தந்தை பெரியார் அவர்களின் காலத்திற்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? கலையுமா? என்றவர்கள் மத்தியில் இந்த இயக்கத்தை கட்டிக் காத்து, உலகத்திலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய வீராங்கனையாக, கொள்கை வீராங்கனையாகத் திகழ்ந்தவர் அன்னை மணியம்மையார்.
இன்னும் சொல்லப் போனால் ‘இராவண லீலா’ நடத்தி இந்தியாவையே உலுக்கியவர், ஏன் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார் அன்னை மணியம்மையார்.
‘‘அய்யா அவர்கள் மறைந்து விட்டதைஎண்ணிப் பல தலைவர்கள் ‘இனி பார்ப்பனரல்லாத மக்களின் நிலை என்ன?’ என்று வேதனைப்படுகிறார்கள், புலம்பி நிற்கிறார்கள். அதே நேரத்தில் புத்தன், இராவணன், இரணியன் போன்றவர்களை எல்லாம் ஒழித்து விட்டோம். இந்த இராமசாமிப் பெரியாரை ஒழிக்க முடியவில்லையே என்று ஏக்கமிட்டுக் கொண்டு இருந்த ஆரியம் இன்றைக்கு ‘ஒழிந்தாரே அவர்’ என்ற நிம்மதி மூச்சு விடலாம். அந்த நிம்மதியைக் குலைப்பதுதான் நம் லட்சியம் – அதுதான் நமது சேவையும்’’ என்று முழங்கியவர் அன்னை மணியம்மையார்.
அன்னையார் நடத்திய போராட்டங்கள்
பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் உரிமைக்காக ஒன்றிய அமைச்சர் ஒய்.பி. சவான் அவர்கள் தமிழ்நாடு வந்தபோது கருப்புக்கொடிப் போராட்டம் நடத்தியவர் அன்னை மணியம்மையார். அது மட்டுமா? தமிழ்நாடு முழுவதும் இதற்காக அஞ்சல் நிலையங்களுக்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்தியவரும் நம் அன்னையார்.
‘‘இந்திய அரசு இராம லீலா விழாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற முக்கியமானவர்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது. இந்திய அரசாங்கத்தின் கொள்கை மதச் சார்பின்மையாகும். அரசாங்கத்தின் கொள்கை மதச்சார்பின்மை என்று இருக்கையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்துகொள்வது மதச் சார்பின்மைக் கொள்கையையே கேலி செய்வதாகும்.’’ என்று கண்டித்தார் அன்னையார்.
இராம லீலாவுக்கு எதிராக இராவண லீலா
‘‘நீங்கள் இராம லீலாவைத் தடை செய்யாவிட்டால் நாங்கள் இராவண லீலாவை நடத்துவோம்’’ என்றார் அன்னை மணியம்மையார்.
இராமாயணம் என்பது ஆரியர் – திராவிடர் போராட்டம் என்றும், இராமாயணத்தில் சொல்லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் திராவிடர்களைத்தான் குறிக்கிறது என்றும் சொன்னவர்கள் திராவிடர் கழகத்தார் அல்ல. பண்டித ஜவஹர்லால் நேரு, விவேகானந்தர், பி.டி.சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்கள்தான் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்கள்.
எனவே ஓர் இனத்தை இழிவுபடுத்தும்விதமாக திராவிட இனத்தை அழிக்கும் கருத்தமைந்த ஒரு செயல் – விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதை நாகரிக சமுதாயம் ஒரு போதும் ஏற்காது.
எனவே பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கும், குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுக்கும் கடிதம் எழுதி அறிவித்து விட்டு ‘இராவண லீலா’வை மிகச் சிறப்பாக நம்முடைய இதே பெரியார் திடலில் நடத்திக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.
அன்னை மணியம்மையார் நடத்திய போராட்டங்களில் இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் முக்கியமானது. காரணம் அவசர நிலைக் காலத்தில் தமிழ்நாடு அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. ‘தமிழ்நாடு ஒழுங்கற்ற தனித் தீவு’ என வர்ணித்துத் ‘தேசிய நீரோட்டத்துடன் இணைக்கிறேன்’ என்ற பெயரால் பார்ப்பன ஆலோசர்கள் ஆர்.வி. சுப்பிரமணியம், தவே (குஜராத்திப் பார்ப்பனர்) ஆகியோரைக் கொண்டு நடத்தப்பட்ட தமிழர் ஒழிப்புக் காரியங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஒம் மேத்தா என்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ‘தி.மு.க., தி.க. ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும்’ என்றார்.
அம்மா அவர்கள் ஆளுநர் மாளிகையில் உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி அவர்களை சந்தித்தார். அவர் காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவர். இந்திய உள்துறை அமைச்சராக மட்டுமல்லாமல் பல பொறுப்பு வகித்தவர். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி டிஸ்மிஸ் செயயப்பட்டதும், திராவிடமுன்னேற்றக் கழகத் தோழர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதும் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயங்களாகும். கழகத் தொண்டர்கள் சிறையில் படும் இன்னல்களைக் குறிப்பிட்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு அவரிடம் அம்மா வேண்டிக் கொண்டார். அப்போது பிரம்மானந்த ரெட்டி, ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள். உங்கள் இயக்கத் தோழர்களை விடுதலை செய்வதற்கு ஆவன செய்கிறேன்’’ என்று சொன்ன மறுநிமிடமே, இருக்கையிலிருந்து எழுந்து ‘‘நான் உள்பட எங்கள் தொண்டர்கள் அவ்வளவு பேரும் இறந்தாலும் இறப்போமே தவிர, ஒருபோதும் தந்தை பெரியாரின் கொள்கையைவிட மாட்டோம்’’ என்றார் மணியம்மையார்.
அன்னை மணியம்மையார் துணிச்சல் மிக்கவர்
அம்மா அவர்கள் தலைமை ஏற்ற காலத்தில் நம் இயக்க வழமைப்படி கண்டிக்க வேண்டியதைக் கண்டிப்பதோடு பாராட்ட வேண்டியதைத் தவறாமல் பாராட்டியும் வந்தவர்கள்.
தி.மு.க. ஆட்சியில் கும்பகோணத்தில் நடந்த குட முழக்கில் அமைச்சர்கள் கலந்துகொள்வதைக் குறித்து ‘விடுதலை’ தலையங்கம் எழுதி கண்டிக்கத் தவறவில்லை.
‘‘யார் ஆளுகிறார்கள் என்பதைவிட எப்படி ஆளுகிறார்கள் என்பதே நமக்கு முக்கியம். அதனால்தான் நமது கழகத்துக்கென்று தனி மரியாதை நாட்டில் இருந்து வருகிறது’’ என்றுசொன்ன துணிச்சல் மிக்கத் தலைவர் அன்னை மணியம்மையார்.
தந்தை பெரியார் அவர்களின் காலத்திற்குப் பிறகு பல போராட்டங்களை நடத்தி இந்த இயக்கத்தை தலைநிமிரச் செய்தவர் அன்னை மணியம்மையார். அதே நேரத்தில் இனமானத் தீப்பந்தப் பேரொளியாய் வாழ்ந்தவர். அன்னை மணியம்மையாரின் ஆக்கப்பணிகள் இன்னும் ஏராளம்! ஏராளம்!!
வாழ்க அன்னை மணியம்மையார்.
தமிழர் தலைவர் பிறந்தநாள் கருத்தரங்கில் கழகச் செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி ஆற்றிய உரை (சென்னை, 1.12.2025)
