புதுடில்லி, டிச.30 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்கூராய்வு அறிக்கை அனுப்பிய சம்பவத்தில் மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கான்பூரில் பிரபல ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் ஹாலெட் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. வார்டு எண் 12-இல் உள்ள படுக்கை எண் 42-இல் ஒரு அடையாளம் தெரியாத நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அந்த நபர் கடந்த 27.12.2025 அன்று உயிரிழந்தார். இவரது உடலை கூராய்வு செய்து காவல் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டி இருந்தது.
இந்நிலையில், அந்த நபரின் உடலை உடற் கூராய்வு ஆய்வறிக்கைக்கு பதிலாக அருகிலிருந்த படுக்கை எண் 43-இல் இருந்தவரின் பெயரில் அறிக்கை அனுப்பி உள்ளனர். படுக்கை எண் 43-இல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர் வினோத் குமார். இவர் இறந்துபோனவருக்கு ஒத்த வயதுள்ளவர். இவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர். வினோத் குமார், உயிருடன் இருந்தபோதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு உடற்கூராய்வு செய்து காவல்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அப்போது, பணியில் இருந்த ஒரு மருத்துவர் மற்றும் 2 ஊழியர்களின் அவசரத்தால் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாதக் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சஞ்சய் கலா, உடனடியாக இளநிலை மருத்துவர் ஹிமான்ஷு மவுரியா, செவிலியர் சன்னி சோன்கர் மற்றும் வார்டு உதவியாளர் ரஹ்னுமா ஆகியோரை பணியிடைநீக்கம் செய்தார்.
எஸ்.அய்.ஆர். பெயரில் துன்புறுத்தல்
மேற்கு வங்கத்தில் 50 பேர் உயிரிழப்பு
மம்தா தகவல்
கொல்கத்தா, டிச.30 கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா எஸ்.அய்.ஆர் என்ற பெயரில் பொதுமக்களுக்கு ஒன்றிய அரசு பெரும் துன்பத்தை கொடுக் கிறார்கள். இதுவரை மேற்குவங்கத்தில் 50 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற பகிர் தகவலை தெரிவித்தார்
மேற்குவங்கத்தில் புதிய கலாச்சார மய்யம் கட்டப்படுகிறது. இந்த மய்யத்துக்கு முதலமைச்சர் மம்தா அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது: நான் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது முற்றிலும் தவறு. நான் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறேன். அனைத்து மதங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறேன். கோயில், குருத்வாரா, கிறிஸ்தவ கோயில் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செல்கிறேன். ஆனால் முஸ்லிம் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பதாக சிலர் விமர்சிக்கின்றனர்.
மதச்சார்பின்மை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றுவேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) என்ற பெயரில் மேற்குவங்க மக்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். எஸ்அய்ஆர் பணியால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
