சென்னை, ஜன.1 மாதவரம், மணலி ஏரிகளை தூர்வாரி, சுத்தப் படுத்தி, புதுப்பிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
மாதவரம் ஏரி
குறிப்பாக 66 ஏக்கர் பரப்பளவிலான மாதவரம் ஏரியில் 4.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 மீட்டர் தூரத்திற்கான நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர், கழிப்பறை வசதிகள், பைப் லைன் உள்ளிட்ட வசதிகள் முதற்கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,600 மீட்டர் தூரத்திற்கான கூடுதல் நடைபாதை, மின்விளக்குகள் அமைத்தல், பூச்செடிகள் அமைத்தல், அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. வெட்டிவேரானது மண் அரிப்பை தடுக்கும் இயற்கை அரணாக விளங்கும் என்பதால் மாதவரம் ஏரிக்கரைகளில் வெட்டி வேர்கள் நடப்பட்டுள்ளன.
மாதவரம் ஏரியில் ஏற்ெகனவே 750 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 1650 மீட்டர் தூரத்திற்கு கூடுதல் நடைபாதை அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் 2.3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை வசதியை பெறுவார்கள். பார்க்கிங் வசதிகள், கழிப்பறைகள், காத்திருப்பு மய்யங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
மணலி ஏரி
இதேபோல மணலி ஏரியானது 29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாதவரம் ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் மணலி ஏரியை அடைகிறது. அங்கும் ஏரியை சீரமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 95 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நடைபாதை அமைக்கும் பணிகள் அடுத்த இரண்டு வாரங்களில் முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மணலி ஏரியில் 11.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
படகு குழாம்
இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் படகு குழாம் அமைப்பதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் பொங்கல் விடுமுறைக்குள் மாதவரத்தில் ‘ஜெட் ஸ்கை’ உள்ளிட்ட அதிவேக படகு சேவைகளை அளிக்கும் வகையில் படகு குழாம் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சென்னையில் ‘ஜெட் ஸ்கை’ என்ற அதிவேக படகு சேவை கிடைக்கும் முதல் ஏரியாக மாதவரம் ஏரி மாற உள்ளது..
மாதவரம் படகு குழாமிற்கு படகுகள் வாங்குவது, நுழைவுக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பங்கேற்று ஏரியில் மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டு சென்றார்.
படகுகள், கட்டண நிர்ணயம்
மாதவரம் ஏரியில் மொத்தம் உள்ள 66 ஏக்கரில் படகு சேவைகளுக்காக 30 ஏக்கர் பரப்பளவிற்கு ஆழப்படுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏரிகளில் கழிவு நீர் உள்ளே போகாமல் தடுப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளன.மாதவரம் ஏரியில் படகு குழாம் சேவை தொடங்கப்படுவது வடசென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் விடுமுறைக்குள் படகுகள் வாங்கப்பட்டு மாதவரம் படகு குழாமில் படகு சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எர்ணாவூர் ஏரியிலும் படகு சேவை தொடங்கப்படலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
