பாதிக்கப்பட்ட பெண் சூளுரை
உன்னாவ், டிச.31 உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்ற போது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர் வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டில்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, பிணை வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றம் முன் மகளிர் அமைப்பினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.அய். மேல்முறையீடு செய்தது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்யப் பட்டது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண், உச்சநீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு அங்கு நீதி கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், சி.பி.அய்.யின் மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதி மன்றத்தில் 29.12.2025 அன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, உன்னாவ் தொகுதி பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாதிக்கப் பட்ட பெண் வர வேற்றுள்ளார். மேலும், குற்ற வாளியான மேனாள் சட்டமன்ற உறுப்பினர் செங் காருக்கு மரண தண்டனை கிடைக்கும் வரை ஓய மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:-
இந்த முடிவால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் இருந்து நீதியை பெற்றுள்ளேன். தொடக்கத்தில் இருந்தே நீதிக்காக நான் எனது குரலை உயர்த்தி வந்தேன். எந்த நீதி மன்றத்தின் மீதும் நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. நான் அனைத்து நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். அதனால், உச்சநீதி மன்றம் எனக்கு நீதி வழங்கியுள்ளது. தொடர்ந்து அவ்வாறு செய்யும்.
செங்காருக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். நான் தொடர்ந்து போராடுவேன். அப்போதுதான் எனக்கும் என் குடும்பத்திற்கும் நீதி கிடைக்கும். தற்போதும் எங்களுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தெரி வித்துள்ளார்.
