‘‘எண்ணிக்கை தெரியாது, தெரியாது, தெரியாது’’
பாணன்
2025ஆம் ஆண்டு இந்திய மக்களுக்கு மிகவும் பரிதாபகரமான ஆண்டாகவே இருந்தது.
கொடூரமான உயிரிழப்புகள் குறித்த எந்த ஒரு செய்தியும் மக்களைச் சென்றடையவில்லை. இந்த விபத்துகள் எங்கோ ஒரு மூலையில் நடந்தவை அல்ல; உலகத்தின் கண்முன்னே நடந்தவை.
முதலில் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி எட்டாம் தேதி திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நுழைவுச்சீட்டு வாங்க நடந்த கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் மரணம் என்று நேரடி யாகப் பார்த்தவர்கள் சமூகவலைதளத்தில் கூறினார்கள்.
ஆனால், கோவில் நிர்வாகம், ‘‘இறந்தவர்கள் வெறும் 8 பேர் தான்; மற்றவர்கள் பல்வேறு உடல் உபாதைகளில் இறந்திருப்பார்கள். அதை எல்லாம் கணக்கில் சேர்க்க முடியாது’’ என்று கூறிவிட்டது.
கும்பமேளா
ஜனவரி 26 அன்று ‘‘அமிருதம் வானில் இருந்து விழுகிறது எல்லோரும் ஓடிச்சென்று குளியுங்கள்’’ என்று ஒலிப்பெருக்கியில் எவனோ ஒரு சாமியார் கூற, திரிவேணி சங்கமத்தில் உட்கார்ந்திருந்த கூட்டத்தின்மீது ஒட்டுமொத்த கும்பமேளா கூட்டமும் மிதித்துக் கொண்டு ஓட, இந்த நெரிசலில் இறந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்று பிபிசி ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டது.
ஆனால் சாமியார் முதலமைச்சர் வெறும் 31 நபர் மட்டுமே இறந்ததாகக்கூறி, அதன் பிறகு ‘‘இது தொடர்பாக யாரும் பேசினால் தேசப்பாதுகாப்பு பிரிவின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள்’’ என்று உ.பி. சட்டப்பேரவையில் கூறினார்.
இன்றுவரை அங்கே இறந்தவர்கள் குறித்த ஒரு செய்தி கூட வரவில்லை. இத்தனைக்கும் பல குப்பை வண்டிகளில் உடல்கள் புல்டோசர்கள் கொண்டு அள்ளப்படுவதை நேரலையில் பார்த்த போதும் இந்தியர்கள் ஏனோ மவுனம் சாதித்தனர்.
பிப்ரவரி 15 அன்று தலைநகர் டில்லி ரயில் நிலையத்தில் இருந்து அலகாபாத் செல்லும் ரயில் தொடர்பாக யாரோ இலவச ரயில் என்று புரளி கிளப்பிவிட ஒட்டுமொத்தமாக அந்த ரயிலைப் பிடிக்கக் கூட்டம் ஓடியது.
விளைவு ––- 15ஆம் எண் நடைமேடையில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதித்து ஏராளமானோர் உயிரிழந்தனர். டில்லி அரசு மிகக் குறைவாகக் (13 பேர்) கணக்குக் காட்டியது.

ஆனால், குறைந்த பட்சம் 50க்கும் மேற்பட்ட வர்கள் ‘எங்களின் உறவுகளை இழந்து விட்டோம்’ என்று ரயில் நிலையம் முன்பு அழுது புரண்டனர்.
ரயில்வே நிர்வாகமோ அனைவரையும் அழைத்து கையில் ஒரு தொகையைக் கொடுத்து அனுப்பியது. நிவாரணத் தொகையை அரசு காசோலைகளாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது, எவ்வளவு தொகை கையில் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? இந்தக் கேள்விக்கான விடை இதுவரை இல்லை.
மே மாதம் 8 ஆம் தேதி கோவாவில் உள்ள சிறிலைராய் தேவி கோயில் திருவிழாவில் நெரிசல் ஏற்பட்டு 20 பேர் இறந்தார்கள் என்று முதலில் செய்தி வந்தது. பிறகு ‘6 பேர் மட்டுமே’ என்று கூறி முடித்து விட்டார்கள்.
