சென்னை, டிச.31- அரசு ஊழியா்கள் முன்வைத்து வரும் பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம் குறித்து மூத்த அய்ஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட மூவா் குழு தனது இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (30.12.2025) சமா்ப்பித்தது.
இந்த அறிக்கையின் அடிப் படையில் முதலமைச்சர் விரைவில் பழைய ஓய்வூதிய விவகாரத்தில் அரசின் முடிவு குறித்த அறிவிப்பை வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணிகளில் சோ்ந்தவா் களுக்கும், பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்களை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கத்தினா் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், பழைய ஓய்வூதியத் திட்ட அமல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கத்தினா் ஜன. 6-ஆம் தேதிமுதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் அமைச்சா்களுடன் கடந்த டிச. 22-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அவா்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் பொங்கல் விழாவிற்கு முன்பு நல்ல அறிவிப்பை வெளியிடுவாா் என்று அமைச்சா்கள் தெரிவித்ததாக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க, மூத்த அய்ஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் மூவா் குழுவை தமிழ்நாடு அரசு கடந்த பிப்ரவரி மாதம் அமைத்தது. இந்தக் குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதலமைச்சரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு
Leave a Comment
