் விற்கப்பட்டு, அந்த நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடித விநியோகம் நேற்றுடன் (31.12.2025) நிறுத்தப்பட்ட நிலை யில், பார்சல் விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