ஜூன் மாதம் அகமதாபாத் விமான விபத்து: ‘‘உலகில் இதுவரை இப்படி ஒரு விபத்து நடக்கவில்லை. இது விபத்து அல்ல என்று பன்னாட்டு விமான விபத்து தொடர்பான ஆய்வு நிறுவனம் தொடர்ந்து கூறி, நாங்கள் வந்து ஆய்வு செய்யவேண்டும்’’ என்று கூறிய பிறகும் ஒன்றிய அரசு அது எல்லாம் தேவையில்லை என்று கூறிவிட்டது.
இன்றுவரை விமானம் எப்படி விபத்திற் குள்ளானது என்று யாருக்குமே தெரியவில்லை. விமான விபத்தில் ஒட்டுமொத்த நபர்களும் எலும்பும் கரியுமாகக் கிடந்த நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே ‘‘நான் குதித்துத் தப்பித்தேன்’’ என்று விபத்துப் பகுதியில் இருந்து வெளியே வந்து கூறினார். அதையும் இந்தியர்கள் நம்பினார்கள். ஆனால் லண்டனைச்சேர்ந்த விபத்து தொடர்பான ஆய்வு நடத்தும் நிறுவனம், ‘ஒருவர் மட்டும் உயிர்ப்பிழைக்க வாய்ப்பே இல்லை’ என்று கூறியது மேலும் அந்த நபரை நாங்கள் விசாரிக்கவேண்டும் என்றது.

உடனே அந்த நிறுவனத்தின் இந்திய நபர்களின் விசாவை ரத்து செய்து விடுதிகளில் தங்கிருந்தவர்களை இரவோடு இரவாக லண்டனுக்கு செல்ல வைத்தார்கள் என்று ‘மும்பை மிரர்’ மிகவும் சிறிய செய்தி ஒன்றை வெளியிட்டது.
விமான விபத்தில் இறந்தவர்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ராம்னிக்லால் ரூபானி முக்கியமானவர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜூலை 24 அன்று அரித்துவார் மான்ஸா தேவி கோவிலில் ‘இலவசமாக போர்வை தரு கிறார்கள்’ என்று யாரோ புரளி கிளப்பிவிட குறுகலான படிகளில் பலர் நெருக்கியடித்து முந்திச் செல்ல முயல, அதில் மிதிபட்டு 17 பேர் இறந்தனர். ஆனால் இறுதிச் செய்தியாக வெறும் 6 பேர் மட்டுமே என்று முடித்துவிட்டனர்.
நவம்பர் 1 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சிறீகாகுளத்தில் உள்ள தனியார் வெங்கடேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் மரணம் என்று அரசு சார்பாக செய்தி வந்தது. ஆனால் உள்ளூர் நாளிதழ்கள் 19 பேர் என்று எழுதின.
உண்மையில், விபத்தால் மரணமடைந்தவர் களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு கொடுக்கும். ஆனால், மரணத்தை மறைந்து விட்டால் இழப்பீடு கொடுக்கத் தேவையில்லை, அல்லது இறந்தவர்கள் பெயரில் பணத்தைச் சுருட்டும் வேலை இந்த ஆண்டு முழுவதும் நடந்துள்ளது.
இவை அனைத்தும் மக்களின் கண்களுக்கு முன்பாகவே நடந்துள்ளது.
அவர்கள் நம்பிய கடவுளும் காப்பாற்றவில்லை. அரசும் கைவிரித்து விட்டது.
ஆபரேசன் சிந்தூரில் எத்தனை இந்திய விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப் பட்டன என்ற பதிலை இதுவரை யாருமே கூறவில்லை. அப்படி சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்ன? அவர்களுக்கு இந்திய அரசு வீரதீரப் பட்டம் கொடுத்ததா என்றால் அதற்கும் பதில் இல்லை.
விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர்தான் கூறினார்! இங்குள்ள ஒருவர்கூட வாயைத் திறக்கவில்லை.
எல்ேலாரும் கண்டும் காணாத மூடு முகமாகவே உள்ளனர்.
